நம்மில் சிலருக்கு வாழ்க்கையில்,  குடும்ப நபர்களை இழந்துவிட்டால்,   தன் மனோநிலையை  எப்படி காப்பாற்றிக்கொள்வதென்றே புரியாமல்  இருப்போம். எதிர்காலமே இருண்டு விட்டாற்   போலவும்,  தோன்றும். அந்த சமயமாகப்பார்த்து,  நமக்காகவே காத்திருந்தது போல் நம்முடன்  ஒட்டிக்கொண்டு ,  நமக்கு ஆறுதல் தரும் பாவனையுடன் சிலர் பேசுவார்கள்.  

வாய்ஜாலத்தில் வல்லவர்களான அவர்கள்தான் கொடுமையான மனதுடன் ஆனால் நமக்காகவே  சரீரத்தாலும்,  நல்ல நோக்கங்களுடன்,  நமக்காகவே செயல்படுவது போன்ற ஒரு சூழ்நிலையை உண்டாக்கி,  நம்மை உறிஞ்ச முயன்று வெற்றியும்  அடைந்துவிடுவார்கள்.  நாம் விழித்துக்கொள்ளும் போது  காலம் கடந்திருக்கும்.  திசைதெரியாத காட்டில் மாட்டிக்கொண்டு விட்டதாக  தோன்றினாலும்,  நாம் நம்முடைய  மனதை நம் வசத்தில்தான் வைத்திருக்கவேண்டும் . நம் குடும்ப நபர்களே, ஏன்,  கூடப்பிறந்த சகோதர,  சகோதரிகளாக கூட இருக்கலாம்.   எல்லோரும் மனிதர்கள்தானே!    

இன்றைக்கும் எத்தனையோ குடும்பங்களில்,  இந்த மாதிரி சகுனிகள் இருந்து வருகிறார்கள்.  இன்றைய நாட்களில் பெண்கள்,  தானே சம்பாதித்து,  தானே குடும்பத்தை நடத்துவதும் அல்லாமல்,  பெண்கள்  நிறைய பேர்களுடன் சகஜமாக பழகி ரொம்ப சாமர்த்தியமாகவும் இருந்துவருகிறார்கள்.  ஆனாலும்  கலங்கிய  மனதுடன் இருக்கும்போது  யார் சொல்வது தனக்கு,  எந்தெந்த விதங்களில் பயனளிக்கும் என்று  யோசிக்க முடியாமல்  எதிராளியின் கையில் மாட்டிக்கொண்டு தவிப்பார்கள்.  நம்  குடும்பம் என்றிருக்கும்போது வேறு யாரையுமே நம் சார்பில் நடிக்க விடக்கூடாது,  நம்முடைய இடத்தை நாம் தொலைத்து ஏமாந்து விடக்கூடாது  என்பதில் திண்ணமாக இருக்கவேண்டும்.  மாதம் நகர்ந்தாலும்,  வருஷம் ஓடினாலும் மனம் தளர்ந்து,  ஏமாந்து விடக்கூடாது.