ஒரு ராணுவ தளபதியாக இருந்தாலும் சரி, சராசரி மனிதனாக இருந்தாலும் சரி, அவரவர்களுக்கு ஏற்ற மாதிரி, சிநேகிதர்கள் மிகவும் அவசியமே.  என்னுடைய வாழ்க்கையில் சுமார் 55 வருடங்களுக்கு முன்பு நான் தவித்து   திண்டாடியது எனக்கு மட்டுமே தெரியும்.

என் பால்ய விவாகத்திற்குப்பிறகு நான் பிறந்து வளர்ந்த இடத்திற்கும் , நான் வசிக்கப்போன இடத்திற்கும் சம்பந்தமேயில்லாதிருந்தது. மேலும் பாஷை வேறு, நடை உடை பாவனைகள் வேறுமாதிரியாக இருந்தது. எப்படி ஒரு இக்கட்டான நிலை என்றால்,  கதவிடுக்கில் அகப்பட்டுக்கொண்ட எலி போல் தவித்தேன்.  இந்த நிலை எனக்கொரு தண்டனையாக இருந்தாலும், சுதந்திரம் கிடைத்து விட்டதால், ஊரை சுற்றவோ, கிடைத்தவர்களுடன் பேசவோ என்னால் முடியாத வேலை . எனக்கென சிநேகிதி கிடைப்பாளா, மனிதர்களை பார்க்குமிடமெல்லாம் 3 வருடங்கள் தேடினேன். அற்புதமான  ஒரு பெண்மணி என்னில் பெரியவள் எனக்காகவே, என்னைப்போலவே அவளும் காத்திருந்து , அவளுக்கு நானும், கிடைத்துக்கொண்டோம்.  அவளுக்கு மூன்று பிள்ளைகள். எனக்கு அம்மாவாகவும், ஆசானாகவும் கிடைத்தாள்.

மூன்று குழந்தைகளுக்கு அம்மாவாகவும் விட்டேன், ஆனால் என்னுடைய மனோ தாகத்தை தணித்துக்கொள்ள  தெரியாது , மூச்சு திணறுகிறது. சரீர உழைப்பினால் உடல் களைத்தாலும், மனம் எதையோ தேடுகிறதே!  அப்போதுதான் அந்த அபூர்வபிறவி கிடைத்தாள் Joyce Pinto! என்ற  ஒரு குடும்பத்தலைவி.  ஆயிரம் சல்யூட் அடித்து, மனதார ஏற்றுக்கொண்டேன்.  மதம்,  குலம்,  மொழி வெவ்வேறு,  ஆனாலும்இந்த மூன்றுமே இல்லாத ஒரு பொது மொழியைதேர்ந்தெடுத்து பேசினேன். என்னைப்பற்றி — எப்படி புரிந்து கொண்டாளோ, என் தாகத்தை பற்றி.

கொஞ்சம், கொஞ்சமாக எனக்கு life ன் முக்யத்துவத்தை எடுத்து கூறுவாள்.  அவளுடைய நான்காவது பிள்ளை பிறந்தவுடன் நாங்கள் பிரியும் வேளை வந்து விட்டது.  பிரிந்து வாழ்ந்த போதிலும் போனில் பேசுவோம்.  நாளடைவில் நேரில் பார்ப்பதே அரிதாகி விட்டது.

நான் அழுவது நின்று,  என் மனதிற்குள்ளேயே என்னையே நுழைந்து பார்க்க கற்றுக்கொடுத்த அந்த அம்மாவை என்னால் மறக்கவே முடியாது. அவர்கள் என்னை விட்டுப்பிரியும் சமயம் ஒருபட்டுபுடவையை பரிசாக தந்தார்கள்.  அதை இன்றும் பாதுகாத்து வைத்திருக்கிறேன். அதுவரை நானும் எதுவும் அவர்களுக்கென கொடுக்க நினைத்ததோ, இல்லை, எந்த விதமான உதவியும் செய்ததுமில்லை. மனம் கலங்கினால் ஒரு தோள் இருந்தது, இப்போது அது இல்லை என்றாலும், எங்கேயோ உயிரோடிருக்கிறார்கள் என்று நினைத்தாலே யானை பலம் வரும் எனக்கு! தற்போது இந்த FB என்றொரு மகோன்னதமான ஒரு தொடர்பின் மூலம் என் தொடர்பும் , தொடர்கிறது!

இதைத்தான் சொல்வார்களோ மனமிருந்தால் மார்க்கம் உண்டு என்று !