நான்  மகோன்னதமான ஒரு குடும்பத்தில்தான் பிறந்திருக்கிறேன் என்று நினைத்து பெருமைப்படுவேன். ஒரு  ஸாஸ்த்ரோக்த்தமான குடும்பம்தான் எங்களுடையது. எங்கள் தகப்பனாரின் பெரியப்பா மஹான்ஶ்ரீ சுப்ரமணிய சாஸ்திரிகள்  பிறந்த வம்சத்தில் பிறந்தேன். அவர் காஞ்சி மஹா பெரியவாளுக்கு கற்றுக்கொடுத்தவர்களில் ஒருவராக இருந்திருந்தார் என சொல்லி கேட்டிருக்கிறேன் .  சிறியவயதில் இதெல்லாம் ஒரு ஸ்பெஷலாக தெரியாது.

என் படிப்பு பட்டுக்கோட்டையில் ஆரம்பித்து ராமநாதபுரத்தில் முடிந்தது. பட்டுக்கோட்டையில் RCC பள்ளியில் படித்ததால் Christianity பற்றிய  எண்ணங்கள்தான் மேலோங்கி நிற்கும். பள்ளியில் கைகளில் ஸ்டார் கட்டிக்கொண்டு டான்ஸ் ஆடியதும் இன்றும் நினைவில் உள்ளது. எங்கள்  கிராமத்தில் இருந்த நகராட்சி பள்ளிக்கு எங்களை, பெண்களை அனுப்ப இஷ்டபட வில்லையோ என நினைக்கிறேன். பெண்கள் என்றாலே ஆணுக்கு அடிமையாகத்தானே கரண்டி பிடித்து காலத்தை ஓட்ட போகிறாள் என நினைத்தார்களோ என்னவோ தெரியாது. அந்த காலத்தில். அப்பா எங்களை எந்த உறவினர் வீட்டில் இருந்து படிக்க பிளான் பண்ணுகிறாரோ அங்குதான் நாங்கள் போய் படிக்க வேண்டும் , மறு பேச்சே இல்லாமல். நான் தகராறு செய்தேன் என்பதால் என் படிப்பு அவ்வப்போது நின்று விடும்.  அப்பாவிடம் பேச வேண்டுமென்றால் கைகளை பின்னால் கட்டிக்கொண்டு என்ன பேசப்போகிறோம் என்பதற்கு ஒத்திகை பார்த்து பாட்டிம்மாவிடம்  சொல்லி appointment வாங்கிக்கொண்டு பேச்சை ஆரம்பிப்பேன்.  நாம் சொல்வதோ, கேட்பதோ எதுவுமே நடக்காது என்று தெரிந்தாலும் நம் எண்ணங்களை சொல்லி விட வேண்டும் என்று ஒரு எண்ணம் எனக்கிருந்தது. நாங்கள் சொல்வதை அப்பாவின் காதில் அம்மா போடுவார். ஆனால் முடிவெடுக்கும் அதிகாரம் இருந்ததில்லை. பாட்டிம்மா தான் ஜட்ஜ் மாதிரி தீர்ப்பளிப்பார்.

