மங்களம் கல்யாணம் சிவனுடன் ஜூன் 19, 1958ல் தஞ்சாவூரில் நடந்த சமயம், நான் கோபால் பெரியப்பா குடும்பத்தினருடன் போயிருந்தேன். எனக்கு வயது 11. என் அக்காவை தொட்டு பேசிய போது கை சுடுகிறது, கண் ஜிவு-ஜிவு என்று உனக்கு உடம்பு சரியில்லையே என்று ஒரே கவலையும் கூடவே பயமும் எழுந்தது. ஏனெனில் அந்நாட்களில் ஜுரம்வந்தால் பிழைக்க மாட்டார்கள் என்ற பீதியிருக்கும். என் அக்கா ரொம்பவும் தைர்யசாலிதான் என நினைத்து கொண்டேன். அவர்கள் வீட்டில் சுரம்வந்த பிள்ளை செத்துவிட்டான், அடுத்த ஊரில்நான்கு பேர் சுரத்தினால் இறந்தார்கள் என்ற பேச்சுக்களையும் கேட்டதின் விளைவுதான் அது என்று இப்போது நினைக்கிறேன். கிராமங்களில் எந்த கெட்ட செய்திகளும் காட்டுத்தீயைப்போல் பரபரப்பாக பறந்து மூலை முடுக்கு விடாது ஒன்றுக்கு நான்காக பரவி விடும்.
அத்தை பிள்ளையானாலும் அத்தானை முதல்முறையாக பார்க்கிறேன். என்னைப்பார்த்து ஒரு புன்முறுவல் கூட இல்லை அவர் முகத்தில். இன்றுவரை எனக்கு அது ஏமாற்றம்தான். மௌனத்தில் இருக்கும் ஒரு சாமியார் போல இருந்தார். என் குழந்தைமனம் நினைத்தது இந்த பேசவே பேசாத மனிதரோடு அக்கா எப்படி இருப்பாள்என்று , ஒரேகவலை எனக்கு. கல்யாணம் முடிந்து கிராமத்தை அடைந்ததும் பாட்டியிடம் இதைப்பற்றி பேசியவுடன் பாட்டி சொன்னார் அவர்கள் சென்னப்பட்டினத்தில் வளர்ந்தபடியால் அளந்துதான் பேசுவார்கள் என்றதும் , அந்த பட்டினத்தை பார்க்க வேண்டும் என்ற ஆவல் பிறந்தது. எங்களைப்போன்ற கிராமத்து ஜனங்களுக்கு அந்த நாளில் மதறாஸ் என்றால் அயல்நாடு போல் தோன்றும். அதனால் நான் எங்கேயிருந்தாலும் எப்படியாவது ஒரே ஒரு தடவையாவது என்னை மதறாஸ் போக வழி காட்டு என்று சாயங்காலம் உதிக்கும் முதல் நட்சத்திரத்திடம் தினம் பிரார்த்திப்பேன்.
அக்கா, உன் கல்யாணம் முடிந்து பெரியப்பா குடும்பத்தினருடன் ராமநாதபுரம் போய் படிப்பை தொடர்ந்தேன். அடிக்கடி அக்கா, அத்திம்பேரை பற்றியும் நினைத்து பார்ப்பேன் . வாய்விட்டுச் சொல்லிக்கொண்டிருக்க சங்கோஜமாக இருக்கும்.
அடுத்த வருட லீவுக்கு ஊருக்கு போகும்சமயம் என்னை புதுக்கோட்டையில் உங்கள் வீட்டில் கொண்டு விட்டார்கள். அப்போது உங்களின் முதல்பிள்ளை பிறந்திருந்திருந்தான். அந்த ஒரு வருடத்திற்குள் நீ ரொம்ப பெரியவளாக விட்டிருந்தாய். ஏனென்றால் எனக்கு தின்பண்டங்கள் தருவாய் . உனக்கு எல்லாமே ரொம்ப நன்றாக செய்து கொடுக்க தெரிந்திருந்து. என்னை உன் வீட்டுக்கார்ர்களுக்கும், அறிமுகம் செய்தாய். உனக்கு அழகான ஆண் பிள்ளை பிறந்திருந்தது.
