கடந்து போன நாட்களைப்பற்றி நினைத்துப்பார்த்தால், வேதனையாகவும், வேடிக்கையாகவும் இருக்கிறது. இப்போதெல்லாம் உறவுக்குள், திருமணம் செய்துகொண்டால், பிள்ளைகள் சரியான மூளை வளர்ச்சியுடன் பிறக்காதோஎன்ற பயம், கவலை பீதியடையச்செய்துள்ளது. விஞ்ஞான ஆய்வுகளின்படி நிரூபணமும் ஆகியுள்ளது என்பதில் சந்தேகமேயில்லை.

முன்பெல்லாம் யாரோ உறவினர்கள் வீட்டில் பெண்பிள்ளை பிறந்து விட்டால், அத்தை,மாமன் குடும்பங்களில் ஆண்பிள்ளைகள் இருந்து விட்டால் அவனுக்காகவே அந்தப்பெண் பிறந்திருப்பதாக பேசிக்கொள்வார்கள். உரிய வயது வந்தவுடன் மணமும்செய்துவைப்பார்கள். பிள்ளைகளின் வீட்டு சொத்துபத்தெல்லாம் வேறு குடும்பங்களுக்கு சேர்ந்து விடக்கூடாது, என்ற எண்ணங்களின் எதிரொலிதான் இம்மாதிரியான மணங்களுக்கு காரணமாக இருந்திருக்கலாம். ஆனால், பையனோ, பெண்ணோ அரைப்பைத்தியமாகயிருந்தாலும் சரி, முட்டாளாக  இருந்தாலும்  சரி கல்யாணம் நடந்தே தீரும்!

இந்த நாளில், நவீன காலத்தில், உறவுக்குள் உறவு உண்டாக்கமுற்பட்டால் கொலை அல்லது தற்கொலை நடந்துவிடும் என்பதில் சந்தேகமேயில்லை. இன்னொரு காரணமும் இருக்கலாம், சொந்தத்தில் கல்யாணம் நடந்து விட்டால்இரு வீட்டாருக்கும் சொத்துக்கும் அதிபதியாகி விடலாம், அண்ணியையும்அடக்கி ஆளலாம், நாத்தியாக இருந்தால், அந்த நாளில் அடக்கி வாசிக்க வைக்கமுடியாத நாத்தியை பெண்ணை கொடுத்து ஆட்டிப் படைக்கலாம் என்ற எண்ணமும் தலைதூக்கலாம்!

ஆனால் இன்றைய நிலையில் மாற்று ஜாதியினரை மணந்து கொள்வதில் அதிக ஆர்வம் காட்டுவதாக படுகிறது. கலப்புத்திருமணமோ இல்லை அதே  சாதி திருமணமோ நல்லமக்களாக இருந்தால் வாழ்க்கை நல்லதாக இருக்கும். அவரவர் அனுபவத்தில்தான் தெரியும் மனிதர்கள் எப்படி இருக்கிறார்கள் என்பது. உலகம் பிரளயம் வரும்போதுதான் ஒன்றாகும் என்றுகேட்டிருக்கிறேன், ஆனால் இப்போது பார்த்தால் கல்யாணங்களினாலும் உலகம் ஒன்றாகும் என்றே தோன்றுகிறது!