எங்கள் நாட்களையும்,  இன்றைய நாட்களையும், ஒப்பிட்டுப்பார்க்கும்போது,  நிறைய வித்யாசம்  வந்துவிட்டது  பிள்ளை வளர்ப்பில்,  நடைஉடை பாவனைகளில் மட்டுமில்லாது,  தினசரி பழக்கவழக்கங்களிலும் மாறுதல்களை ஏற்படுத்திக்கொண்டும்  பெற்றோர்கள் தவித்து திண்டாடுவதாகத்தான்  நான் கருதுகிறேன்.

அந்தக்காலத்தில்  பெரியவர்களுக்குத்தான் எல்லாமே தெரியுமென்று ஒரு அபார நம்பிக்கையுடன் வளர்ப்பார்கள்,   வளர்ந்தோம்.  தினம் காலையிலும்,  மாலையிலும் நீதி போதனைகளையும்  சொல்லி    நம்மை திருத்திக்கொண்டுவர, எல்லாவற்றிற்கும் ஒரு காரணக்கதையும் சொல்லுவார்கள். செய்த தவறுகளுக்கான பாவ புண்ணியங்களையும் எடுத்துச்சொல்லி,  பயமுறுத்தி,  எங்களையும் கண்காணிப்புடன் கவனித்துக்கொண்டேயும் இருப்பார்கள். ஆனால் இன்றைய நிலையோ,  தலைகீழாக மாறியுள்ளது. இன்றைய பெற்றோர்களின் நிலையோ  முற்றிலும் மாறுபட்டு விட்டிருக்கிறது  என்பதில் சந்தேகமேயில்லை!  இன்னம்சொல்லப்போனால்,  தங்களை விட தங்கள் பிள்ளைகள்தான் எல்லாவற்றிலும் மேற்பட்டவர்கள்  என்பதைப்பற்றி பறைசாற்றிக் கொள்ள பெற்றோர்களும் தயக்கமே இல்லாது பேசுவதால்,  நிலைமை மாறி விட்டதோ என்றே   நினைக்கிறேன்.

நாங்கள் இந்த உலகிற்கு வந்ததே உங்களால்தானே, ஆகையினால் உங்கள் கடமையை செய்து  பெருமை பட்டுக்கொள்ளத்தான் எனக்கு பணம் செலவிட்டு படிக்க வைத்தீர்கள் என்று குற்றம் கூறவும் தயங்குவதேயில்லை.  பெற்றோர்களும் பிள்ளைகள் தங்களை விட புத்திசாலிகள் என்று பேசும் போது பிள்ளைகளும்  தங்களைப்பற்றி அப்படியே நினைத்துக்கொண்டு  நடக்கிறார்கள்.  காலப்போக்கில் பிள்ளைகளையே வீட்டை விட்டுத்துரத்திவிடலாமா என்று கூடதோன்றுகிறது, இல்லை தாங்கள்   வீட்டைவிட்டு வெளியேறி விடப் பார்க்கிறார்கள் . முன் காலத்தில் பிள்ளையைப்பெற்றுக்கொள்வது, இல்லை ஸ்வீகாரம் எடுத்து கொண்டாவது தங்கள் நிலபுலன்களை கவனிக்க ஆட்கள்  தேவைப்பட்டது. இப்போது நிலங்களை lease ல் விடுவது பழக்கமாகிவிட்டது .மனிதர்களுக்கு பேசுவது சுலபம் கடைப்பிடிப்பது மிகவும் கடினம் என்று புரிவதற்குள் இரண்டாவது  தலைமுறை வந்து விட்டது. பழைய மனிதர்களின் வாழ்க்கை தேவைக்கும் இப்போதைய தேவைகளுக்கும் சம்பந்தமே இல்லாது இருக்கிறது. தேவைகளை அதிகரித்துக்கொண்டே போகும் போது எதிலுமே அதிருப்தி ஏற்படுகிறதோ என்று தோன்றுகிறது.

காலம் மாறுகிறது,  ஆட்சி மாறுகிறது   என்பது போல பிள்ளைகளும்,  மாறி வருகிறார்கள். ஏனெனில் பிள்ளைகளும் தங்களைப்பற்றி ரொம்ப உயர்ந்தவர்கள் போன்று நினைத்துக் கொண்டு  நடந்து கொள்ளும்போது பெற்றவர்களுக்கும் தாங்கமுடியாத துக்கமே உண்டாகிறது.  வேறு வழியே  புரியாது முழித்துக்கொண்டு நிற்க வேண்டிய நிலைமை.   இந்தநிலை வந்தபிறகுதான்  எங்கே தவறு செய்தோம் என்று யோசிக்க தோன்றுகிறது.   அதுவும் தவிர இரண்டு பெற்றோரும் வேலை பார்ப்பவர்களாக இருந்து விட்டால் கேட்கவே வேண்டாம்.  பிள்ளைகளுக்கு சுதந்திரமோ  சுதந்திரம்தான்!   பெற்றோர்கள் தானாகவே கைகட்டி, பிள்ளைகளிடமே சரணமடைந்து விடும் ஆநிலையும் சில குடும்பங்களில் ஏற்பட்டு விடுகிறது.   பிள்ளைகளோ சதா டிவி,  வீடியோ,  செல்போனில் மனதை செலுத்திக்கொண்டு மண்டை  மழுங்கிட  செய்து ,  புத்தியை வேண்டாத விஷயங்களில் நுழைத்தும் ,  ஓடியாடும் விளையாட்டுகளில் ஆர்வம் காட்டாமலும் வளர்ந்தும் விடுகிறார்கள். விட்டுக்கொடுக்கும் மனப்பான்மையும் மறைந்து வருகிறது மனிதர்களுக்கு நடுவில். ஆண்டவனை தரிசிப்பதாலோ இல்லை , அவர் புகழை கேட்பதாலோ மனகட்டுப்பாடு , ஒற்றுமை போன்றகுணங்களெல்லாம் வளராது . நல்ல பழக்கங்களை பழக்க வேண்டும், மனதில். மனதை பிடித்து நிறுத்துவதுதான் ஒரே வழி.