அழகானகுழந்தை, பூனைக்கண்ணுடன் பிறந்திருந்தாலும் பகலில் கண் தெரிகின்றது என்பதை பார்த்து எனக்கு ஒரே ஆச்சரியமாக இருந்தது. நம் அப்பாவிற்கும் பூனை கண் என்பதே மறந்துவிட்டிருந்தது. ஓரிரு நாட்களில் அத்திம்பேர் என்னை கல்யாணப்பரிசு என்ற சினிமாவிற்குஅழைத்துப்போனார். சினிமாவில் உட்கார்ந்த நான் நன்றாகத்தூங்கினேன். சினிமா முடிந்ததும் ம்ம் ,எழுந்திரு, வீட்டுக்குபோகணும் என்ற புதுக்குரலைக்கேட்டதும் தூக்கம், கூட்டம் இரண்டையும் கலைத்துக்கொண்டு பதறிக்கொண்டு ஓடினேன். யாரோ ஒருவர் கேட்கிறார் ஏன் பிள்ளை, யாரைத்தேடி ஓடுகிறாய் என்றவுடன், அத்தானை தேடி ஓடுகிறேன் என்றதும், கல்யாணம்ஆயிடிச்சா பிள்ளை என்று கேட்டதும் பதில்சொல்லாமல் ஓடியதும், இன்னம்நினைவில் இருக்கிறது. ஓடும்போதே நினைத்துக்கொள்கிறேன் , சினிமா பார்த்த விஷயத்தை நம் வீட்டாரிடம் பேசக்கூடாதென. ஏனெனில் நம் அப்பாவிற்கு சினிமா என்றால் பிடிக்கவே பிடிக்காது என்று எனக்குத்தெரியும். ஓரிரு வருடங்கள் முன்பு கும்பகோணத்தில் நடந்த செங்கம்மா கல்யாணத்தன்று நம் அம்மா மற்ற உறவினர்களுடன் வஞ்சிக்கோட்டை வாலிபன் என்ற சினிமாவைப்பார்த்து வந்ததற்காக நம் அம்மாவை கல்யாண மண்டபத்திற்குள் வரவிடாமல் அப்பா அவமதித்து பேசியதை கேட்டு பயந்து போன எனக்கு இன்றும் அந்த பயம் போகவில்லை. எங்கள் கல்யாணம் முடிந்து நாங்கள் பார்த்த சினிமா பாவமன்னிப்பு .அன்றும் நல்ல தூக்கம் போட்டேன். ஆனால் ஒன்று மட்டும் நிஜம் மங்கிளி, அத்திம்பேர் உன்னையும் தன்னைப்போலவே மௌனியாக்க வில்லை.
உங்களுக்கு பிறந்த மும்முத்துக்களையும் மூன்று விலையுயர்ந்த வைரங்களுடன் கட்டி வைத்து பஞ்சாமிர்தமான பேத்திகள், பேரன்களையும் கொடுத்து ஆண்டவன் உங்கள் குடும்பத்தை நன்றாக நடத்திவருகிறார். அவனுக்கு நன்றிகூறி மேலே எழுதிமுடிக்கிறேன். காலம் எதற்காகவும் யாருக்காகவும் காத்திருப்பதில்லை.
காலம் நம்மை கேட்டுக்கொண்டா ஓடுகிறது? நாமும் அம்மாக்களாகி பாட்டிமார்களாகவும் ஆகிவிட்டோம். தற்போது நடந்திருக்கும் துக்கங்களில் மரக்கட்டைகளை போலவும்ஆகிவிட்டோம். காலம், நேரம், எப்படி மாறிவிடும் என்பதையும் நம் வாழ்நாட்களிலேயே பார்த்தும் விட்டோம்.
நாம் எப்போது சந்தித்தாலும் சரி , நல்ல உணர்வுகளையே உணர்ந்து , நல்வார்த்தைகளையே பரிமாறிக்கொள்ளும்படியான மனதை தரும்படி ஆண்டவனிடம் கேட்டுக்கொள்கிறேன். எந்த விஷயம் எப்படியானாலும் மௌனசாமியாருக்கும் மனதுக்குள்ஆழம்அதிகமாகவே இருப்பதையும் உணர்ந்திருக்கிறேன் . வெகு தூரத்தில் இருந்தாலும் அருகாமையில் இருப்பது போன்ற உணர்வை கொண்டு வரும் கலையை கற்றுக்கொடுத்தவர் அவர்தான். நன்றியுடன் தங்கச்சி.
I notice you didn’t write much about Shivan. “Shivan illayel Shakti illai; Shakti illayel Shivan illai”