பணம் என்பது உறவை கொடுத்தாலும் கொடுக்கும், உறவையே கெடுத்தாலும் கெடுக்கும் என்பதற்கு வாழ்க்கையில் நிறைய சந்தர்ப்பங்கள் அமைந்து  விடுகின்றன. எனக்கு தெரிந்த நடு வயது ஆண்மகன் தன் மனைவியை இழந்து தவிக்கும் சமயத்தில் , அவருடைய தூரத்து உறவில் ஒரு பெண்மணி துக்கத்தை பகிர்ந்து கொள்ள வந்தவள் வலையை வீசி தன்னை அக்குடும்பத்தின் ஒரு அங்கம் போல் செய்து கொண்டு விட்டாள். மனைவியை இழந்த அவருக்கும் மனம் அமைதியின்றி இருந்தபடியால் திறந்து கிடந்த புத்தகமாகிவிட்டார். மனைவியை இழந்தவர்க்கு ஒரு பெண் எட்டுவயது ,ஒரு ஆண் பிள்ளை பன்னிரெண்டு வயதிலும் இருந்ததால் அவருக்கும் அவளுடைய கனிவான பேச்சும் மற்றும் வீட்டை கவனிக்கவும்,  வாழ்க்கை துணையும் தேவை பட்டிருக்குமோ  என்னவோ, அவரும்தான் தனிமையில் எத்தனை காலம் கழிக்க முடியும் ?

ஆரம்ப நாட்களில் அந்த எட்டு வயதான பெண்ணை ஒரே அதிகப்படியான கவனிப்பு அளித்து  பெண்ணை கைக்குள் போட்டுக்கொண்டு தன் வாழ்க்கையை ஆரம்பித்து விட்டாள். வருடங்கள் நகர்ந்தன. அவருக்கோ மனம் நிம்மதியை  தேடி அலைகிறது . மனைவியின் மறைவிற்கு பிறகு கூடவேயிருந்து  உதவிய உண்மை மனைவியின்  வயதான தாயாரையும் அவருடைய அம்மாவையும் கொஞ்சம் கொஞ்சமாக  அவர்களுக்கேற்றது  முதியோர் இல்லம்தான் என அன்புடன் அறிவுரைகள் கூறி  அவர்களிருவரையும் முதியோர் இல்லத்தில் சேர்த்துவிட்டு, தான் மிகவும் கடமைபட்டவள் மாதிரி அந்தபெண்ணுக்கு வேண்டியவைகளை மட்டும் நன்குகவனித்து தன்னைத்தவிர யாராலுமே அவளை கவனிக்க முடியாது என்ற எண்ணத்தை எட்டுவயது பெண்உள்ளத்தினுள்ளும் எப்படிதான் புகுத்தினாளோ தெரியாது. ஆண்டவனுக்குத்தான் தெரியும். மகள் புது அம்மாவின் அன்பிற்கு அடிமையாகி விட்டாள் என்பது உண்மையே. பிள்ளைக்கு அவளை அம்மாவாக நினைத்து பார்க்கவே முடியவில்லை போலும். இது யாருடைய தவறு?

இந்த நிலை புரிவதற்குள்   வருடங்கள் ஓடிவிட்டன. வீட்டு பளு குறைந்து , மனைவியை இழந்த துக்கத்தை மறந்தும், தன்னை சுதாரித்துக் கொள்வதற்குள் விஷயங்கள் கைமீறி போய்விட்டதாக தெரிய வரும்போது காலம் வேகமாகவும் ஓடிவிட்டது  என புரிந்தது அந்த மனிதருக்கு.  ஆனாலும் தனக்கென்று யாரோ ஒருத்தி தன் குடும்பத்தை  கவனிக்க இருக்கிறாள்  என்பதால்  அவரும் உட்புகுந்து  பாராமல் இருந்துவிட்டாரோ என்னவோ?

அவருக்கும் இனி அவளில்லாமல் இருக்கமுடியாது என தோன்ற ஆரம்பித்ததோ என்னவோ, இல்லை  எப்படி தன்னுடைய சுபாவத்தையே இழந்து விட்டோம் என நினைத்து சங்கோஜபட்டாரோ தெரியாது , தன்னை விடுவித்து கொள்ள வழி தேடமுடியாமல் தவித்திருப்பாரோ என்னவோ?  ஆரம்பநாட்களில் வீட்டு செலவிற்கென்று இவர் பணம் கொடுத்தது போக ஐந்தே  வருடத்தில்,  அந்தப்பெண்மணி அவரையே கணக்கு கேட்கும் அளவிற்கு தன்னை அக்குடும்பத்தில் இணைத்துக்கொண்டது நினைத்துப்பார்க்க முடியாத சாதனைதான்..