குடும்பங்களில் ஒருவரோடு ஒருவர் பேசுவதே அபூர்வமாக விட்டதே. பார்த்தாலும், பேசும்போதும்  அதில் ஒரு லயம் இல்லை, மிருதுவாகவும் இல்லை. பேச்சே நீயா இல்லை நானா என்பது போலவே  இருக்கிறது. இந்த நிலை ஒருவரை ஒருவர்  மனதளவில் சார்ந்து இல்லாமலிருப்பதினால்தான் என நான் நினைக்கிறேன். அன்பு என்று இருந்தால்தான்  ஒருவருக்கு ஒருவர் அன்யோன்யம் வரும். நமக்குள் என்ன போட்டிகள்?

பிள்ளை வளர்ப்பு என்பது செடி, கொடி போன்றவைகளை வளர்ப்பது போல் அல்ல!  கண்காணிப்போடும் நல்ல விஷயங்களை பற்றியும் பேசி வளர்க்கவேண்டும்.  மேலும் நாம் பிள்ளைகளுக்கு  என்ன போதிக்கிறோமோ அதை,  பெற்றோர் கடைபிடிக்க வேண்டும். பேச ஆரம்பிக்கும் முன்பு   உங்கள் நடவடிக்கைகளை  திரும்பி பார்த்து விட்டுப் பேசுங்கள்.   வாழ்க்கையில்  நாம்  எதை போதிக்கிறோமோ அதை கடைபிடிக்காவிடில்,  சுவரில் வீசிய பந்து மாதிரி  நம்மை நோக்கி பாய்ந்து வந்து விடும் என்பதையும் கவனத்தில் வைத்துக்கொண்டு பேசுங்கள்.  அதே போல பணத்தின் அவசியத்தையும் கவனமாக  கற்றுக்கொடுத்து,   நம்முடைய கடமையையும்  சரிவர செய்ய வேண்டும்.  பிள்ளைகள்  நம்மை உண்ணிப்பாக கவனித்துக்கொண்டும்,   பின்பற்றிக்கொண்டும் நடப்பார்கள்.

நாம் பெற்றெடுத்த பிள்ளைகளை நல்லவழியில் கொண்டு வரவேண்டியது பெற்றோரின் கடமைதான்.   சில பிள்ளைகளுக்கு இயல்பாகவே பொறுப்பு வந்து விடுகிறது,  சிலருக்கும்  பெற்றோரின் கவனிப்பு தேவைப்படும் .  அதைகவனத்தில்  கொண்டு செயல்படுவதும் மிகவும்  அவசியமே! நாம் நம் பிள்ளைகள் என்ன தவறு செய்யக்கூடாது என்று நினைக்கிறோமோ,  அந்த தவற்றை நாம் செய்து கொண்டு அவர்களுக்கு போதித்தால் , நம் பேச்சை அவர்கள் கண்டு கொள்ளாமலும்,   நமக்கே எந்த வித மரியாதையும் கூட தரமாட்டார்கள்.  எதை செய்தாலும் நன்கு  யோசித்து செயல்பட வேண்டும்.

சமயம்வரும் போது சொல்லிக்காட்டவும் தயங்கவே மாட்டார்கள்.  பிள்ளைகளை வளர்ப்பது என்பது ஒரு விதமான கலையேதான், என்பதில் சந்தேகமேயில்லை. பட்டுத்துணி முள்ளில் மாட்டிக்கொண்டு  விட்டால் எடுப்பது  எத்தனை கஷ்டமோ அந்தமாதிரி ஆகி விட்டது. முன்பெல்லாம் வீட்டுக்கு வீடு ஒரு TV இருக்கும், இப்போதோ  ரூமுக்கு  ரூம் TV , அவரவருக்கு செல்போன். வாழ்க்கை தரத்தை உயர்த்திக்கொள்வதாக நினைத்து  தோல்வியடைகிறோம். ஒன்று மட்டும் நிதர்சனமாக தெரிவது என்னவென்றால் வாழ்க்கையில் எதற்குமே ஒரு  நிரந்தர தீர்வுகள் இல்லையோ என்று.