பிராப்தம் என்றதொரு வார்த்தைக்கு  ஒரு அத்தாட்சியோ,  அதிகாரமோ கண்டிப்பாக  உண்டு.  இது என் அனுபவத்தில் கண்ட உண்மை,  நம்புங்கள். அந்த காலத்தில் 26 வருடமாக ஒரே வீட்டில் குடியிருந்து ,  வாடகை குறைவு,  ஊருக்கு பிரதானமான இடத்தில்,  3 பெரிய ரூம்கள் ,  வாடகை வீட்டில் குடியிருக்கிறோம் என்ற உணர்வே கொடுக்காத வீட்டுக்காரன்,  இத்தனை செளபாக்யங்களுடன்  வாழ்ந்துகொண்டிருந்த எங்களுக்கு,  நம்முடைய சொந்த வீட்டில் வாழ ஆசைப்பட்ட எங்களை,  ஆண்டவன் எப்படி ஆட்டி படைத்தார் என்பதை உங்களிடமும் பகிர்ந்து கொள்கிறேன்.  அவன் அருள் இல்லாது போனால் நம்மால்  எதுவுமே செய்யமுடியாது என்பதை பூர்ணமாக  உணர்த்திய அநுபவம் தான் இது !

நாம் நம் சொந்த வீட்டில் வாழலாமே, என்று மனக்கோட்டை கட்டும்காலம் குறுகிக்கொண்டே வந்துவிட்டபடியால், அதாவது வயது ஏறிக்கொண்டிருப்பதால், ஊருக்கு கோடியில் apartment complex நிறைய வந்துள்ளதாகவும், திறந்தவெளி , காம்பவுண்டு  சுவருக்குள், காவல் காப்போருடன் இருப்போம் என்றெல்லாம் பேப்பரில்  படங்களுடன் படித்தவுடன், போய்பார்த்துவிட்டு வரலாமென போன எங்களுக்கு, இருந்தால் இந்தமாதிரி இடத்தில் அல்லவா இருக்க வேண்டும் என்று தோன்றியது என்னவோ நிஜமே!  அந்த இடத்தில் சுமாராக 100  Apt complex கட்டி விட்டிருந்தார்கள்.  ஊர்க்கோடியில்  போய்வருவது கடினம்தான்.  ஆனால்  வீடு கிடைப்பது அதைவிட அரிதாயிற்றே!  நாங்கள் இரண்டு ரூம் செட்டுக்கு  எழுதிக்கொடுத்து பணம் கட்ட ஏற்பாடு   செய்து விட்டோம். மனது முழுக்க சந்தோஷத்தால் நிரம்பிவிட்டது.

ஏனென்றால் நாங்கள் குடியிருந்த வீடு 65 வருடத்திற்கு  முன்னால் கட்டிய வீடு, மேலும் வீடு எப்போது  எந்த  இடம் உடைந்து விழுமோ என்ற கவலையும் இருந்தபடியால் பிள்ளையாருக்கு , குலதெய்வத்திற்கு,  காலமாகி விட்ட வீட்டுப்பெரியவர்களுக்கு  என்று  கடிதமெழுதி  அவரவர் படத்திற்கடியில் வைத்து  நமஸ்கரித்து, உத்திரவு பெற்றுக்கொண்டாற் போல வீட்டுக்கு பணம் கட்டிவிட்டோம். அலாட்மென்ட் தான் பாக்கி என நினைத்துக்கொண்டிருக்கும்போது,  ஒரு பழைய மெம்பர் அலாட்மென்ட்டை நிறுத்தி விட்டதாக நியூஸ் வந்தது.  பாதாதிகேசம் பற்றிக்கொண்டு எரிந்தது , என்று கூறும் பழமொழியின் நினைவுதான் வந்தது.  எங்கள் மன நிலையை விவரிக்கவும் முடியாது.  யாரைக்குற்றம் சொல்வது?  ஆனால் இரண்டொரு நாட்களிலேயே எங்கள்  இடத்தில் முழு பணம்கட்டியவர்களுக்கு  அலாட்மென்ட் ஆகப்போவதாக பேப்பரில் வந்து எங்கள் சந்தோஷம் பல மடங்கு அதிகரித்தது.

