மன்னார்குடியில் பிறந்து வளர்ந்து,  மதுரைமீனாட்சியின் மடியில் அடைக்கலமடைந்த உங்களை அடிக்கடி நினைத்துக்கொள்கிறேன்.  பாட்டியிடம் வளர்ந்த உங்களை,  பிறந்த வீட்டைவிட  செல்வாக்கான குடும்பத்தில், வாழ்க்கைப்பட்டும், ஆண்டவன் வேடிக்கை காட்டி விட்டால், நம் வாலாட்டமுடியாமல் ஆகி விடுவோம் என்பது உண்மையே.  உங்கள் கடந்த காலத்தை பற்றி நினைத்து  பார்த்தால்,  உங்கள் அசாதாரணமான தன்னம்பிக்கையின் தன்மை அதிலும் தெரிகிறது. காலனை வெல்ல எவராலும் முடியாது.
எத்தனையோ சிரமங்களை அனுபவித்தபோதிலும்  zest  குறையாமலிருக்க என்ன டானிக் சாப்பிட்டீர்களோ,  எனக்கு தெரியவில்லை.

உங்கள் பிறந்தவீட்டைப்பற்றிப்பேச அதிகமாக எதுமில்லை,  புகுந்த வீட்டில் கூட்டம் அதிகமாகத்தான் இருந்திருக்கிறது என்பது உண்மையே.  ஆனால் அழித்து விடும் நோக்கம் எதுவும் இருந்திருந்ததாகத்  தெரியவில்லையே?   ஆனால் உங்கள் சரித்திரத்தில் ஆண்டவன் கணக்கிலடங்காத கஷ்டங்களை அளித்து , உங்களை உடைக்கப்பார்த்தும் நீங்கள் உடையாது வளைந்து கொடுத்து ,  நிமிர்ந்து  நின்று சமாளித்தது  என்  மனதில் ஆழமாக பதிந்து உள்ளது.

மனிதமிருகத்திற்கு தன் பசியை தீர்த்து கொள்ளத்தான் தெரியும்,  தவிர  பிறர் காலை வாரி விட்டு  வழக்காடுவதையே குறிக்கோளாக கொண்டிருந்தவர்களை  உங்களுக்கு அறிமுகப்படுத்தி , ஆட்டிப்படைத்ததே  அந்த ஆறுபடை அதைப்பற்றி என்னவென்று சொல்வது? சும்மா கிடந்த சங்கை ஊதிக்கெடுத்த கதையாக ஒரு கதை நடந்து முடிந்தது.

அது சரி,  உங்களுடைய ஆறுபடை வீடு  தான் அளித்தவைகளை,  தானே அறுவடை செய்து,  அள்ளி எடுத்துக்கொண்டதே அதைப்பற்றி என்ன சொல்வது ?  மகம் தான் ஜகமே என்றாலும்,  பூராடத்தை போராட்டத்துடனேயே,  போராடவிட்டு வேடிக்கை பார்த்ததே,   இது நியாயம்தான் என்பதுபோல ,  உங்கள் ஆறுபடைவீடு வேடிக்கை பார்த்ததே.  ராமன் வனவாசம் போனதுபோல அந்நிய மண்ணில் போயாவது, அள்ளிவர நினைத்த புனர்பூசத்தை,  அம்மண்ணுக்கே , சரணாகதியடைய  செய்வதுபோல பயமுறுத்திய அந்த ஆறுபடை,    பெயருக்குத்தான் ஆறுபடையே தவிர உங்களுக்காக உதவ வருவதில் பின் தங்கியே  இருந்து வேடிக்கை பார்த்ததே, அந்த ஆறுபடையை  நான்வெறுக்கிறேன். அந்த ஆறுபடையானது உங்களை அழிக்க முயன்று,  உங்கள் குடும்பம்,  மனம், உடல்,  உயிர், பிள்ளை,  வாழ்வு   என்ற ஆறையும் பறித்துகொண்ட   ஆறுபடையை நான்  நியாயம் கேட்கிறேன். பதில் கூறமுடியாமல் திணறுகிறது  அந்த ஆறுபடை.

இன்றுசமுத்திரக்கரையில் உட்கார்ந்து கொண்டு,  தனிமையில் தவிக்கும் சத்தியத்திற்கு ஆறுபடை ஆறுதல் அளிக்கிறதா? சத்தியத்தின் ஆத்மசாந்திக்கு உங்களைத்தான் அம்பாளாக நாடவேண்டும். மனிதபிறப்பும் இறப்பும் இயற்கையின் நியதிதான்,  என்றாலும்  எனக்கு உங்கள் வாழ்க்கையின் முன்னும்   பின்னும் தெரிந்தபடியால்,  ஒவ்வொரு நினைவும் மனதைப்பிழிகிறது.

மனிதப்பிறப்பின் விதியை மாற்றி அமைக்க மனிதனுக்கு அதிகாரம்  இல்லை , சக்தியும் இல்லை. ஆனால் என்னைப்போல் உயிரோடிருப்பவர்களுக்கு ,  நம் வாழ்வின் பக்கங்களை புரட்டி பார்த்து,  முடிந்து போன சமாசாரங்களையும் நினைத்துப்பார்த்தால்  வேதனை தாங்கவில்லை.

ஒருபடையில்லை , இருபடையில்லை , எத்தனைபடைகள் வந்து எதிரில் நின்றாலும் ஆண்டவன் விதித்து விட்டானானால்  விதித்ததுதான் நடக்கும் என்பது தெள்ளத் தெளிவாக தெரிகிறது. இன்றைக்கு  தீபத்தின் ஒளியில், சத்தியத்தின் வாழ்க்கையில் ஜொலிப்பு  வந்து விட்டபோதிலும், மாலதி என்றதொரு பாறை இருந்திருந்தால், சத்தியம்  ஹாய்யாக, அதன் மீது சாய்ந்து உட்கார்ந்திருக்கலாமே, என தோன்றுகிறது.