முத்துப்பேட்டை சித்தமல்லியில் வாழ்ந்த எங்கள் குடும்பத்தின் சிறப்பான ஒன்று என்னவென்றால் அண்ணா என்றுசொல்வது. அண்ணா என்று அவரவர் வீட்டுக்குள் கூப்பிட்டுக்கொள்வார்களோ என்னவோ எனக்கு தெரியாது. சித்தமல்லி குடும்ப network ரொம்ப பெரியது. ஆலி அண்ணா, கிட்டண்ணா, விச்சாண்ணா, சாம்புஅண்ணா , மோஹுஅண்ணா, கோண்டுஅண்ணா, கோபால்அண்ணா இப்படித்தான் சொல்வார்கள். எங்கள் அப்பா நாகபூஷணம் என்பவர் எல்லோரையும் விட சின்னவர் போலும். யாருமே அவரை பூஷணம் அண்ணா என்று சொல்லி நான் கேட்டதேயில்லை. எனக்கு அது ஒரு குறை. சதா ஒரு நாலு முழம் கதர் வேஷ்டி கட்டியிருப்பார். எப்போதும் வயற்காட்டிலேதான் வேலைகளை கவனிக்கபோய்விடுவார். அதிக படிப்பும் இல்லை என்றே நினைக்கிறேன். பெரியப்பாக்களில் ஒருவர் BA , இன்னொருவர் Highways Engineer . நான் பாட்டிம்மாவிடம் என் அப்பாவை ஏன் படிக்க விடாமல் நிலங்களை கவனிக்கும் வேலையாள் போல் செய்து வீட்டீர்கள் என்று கேட்டபோது பாக்கிஇரண்டு அண்ணன்களை விட இவன் வியாபகஸ்தன், அதனால் இவனை கிராமத்தில்வைத்துக்கொண்டோம் என்றும் கூறினார். அப்பாவிற்கு அவருடைய குழந்தைகளாகிய நாங்கள் எந்த வகுப்பில் படித்துக்கொண்டிருக்கிறோம் என்பதே தெரியாது. எங்கள் கடைக்குட்டி தம்பி அமெரிக்கா படிக்க போய் டாக்டர் பட்டம் வாங்கினான். எங்கள் பெரியப்பா பிள்ளை ஒருவர் லண்டனில், அமெரிக்காவில் படித்து டாக்டர் பட்டங்கள் வாங்கியிருக்கிறார். நடு பெரியப்பா பிள்ளை ஒருவரும் பிரான்ஸ் தேசத்தில் மேல்படிப்பிற்காக போய் படித்து பட்டம் வாங்கியதோடல்லாமல் பிரான்ஸ்காரியுடன் கல்யாணம் செய்து கொண்டு 30 வருடமாக சந்தோஷமாகவும் இருந்து வருகிறார்கள். என் இரு பெண்களும் அமெரிக்காவில் படிக்கபோய் அவர்களும் அமெரிக்க பையன்களை மணந்து அங்கு குடித்தனம் செய்து கொண்டு 26 வருஷகாலமாக இருந்து வருகிறார்கள். ஆளுக்கு 3 குழந்தைகள் இருக்கின்றன. நாங்களும் ஐந்து ஆறு முறை போய் அவர்களுடன் தங்கி வந்திருக்கிறோம். கலரும் பாஷையும்தான் வேறே தவிர உலகிலுள்ள பெற்றோர்களுக்கும் தன் பிள்ளைகளை பற்றி நாம் என்ன கவலைபடுகிறோமோ அதையேதான் அவர்களும் படுகிறார்கள் என்பதை புரிந்து கொண்டேன்.
தற்போது பாரத மாதாவும் தன் தேசத்து பிள்ளைகளின் மனதை மாற்றி விட்டாளோ என்று எண்ணுமளவிற்கு மாறுதல்களை செய்து காட்டி விட்டாள். விவாகம் ஆகிறது இல்லையோ விவாகரத்துகள் அதிகமாகி வருகிறது .
எங்கள் அப்பா தினம் சாயங்காலம் விஷ்ணு சகஸ்ர நாம பாராயணம் பண்ணுவார். ஊரில் உள்ள பிள்ளைகளுக்கும் கற்று கொடுப்பார். முருகன் கோயில்களுக்கு முடிந்த போதெல்லாம் கிளம்பி சென்றுதரிசனம் செய்துவர கிளம்பி சென்று விடுவார். ஊருக்குள் எந்த வம்புசண்டை வந்தாலும் தீர்த்துவைத்து விடுவார். அவருடைய அத்தை பிள்ளைகளில் ஒருவர் TKS என்பவர். அவர் இவருடைய உயிரை கேட்டாலும் கொடுக்க தயாராக இருப்பார். அவரிடம் இவருக்கு அத்தனை அபிமானம், மரியாதை அதிகம்.
தினம் பத்துபேர் புடைசூழத்தான் சதா இருப்பார். பாம்புகள் பலவற்றை கொன்றிருக்கிறார். பயம் என்கிற எண்ணமே அவருக்கு தெரியாது. எந்தகல்யாணமாக இருந்தாலும் தலைபொறுப்பாக எடுத்து கொண்டு செய்வதில் மன்னன்தான். அவருக்கு GR என்று ஒரு குரு இருந்தார்.இருவரும் தினமும் ராமாயணம், மஹாபாரதம் போன்ற புராண கதைகளை படிப்பார்கள் .வாத, விவாதங்களும் செய்வார்கள். ஆறுபடை தரிசனம் செய்து விட கிளம்பி விடுவார் அடிக்கடி. ராமரிடமும் பக்தி அதிகம்.
எங்கள் அப்பாவிற்கு முனியப்பதேவர், அண்ணாமலைதேவர் , காசினாத தேவர், தங்கவேலு ஒந்திரியர் என்ற பெயரிலும் மற்றும் நிறைய மனிதர்களைதெரியும். எனக்கு ஞாபகத்தில் வந்தவர்களை எழுதி மகிழ்ச்சி அடைகிறேன். சித்தமல்லியில் நான் இருந்த நாட்கள் குறைவுதான் என்றாலும் திரும்ப நினைத்து பார்க்கும் போது சந்தோஷமாகவே இருக்கிறது.
ஊரின் நுழை வாயிலில் இருக்கும் பிள்ளையார் கோயில் , மில்லடி பஸ் ஸ்டாப்பிலிருந்து நடந்து வந்தால் எதிரில் வரும் பெருமாள் கோயில், வலது பக்கம்வடக்குத்தெரு, இடது பக்கம் தெற்கில் திரும்பி போனால் எங்கள் வீடு வரும். எங்கள் வீடு பழைய வீடாகத்தான் இருக்கும், ஆனாலும் புது வீடு என்று கூறுவார்கள். என்ன காரணம் என்று எனக்குத்தெரியாது . வீடு ஆரம்பிக்கும்இடத்தில் lamp post இருக்கும் . அங்கிருந்து திரும்பி நேராக போனால் சிவன் கோயில். சிவன் கோயிலுக்கு அக்கம்பக்கத்தில் பெரிய தாத்தாவின் சமாதி இருக்கிறது என்று சொல்லிக்கேட்டிருக்கிறேன். சித்தமல்லிக்கு ஐந்து அல்லது ஆறு மைல்களுக்குள் கடற்கரை இருப்பதால் சித்தமல்லி மணல் சமுத்திரகரை மணல் போலவே இருக்கும். நினைவுகள் மறைவதற்குள் ஒரு முறையாவது சித்தமல்லி போய்வர மனம் ஏங்குகிறது.
Feel like vising this place at least once with our whole family.