என்னுடன் நடந்த ஒரு உண்மையான நிகழ்ச்சியை பகிர்ந்து கொள்கிறேன். நானும் என் தங்கையும்  போனில் ஒருநாள் பேசிக்கொண்டிருந்த சமயம்,  அவரவர் இஷ்ட தெய்வம் பற்றி பேச்சு திரும்பியது.   எனக்கு ராமரிடம்தான் ரொம்ப அன்யோன்யம் என்றுகூறிய உடனே,  அவள் தனக்கு கிருஷ்ணர்தான்   மிகவும் கண் கண்ட தெய்வம் என பேசி முடித்தவுடன்,  ராமர் , கிருஷ்ணரிடம் என்ன வித்யாசம்,  இரு அவதாரமும் ஒன்றுதானே என நான்கேட்டு, கிருஷ்ணாவதாரம் குதூகல அவதாரமென்றும் , ராமாவதாரம் கொஞ்சம் துக்க அவதாரமென்று கூறியவுடன்,  எனக்கு மனம் எங்கெல்லாமோ ஓடி, வாழ்வில் சந்தித்த சம்பவங்கள் ஓட ஆரம்பித்து மனதில் ஆட்டம் கண்டது என்னவோ உண்மைதான்.

இன்றையிலிருந்து எனக்கும் கிருஷ்ணன்தான் என முடிவெடுத்து , செய்தித்தாள் படிக்க ஆரம்பித்தேன். 10 நிமிடங்கள் போயிருக்கும்.  ஏதோ நெருப்பில் எரிவது போன்ற நாற்றம் வந்தது  நான் நினைத்தேன்,  தெருவில் குப்பை எரிக்கிறார்களோ என்று பால்கனியில் போய் பார்த்தேன், நாலாபக்கமும், எதுவும் தெரியவில்லை. வீட்டுக்குள் வந்தேன், பிளாஸ்டிக்  எரிவது நாற்றம்   அதிகமாக வந்தது.  ஸ்வாமி அலமாரியில் ஶ்ரீராமர் ஜாதகம் வைத்திருந்தேன், கடந்த 25 வருடங்களாக, என்னிடம் இருந்த அந்த ஜாதகம் விளக்கின் மேல் சாய்ந்து எரிந்து கொண்டிருந்ததை  கண்ட எனக்கு, கை, கால் வெட, வெடக்க ஆரம்பித்துவிட்டது.  உடனே ராமா, நீதான் என் இஷ்ட தெய்வம்,  கஷ்டங்களை நீதான் கொடுத்தாய்  நீயேதான் காப்பாற்றியும் விட்டிருக்கிறாய். நன்றி கெட்ட என்னை மன்னித்து விடு  என கூறி நமஸ்காரங்கள் செய்து  மன்னிப்பு கேட்டு உடனடியாக என் நாத்தனாரிடம்  இந்த கதையை கூறி ஶ்ரீராமர் ஜாதகம் வாங்கி அனுப்ப கேட்டுக்கொண்டு,  ஜாதகம் கிடைத்த பின்  பூஜையில் வைத்து பார்க்கும் வரை என் மனம் பட்ட பாடு எனக்கும் அந்த ராமருக்கும்தான் தெரியும். அந்த வாரம் எனக்கு   இருந்த மனக்குழப்பம் இன்று வரை இருந்ததில்லை. வீட்டுக்கு வந்து நம்முடன் தங்கியிருந்தவர்களை  அவமதித்து விட்டாற்போல என் மனதுக்குள் சங்கடமாக இருந்தது.  நான்தானா மனதை மாற்றிக்கொண்டேன், ஏன் தோன்றியது  இப்படி , என்றெல்லாம் மனது அலை பாய்ந்ததை  என்னால் எழுத்தில் விவரிக்கவும் முடியவில்லை.

இதை படித்தாலும், கேட்டாலும்  ரொம்ப சாதாரணமாகவே தெரியும்,  சில சமயங்களில்  பிள்ளைகளை பெற்றோர் கோபித்துக்கொண்டால் பிள்ளைகள் வீட்டை விட்டே ஓட முயற்சிப்பது போல,  நான்  உனக்கு வேண்டாமென்று நினைத்து விட்டாய்,  இனிமேல்  நான் ஏன் உன்னுடன் இருக்க வேண்டும் என நினைத்துதான் ,  என் ராமர் என்னைவிட்டுப் போக முடிவு எடுத்து விட்டார் என்றுதான் நான்   வருந்தினேன். என் தவறை உணர்ந்து , நினைத்து  மன்னிப்பு கேட்டேன்.  எனக்கு அதிர்ச்சி வைத்தியம் தந்து என்  மனதை திருத்தி விட்டார்.  என் சகோதரிக்கு உடனடியாக போனில் என் வீட்டில்,  நடந்ததை கூறியவுடன்  உன் இஷ்ட தெய்வம் ஶ்ரீராமர்தான் என்பதை உனக்கு காட்டவேதான் இந்தமாதிரி ஆகியிருக்கிறது என்று கூறி அவளுக்கும் ஒரே ஆச்சரியமாக இருந்தது.