அடுத்த கட்டம் கிரஹப்பிரவேசம் எப்போது எப்படி பண்ணலாமென்ற யோசனையில் ஆழ்ந்தோம். மேலும் பல வருடங்களாக ஒரேவீட்டில் வாழ்ந்ததால் அந்த இடத்தில் நிறைய சிநேகிதர்கள் இருந்தார்கள். வெளியூரிலிருந்து வருபவர்களை ஸ்டேஷனிலிருந்து கூட்டிக்கொண்டு வர ஏற்பாடு என்று பல விதமான  வேலைகளை முடித்தாக வேண்டுமே என்ற கவலை வேறு இருந்தது. எல்லாவிதமான காரியங்களையும் ஒரு மாதிரியாக முடித்துவிடலாம் என தோன்றியது.  இவருடைய சகோதரியும் அவருடைய பெண்ணும் வருவதாக கூறி கிளம்பி விட்டார்கள். ஒரே சந்தோஷம்தான்.  அவர்கள் கிளம்பிய ரயிலை 200 கி. மீ தூரத்திலேயே போராட்டக்கார கும்பல் நிறுத்திவிட்டார்கள்.  இன்னொரு தங்கையின் கணவரும் அவருடைய தம்பியும் அவர்களை அழைத்து வரகிளம்பி சென்று,  திரும்ப வரும்போது ஒரு பெரிய டிரக்குடன்  நேருக்கு நேர் மோதி யாவரும் உயிரிழந்தனர். அந்தப்பெண் மட்டும் பலத்த காயங்களுடன் பிழைத்தாள்.  ஆகையால் எங்கள் மன சங்கடங்களுக்கு எல்லையேயில்லாமல் துக்கத்தில் ஆழ்ந்தோம்.    உறவினர்களும், சிநேகிதர்களும்,ஒரே குரலில்                            சுற்றியிருந்தவர்களும்  வீட்டிற்குள் நுழையும்  முன்னரே அபசகுனமாகப் படுவதாக கூற  நாங்களும்  பின் வாங்கிவிட்டோம். பலி எடுத்துக்கொண்ட வீட்டிற்குள் காலடி  வைக்கக்கூடாது என்று ஒரே குரலில் பலர் கூறியதால், செய்வதறியாது திகைத்து நின்றோம்.   என் தகப்பனார்,   ஶ்ரீ மஹா பெரியவரை  தரிசனம் செய்து அவருடைய உத்திரவுடன் வீட்டுக்குள்  போங்கள்,  என்று சொன்னதால், உடனடியாக அவரை தரிசனம் செய்யக்கிளம்பி விட  தீரமானித்து கிளம்பினோம்.  காஞ்சீபுரம் போய்  மடத்தில் ஶ்ரீஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் செய்த பூஜையை கண்குளிரப் பார்த்தோம்.  பூஜைமுடிந்ததும் grill gate க்கு வெளியில் எங்களை அனுப்பி விட்டார்கள்.  எங்கள் பிராப்தத்தை நொந்து கொண்டு,  என்ன செய்வதறியாது ஓரமாக நின்று கொண்டிருந்தோம்.

ஶ்ரீ மஹாபெரியவாளை தரிசனம் செய்து ஆசிகளை பெற்று வரப்போன எங்களுக்கு,  காஞ்சியில் மஹாபெரியவருக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால்  தரிசனம்  கிடைக்காது என்று துரத்திவிட்டார்கள்.  மடத்தை விட்டு வெளியில் வந்து துக்கத்தில் ஆழ்ந்தோம்.  எங்களுடன் வந்த வயதான பெரிய அக்கா மனம் நொந்துபோய் வாயிற்படியிலேயே படுத்து தூங்கி விட்டாள்.  இனிமேல் வீடு என்றே நினைத்துப்பார்க்க வேண்டாம் என்றே தோன்றியதே தவிர வேறெதுவும் மனதில் தோன்றவில்லை. சாயம் சுமார்  3.30 மணியிருக்கும்,  ஶ்ரீ பெரியவாளை   தரிசிக்க  யார் காத்திருக்கிறார்களோ,  அவர்கள் வாருங்கள் என்று அசரீரி போல்  குரல் கொடுத்ததும்,  ஓடினோம்,  யாரோ ஒருவர் பின்னாடியே.  ஆஹா, ஒருபக்கம் சிறிய பிள்ளைகள் வேத கோஷம்  சொல்லிக்கொண்டிருக்க ஶ்ரீ ஜயேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகளும், பால ஸ்வாமிகளும் உன்னிப்பாக  கவனமாக கேட்டுக்கொண்டிருந்ததும் என் மனதை விட்டு இன்றுவரை அகலவில்லை. ஶ்ரீபெரியவா   இன்னொரு பக்கத்தில் கூடை மாதிரி ஒன்றில் சுருண்டு உட்காந்துகொண்டு கையை உயர்த்தி  ஆசீர்வதித்ததுதான்  எங்கள் ஜென்மாவிலேயே மகத்தான ஒரு விஷயம். அருகிலிருந்தவர்கள் பெரியவா  நீங்கள் எதைப்பற்றி கேட்க வந்தீர்களோ, அதற்காக உங்களுக்கு உத்திரவு கொடுத்துவிட்டார் என்று   மொழி பெயர்ப்பாளர்கள் போல் எங்களிடம் கூறி பிரசாதம் அளித்து,  எங்களை அனுக்ரஹித்ததில் எங்களுக்கு இருந்த மனதிருப்தியை அளவிட முடியாது. அன்றிலிருந்து இன்றுவரை ஶ்ரீபெரியவாள் ஆசிகளினால்  எதையுமே சமாளித்துக்கொண்டு  வாழ்ந்து கொண்டிருக்கிறோம், என்பதில் சந்தேகமேயில்லை.  மலை போல் வந்த இடைஞ்சல்கள் எல்லாமே பனி போல நீங்கி வந்துள்ளது என்றும் கூறுகிறேன்.  நிஜமான ஒரு பிராப்தத்தின் மறுபக்கம்தான் இது!