பிராப்தம் என்ற வார்த்தைக்கு இத்தனை மகத்துவம் இருக்கும் என்று நான் நினைத்ததே கிடையாது. வீடு என்று வாங்கலாம் என்று என் கணவரும் நானும், இரு தரப்பு பெற்றோரிடமும் ஆசீர்வாதம் பெற்று வரலாம் என்று போன போது, என் அப்பா சொன்னார்,பிராப்தம் இருந்தால் உடனுக்குடன் வீடு வாங்கி விடுவீர்கள் என்றார், மாமனார் சொன்னார், உங்களுக்கு சொந்தவீட்டில் இருக்கப் பிராப்தம் இருந்தால், தானாகவே தேடி வரும் சான்ஸ் என்றுகூறி விட்டு, தன் வாழ்க்கையில் அவருக்கு வீட்டு பிராப்தமே இல்லாமலே போயிற்று. என்று முடித்தார். நான்கு வருடங்கள் உருண்டோடி விட்டன. வீட்டைப்பற்றிய நினைவு மறைந்து வரும் தருவாயில் ஒரு சினேகிதி போனில் கூப்பிட மனதில் மறுபடி வீட்டைப்பற்றிய உத்வேகம் பற்றிக்கொண்டு விட்டது, சிநேகிதியின் போன் அழைப்பினால்.

என் சிநேகிதியின் உறவினர் குடும்பம் வெளிநாட்டில் குடியேறப்போவதால் வீட்டை விற்கப்போவதாக செய்தியை என் காதில் போட்டாள். நான் என்னுடைய ஆவலை அடக்கிக்கொண்டு ரொம்ப அமைதியாக கணவரின் காதில் ஓதினேன். ஏனென்றால் பெண்கள் உற்சாகமாக எதையாவது சொல்லப்போனால் ஆண்கள் எப்படி முட்டுக்கட்டை போட்டு விடலாம் என்று கங்கணம் கட்டிக்கொண்டு காத்திருப்பார்கள் என்ற உண்மையை நான் அனுபவபூர்ணமாக அனுபவித்திருக்கிறேன். உங்களுக்கு அவசியம் என்று தோன்றினால் நாம் போய் பார்க்கலாம் என்று பட்டும்படாதபடி கூறினேன். மனது அலை பாய்கிறது.

பார்ப்பதற்கு காசு பணமா செலவு? கிளம்பு, என்று சொன்னவுடன், ஓடினேன் பிராப்தத்தை நோக்கி.

வீடு பாழடைந்து கிடந்தது. வீட்டை கவனிக்கவே டயமில்லாமல் வெளிநாட்டுக்கு போகும் வேலையில் மூழ்கியிருந்திருக்கிறார்கள் போலிருக்கிறது. வீட்டைச்சுற்றிலும் செடி, கொடிகள் படர்ந்து  கிடந்தன. உள்ளே நுழைந்தால் குகைக்குள் வந்தாற்போல் மனதுக்குள் ஒரு கலக்கம். பாத்ரூம் சிதைந்து கிடந்தது. கடைசியாகப் பார்த்தால் உப்பு நீர், குடிநீர் காசுக்கு வாங்க வேண்டி வரும். கணவரின் காதில் உப்புத்தண்ணீராயிருக்கே என்றவுடன், இப்பதான் பிள்ளையார் சுழி போட்டிருக்கிறோம், பார்க்கலாம் என்று கூறி விட்டார்.

அடுத்தவாரம் நல்ல நல்ல புரோக்கர்கள் மூலம் வீடுகள் பார்த்தோம். நல்ல, நல்ல புரோக்கர்கள் வீடுகளின் புகழ் பாடி, பாடி எங்கள் மண்டையை குழப்பி விட்டார்கள். எங்கள் செல்வங்கள்அவரவர் சிநேகிதர்களின் வீடுகளின் புகழ் பாடி மண்டையை கலக்கினார்கள்.

நம் வீடு என்றில்லாதபோது யாருடையவீடோ எப்படியிருந்தால் என்ன, எனக்கென்று கிடைக்கும் வீடு எப்படியிருக்குமோ என்ற கவலைதான் எனக்கு, அதற்கும் மேலாக பிராப்தம் இருக்கா என்று தெரியனுமே என்ற நம்பிக்கை வேறு மனதை குடைய ஆரம்பத்துவிட்டதே.

ஜோஸ்யரிடம் போகலாமா இல்லை, ஆண்டவனிடம் கேட்கலாமா ஒரே குழப்பம். யாரிடம் பேசலாம், யார் என்ன நினைப்பார்கள். பிராப்தம் இருந்தால்தான் கிடைக்கும் என்பது எத்தனை உண்மையானது என்று தோன்ற ஆரம்பித்து விட்டது எனக்கு.