பையன் எதற்கெடுத்தாலும் அவளை எதிர்த்து நிற்பான்,  பெண்ணோ அவளையே சுற்றி, சுற்றி சார்ந்திருப்பாள். வீடு சதா போர்க்களமாக இருக்குமாம். அந்த மனிதருக்கு  வெளிநாடுகளில் சுற்றிக்கொண்டேயிருப்பதில் வீட்டு  பளு, மனைவியை இழந்த கனம் குறைந்ததே தவிர, மனம் அலைபாய்ந்து கொண்டேயிருந்தது போலிருக்கிறது. பையனோ படிப்பை கவனிக்காமல் ஊர் சுற்ற ஆரம்பித்து வேண்டாத சிநேகங்களை பெருக்கி கொண்டு விட்டான் என தோன்றினாலும் பேசுவதற்குரிய சமயமே கிடைக்காது போய்விட்டது.

தனக்கு குழந்தைகளிடம் நெருக்கம் குறைந்து விட்டதை உணர்ந்தாலும் அதை ஒட்டுப்போட்டு  சரி பண்ணிக் கொள்ள தெரியாத படியால் விரிசல் விரிந்து வருகிறதை உணர்ந்தாலும் சரிசெய்து  கொள்ளமுடியாது தவித்து போனார் இந்த புது உறவினால்.  இந்த ஒரு இக்கட்டான  நிலைமையை நினைத்து பார்த்து ஆராய்ந்து  சரி செய்ய டயமில்லாத அப்பா,  நடுவில் வந்து ஒட்டிக்கொண்டு  குடும்பத்திற்காகவே அம்மாவை போல் அவர்களுடன் இருந்து வரும் பெண்மணி , அவளை கட்டோடு பிடிக்காமல், அவளை  குடும்ப நபராக ஏற்றுக்கொள்ள  முடியாது தவிக்கும் பையன் .  வந்தவளோ, ஏகாந்தமாக தனிக்காட்டு   ராணி மாதிரி ஜாலியாக கச்சேரிகள், சினிமா, ஷாப்பிங் என்று எல்லாம் அனுபவித்துக்கொண்டிருந்தாள். அவள் ஒட்டிக்கொண்டதின் நோக்கமே அதுதானே என அந்த மனிதர் புரிந்து கொண்டிருந்திருப்பார், ஆனால் யாரிடம் பேசுவார்?  நிம்மதி எங்கிருந்து வரும், போகும் என்பதுதான் புரியவில்லை.

காலேஜ் போக ஆரம்பித்தவுடன்  பையன் எங்கேயோ டூரில் போனவன் எங்கே போனான்  என்பதே  தெரியாமல் போய் விட்டான். என்ன தேடியும் காணாமல் போனவன் போனதுதான்.  ஒரு ஜீவன் உண்மையாகவே ஒரு குடும்பத்தை விரும்பி ஏற்றுக்கொண்டிருந்தால் இப்படி நடந்திருக்குமா? நடந்திருந்தாலும் தாங்க முடியுமா?  வந்தவளோ தன் பொழுது போக்குகளில் நன்கு கவனம் அளித்து காலத்தை ஓட்டிக்கொண்டிருந்தாள்.  மற்றவர்களுக்கும் காலம் ஓடி ஓடி  மனம் சலித்து  விட்டது போலும்.

பெண் காலேஜ் முடித்து வேலையில் சேர்ந்தபின் அப்பாவிடம் பேசி ,  பிளான் செய்து , தானும் அப்பாவுமாக வெளியூருக்கு கிளம்பி போய் விட்டார்கள். எங்கு போனாலும் மனம் நம் கூடவேதானேயிருக்கும்.  குடும்பம் என்பது எப்படியெல்லாமோ மாறி விடுகிறது, சில சமயங்களில்.  நம் வாழ்க்கையில்  சில பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்காது என்பதுதான் உண்மை. கதை போல் இருப்பதெல்லாம் கதையல்ல. நம் வாழ்நாளில் சிலவற்றை மனதார ஏற்றுக்கொண்டாலும் கடைசி வரை சரியாக வாழ முடியுமா என்பதே தெரியாமல் போய் விடுகிறது ஆனாலும்  வாழ்ந்து வருகிறோம் வேறு வழியில்லாமல்..  இப்படியெல்லாம் நடப்பதை கேட்டோ, பார்த்தோ இல்லை ,  அனுபவித்ததை கொண்டுதான் “ஒண்ட  வந்த பிடாரி  ஊர் பிடாரியை விரட்டித்தாம்” என்ற பழமொழி வந்ததோ என நினைக்க தோன்றுகிறது..