நாம் பெற்றுவளர்த்த பிள்ளைகள் வேறு,  அவர்கள் வாழ்ந்து வரும் சூழ்நிலைகளும் வேறுபட்டு விட்டதால்  நமக்கும்  அவர்களுக்கும்  ஒத்துவருவதில்லை. அவர்கள் வளரும்போதே நாமும் நம்மை அறியாமலேயே அவர்களைக் சுற்றி ஒரு வகையான எண்ணங்களையும் வளர்த்து விடுகிறோம். குழந்தைகளுக்கு நல்ல எண்ணங்களை வளர்த்து விட எண்ணுகிறோம்.  ஆனால்  நாம் போதித்தவைகளை  நாமே கடைபிடிக்காவிடில் நாம் போதித்தது வீணாகி விடுகிறது, என்பது நிஜம்.

நாம் நம் செல்வங்களுக்கு,  என்னவெல்லாம்  கற்றுக்கொடுத்தோமோ,  அவைகளை நாம் நடைமுறையில்  கடைபிடிக்கிறோமா என்பதும்  மிகவும் முக்கியமான விஷயம்,  ஏனெனில் நாம்  கற்றுக்கொடுத்தவைகளை நாமே அமல்படுத்தாமலிருந்து விட்டால் நம் பிள்ளைகளின் பார்வையில் இருந்து  விழுந்துவிடும்  நிலைக்கு வந்துவிடுகிறோம்.  எப்பேற்பட்ட நல்ல பசங்களாக வளர்ந்திருந்தாலும் நம்மை குறைவாகத்தான் மதிப்பிடுவார்கள்.  ஆகையினால்  ஆசானாகிறது அத்தனை சுலபமில்லை.  புத்திர செல்வங்கள், வளரும் பருவத்தில்,  பலதரப்பட்ட மனிதர்களுடைய    வளர்கிறார்கள்.  ஏதோ ஒரு மரியாதையினால் பெற்றோர் பேச்சைக்கேட்டுக் கொண்டிருக்கும்  காலம் எப்போதுமே இருக்காது என்பதை நம் மனதில் வைத்துக்கொண்டு செயல் படவேண்டும்.

எல்லோருக்குமே அவரவர் தாங்கள்  நல்லதையே  செய்வதாகவும், மிகவும் சரியான முறையில் செய்வதாகவும்தான்  நினைத்துக்கொண்டு  செய்கிறோம்.  அதன் பக்கவிளைவுகளை பற்றி அதிகமாக யோசியாமல் செய்தால்  நாமே பலியாக வேண்டி  வந்து விடும் என்பதில் சந்தேகமேயில்லை.