மறு வாரமே வேறு ஒரு மனிதர் மூலமாகத்தெரிய வந்தது நகருக்கு சிறிது தூரத்தில் அருமையான வீடுகள் விற்பனைக்கு  வந்துள்ளது மேலும் பில்டர்களே நமக்காக கடனை வாங்கி தரப்போவதாகவும் சொன்னது, மனதுக்கு ரொம்ப பிடித்துவிட்டது. வீடு  சிறியதாக இருந்தாலும் எனக்கு ரொம்ப பிடித்துவிட்டபடியால் இதையேதான் வாங்கி விட வேண்டும் மனதுக்குள்ளேயே முடிவு செய்து கொண்டு இருதரப்பு பெற்றோர்களும், சம்மதித்து விட்டால் மட்டும் போதாதே நம் எதிர்கால அதிகாரிகளான புத்திரசந்தானங்களும் ஒத்து வரணுமே என்ற கவலையும் கூடவே எழுந்தது. பிராப்தம் என்ன பண்ணுமோ என்ற திகிலும் உதித்தது.

என் திகிலுக்கு மாறாக எல்லோருமே ஏக மனதுடன், நாங்கள் வீட்டில் தங்கும் நேரம் குறைவாக இருக்கும், அம்மாதான் வீட்டோடு இருக்கப்போகிறபடியால் அம்மாவின் இஷ்டம்தான் முதலும் கடைசியும், என்று  சொன்னவுடன் உடம்பெல்லாம் புல்லரித்தது எனக்கு. அப்பாடா, மனது நிரம்பி வழிந்தது.

அடுத்த கவலை இனிஷியல் பேமென்ட் கொடுக்க எப்படி ஏற்பாடு செய்வோம்?  இவர் சொல்லி நானும்  சம்மதித்து கை, கழுத்திலிருப்பதை உருவிய முதல்பேமென்டை கொடுத்துவிட்டோமானால் மன்த்லிபேமென்டை தான் கவனித்து கொள்வதாக இவர் சத்தியம் செய்து போதாதற்கு, சகோதர, சகோதரிகளிடமும் கையேந்தி பணத்தைகட்டி ரசீது கிடைத்து பேப்பரும் கைக்கு கிடைத்து விட்டது.

பிள்ளைகளும் என் ரூம் இது, உன் ரூம் அது என்று சண்டை போட்டுக்கொள்வதை நானும் உற்சாகமாகப்பார்த்து மனதுக்குள் பெருமையுடன் பூரித்துப்போனேன். எல்லாமே இன்னமும் பேப்பரில்தான் உள்ளது. எல்லாம் நல்லபடியாக முடியவேண்டுமே என்ற கவலை அரிக்கிறது.

பெற்றோர்களுக்கும் பரமதிருப்தி, ஏனென்றால் அபார்ட்மென்ட் என்றால், அந்தரத்தில்தான் இருக்கும், உன் வீடு என்றால் உனக்கு முடிந்த போது ஒரு லிமிட் வரை எக்ஸ்டென்ட் பண்ணிக்கொள்ளலாமே என்றும் ஆசையை தூண்டிவிட்டு வேடிக்கை பார்த்தார்கள்.நான் நினைக்கிறேன், பிராப்தம் போல் நடக்கும் என்று!

நம்வீடுதானே, நாம் எப்போது வேண்டுமானாலும் பூஜை செய்து கொள்ளலாம், இப்போதே ஏகப்பட்ட கடன் வாங்கியுள்ள படியால்சாதாரணமாக நம் வீட்டளவில் கிரஹப்பிரவேசம் செய்து கொண்டு குடியிருக்கலாம் என்று என் ஐடியாவை சொன்னதும் இவருக்கும் திருப்தியாகி விட்டது. கூடவே பிராப்தம் எப்படி இருக்குமோ என்றும் தோணிற்று.

தினம் இரவோ, பகலோ,தலையை சாய்க்கும்போதும்,விழித்திருக்கும் போதும்,எந்தெந்த சாமான்களை ,எந்த இடத்தில் வைத்தால் புது வீட்டில் எடுப்பாக இருக்கும் என்று யோசனை செய்தவண்ணமிருப்பேன். என் எதிர்கால அதிகாரிகளான செல்வங்கள்மூவரும், இந்த ரூம் எனக்கு,உனக்கு என்று பேசுவது கனவில் கேட்பது போலிருக்கும்.

ஆனால், கடவுளை வைக்குமிடம் அழகாக அமைய வேண்டுமே, அவர்தான் நமக்குஇந்த வீடு வாங்கும் பிராப்தத்தை கொடுத்து அருளினார் என்றும் நினைத்துக்கொள்வேன் மனதார.

இன்னம் ஆறே மாதங்களுக்குள் புது வீட்டிற்கு குடி புகுந்து விடுவோம் .அக்கம்பக்கத்தில் உள்ளவர்களுடன் முன்பு இருந்ததை விட இன்னம் நெருக்கமாகவும்,கல,கலப்பாகவும், இருந்தேன். வீட்டுக்கு  சொந்தக்காரியாகப் போகிறேனே, சும்மாவா!  நான் இங்கிருந்து, இந்த இடத்திலிருந்து  கிளம்பும் போது எல்லோரையும் புது வீட்டில் அழைத்து பார்ட்டி கொடுத்தே ஆகவேண்டும் என்று மனதார நினைத்து பார்க்கிறேன், ஆஹா! .வீடு வாங்கும் பிராப்தம் வந்தே விட்டது என்று பரிபூர்ண குஷியில் இருந்த என்னை இந்த சாந்தி காலனிவீடு, அசாந்தி காலனியிருக்குமிடம், ஐம்பது வருடங்கள் முன்பு யாருடையதாகவோ இருந்தபடியால் நம்வீடுகளை,அந்த கேஸ் முடியும் வரை ரிஜிஸ்ட்ரேஷன்  செய்யமுடியாத நிலைமை என்று செய்தித்தாள் கட்டிங்கை இவர் என்னிடம் காட்டினார். சேதியைப் படித்தவுடன்,இடி இடித்தாற்போலிருந்தது.

அடுத்தநிமிடம் இடி தலையில் விழுந்தாற்போல் உணர்ந்தேன். பூமி பிளந்து உள்ளே போவது போல் உணர்ந்தேன். அவர்  கதி என்னவாகும் என நினைத்து, பரவாயில்லை, கவலைப்படவேண்டாம் என ஆறுதலாக பேசலாமென்றால், இந்த கேஸ் முடிய 20 வருஷங்கள் ஆனாலும் ஆகலாமென்றாரே பார்க்கலாம். அணுகுண்டை நேராக என் தலையில் போட்டாற்போலிருந்தது.

ஆண்டவா, கோவிந்தா, நாராயணா, என்ன வேடிக்கை பார்க்கிறாய் நீ, இந்த ஜன்மத்தில் இனி வீட்டிற்காக ஆசையே பட மாட்டேன் என்று எண்ணிய போது, படாரென்று ஞாபகம் வந்தது, தம்பி பெண் கல்யாணம், அடுத்தமாதம்.

சொந்தவீட்டுக்கு ஆசைப்பட்டு, தம்பி பெண் கல்யாணத்திற்கு கூட மொட்டை கழுத்து, கைகளோடு போவேன் என்று  வீரமாக இருந்த என்னை, உயரில்லாதவளாக மாற்றி விட்டாயே, மனதுக்குள்ளே புலம்புகிறேன். புத்திர சந்தானங்களுக்குத் தெரியுமா நம் கவலை, பிள்ளை சொல்கிறான் ,பள்ளியில் டூரிங் போகிறதாகவும் ரூபாய் 2000 கட்டவேண்டும், 1 வாரம் டூர் என்று சொல்லிக்கொண்டிருக்கும் போதே பெண்ணரசி  என் வகுப்பிலும் நைனிடால் போகப்போகிறோம், ரூபாய் 3500 கொடுக்கும்படி கேட்டுவரும்போது என் நிலைமை, ஒப்பாரி வைத்து அழ வேண்டும் போலவேயிருந்தது.

அம்மா, எது கேட்டாலும் வீடு, வீடு என்று சொல்வீர்களே, இப்போதுதான் அது  இல்லையென்றாகி விட்டதே என்றவுடன், உண்மையிலேயே அழுது விட்டேன். இந்த சான்ஸ் பிள்ளைகளுக்கு கண்டிப்பாக மறுபடி கிடைக்காது தான்,உண்மைதான். எங்களுக்கு வீடு வேண்டவே வேண்டாமென்றாலும் காசு கிடைக்காதே!

அதற்குள் பில்டர்ஸ் ஆபீஸ் போன் பண்ணிப்பார்த்தபோது தெரிய வந்தது, பில்டருக்கு ஹார்ட் அட்டாக் ஆகி ஆஸ்பத்திரியில் இருப்பதாகவும் கூறினார்கள் என்று இவர் கூறியதை கேட்டதும் எனக்கே உயிர் போவது போல் ஆகிவிட்டது.

நம்மை போலவே, வீடேயில்லாதவர்கள் உலகத்தில் இல்லாமலேயா இருப்பார்கள், அவர்களில் நாமும் சேர்ந்து கொள்வோம். இனிமேல் வீட்டைப்பற்றிய பேச்சே பேசமாட்டோம் என்று சபதம் எடுத்துக்கொண்டு, பிராப்தம் எப்பொழுது வருமோஅதுவரை காத்திருப்போம் என்று  நமக்குப்புரியாத, தெரியாத பிராப்தத்தின் மேல் பாரத்தை போட்டு  விட்டு உட்கார்ந்து விட்டார்.

பிராப்தத்தின்அர்த்தத்தை முழுதாகவே அனுபவிக்கும் எனக்கு பிராப்தம் என்பதில் பரம நம்பிக்கை உண்டாகி வீட்டை மறக்க முயன்று கொண்டிருக்கிறேன் …