வெளியூரில் குடும்பம் வைத்துக் கொண்டு எங்களை படிக்க வைக்க முடியாத நிலைமை போலும். என் படிப்பு இப்படி திண்டாடி மன்றாடி 6 வது வகுப்போடு  நின்றது. அதனால் என்ன, நம் படிப்பை நான்தான் படித்து தேறவேண்டும் என நினைத்து என் ஸ்கூல் போகும் சிநேகிதிகளிடமிருந்து  அவர்களுடைய புத்தகங்களை வாங்கி படித்துக்கொண்டேயிருப்பேன். புரிந்தும,்புரியாமலும், ஹிந்து பேப்பர், தமிழ்பேப்பர் படிப்பேன்.  எல்லா பேப்பர்களிலும் புது டில்லி என்று எழுதியிருப்பதை பார்த்துக் கேட்டபோது நம்தேசத்தின் எல்லாவிதமான முடிவையும் மந்திரிகள் புதுடில்லியில் எடுப்பார்கள் என கேட்டதும் அந்த பார்லிமெண்ட்டை பார்த்து வரவேண்டும் என எனக்கு மனதில் துளிர் விட ஆரம்பித்துவிட்டது.  சமஸ்கிருத ஸ்லோகங்கள் படிப்பேன். அப்பாவும் ஸமஸ்கிருதம் சொல்லிக்கொடுப்பார். பகவத்கீதா படிப்பேன். வீட்டு வேலைகள் செய்யவே மாட்டேன். அப்பா ஊரில் இருந்தால் அவருக்கு பயந்து வீட்டு வேலை செய்வேன். மற்ற சமயங்களில் படித்தவைகளை அசை போட்டு பார்த்துக்கொண்டிருப்பேன். கிழிந்த துணிகளை தைப்பேன். பாட்டிம்மாவுடன் பல்லாங்குழி விளையாடுவேன். அப்பா ஊரில் இல்லாவிட்டால் படிப்பது தவிர வேறெந்த வேலையுமே  செய்யவேமாட்டேன். வீட்டுக்கு வரும் உறவினர்களுடன் அதிகமாக பேசவேமாட்டேன். என்னைக்கண்டால் யாருக்குமே பிடிக்காது.

இதற்குள் எனக்கு 14 வயது ஆரம்பித்து விட்டது. என்னைவிட 14 வயது பெரிய பையனை எனக்கு கல்யாணம் செய்ய, நல்ல குடும்பம் என்றும்  பேசிகொண்டிருந்தார்கள். பையன் புதுடெல்லியில் வேலை பார்ப்பதால் மனதுக்குள் நானே தீர்மானம் செய்து கொண்டேன் , இவரையேதான் மணந்து கொள்ள வேண்டும் என. பார்லிமென்ட்  இருக்கும்  புதுடில்லிக்குப் போகவேண்டும் என்று எனக்கு ஆவல் பிறந்து விட்டது , இந்த கிராமத்துப்பெண்ணுக்கு.

பிப்ரவரி 61 ல் இவருடைய பெற்றோர் என்னைப்பார்த்து நல்ல முடிவுக்கு வந்து விட்டார்கள். ஆனால் எனக்கு 14 வயது என்றவுடன் சரியான பொருத்தம் இல்லையோ என அவர்கள் நினைத்தார்களாம்.  பையன் வந்துபார்த்து விட்டு முடிவு செய்வோம் என்று கூறி விட்டார்கள்.ஆண்டவனே, நான் புதுடில்லிக்கு போகும் சான்ஸை இழந்துவிடக்கூடாதே என தினமும் மாலையில் உதிக்கும் முதல் நட்சத்திரத்திடம் தரிசித்து வேண்டிக்கொள்வேன், நான் புதுடில்லிக்கு போகவேண்டுமென்று.

பிள்ளை வந்து பார்த்து எங்கள் கல்யாணமும் நன்றாக நடந்து நானும் புதுடில்லியில் வந்து சேர்ந்து, இவருடைய ஒன்றுவிட்ட  மாமா பிள்ளை ஸ்டேஷனுக்கு வந்து மாலை போட்டு வரவேற்று தங்கள் வீட்டிற்கு அழைத்துப்போய் கிட்டத்தட்ட ஒருமாதம் வைத்துக்கொண்டிருந்தார்கள். அதன் பின் வேறு இடம்பார்த்து கொண்டு போனோம். ஒருநாள் இவரிடம் கேட்டேன் எனக்கு பார்லிமெண்ட்டை போய் பார்க்கவேண்டும், எப்போது போகலாம் என்று.?  ஏனென்றால் பெண்ணை பார்க்க வந்த அன்றே பார்லிமெண்ட் இருக்கிற புது டில்லியில் தானே அவர் இருக்கிறார் எனவும் கேட்டிருந்தேன்.  நம்மைப்போன்றவர்கள் அங்கு போவது கஷ்டம்  என்று  பதில் சொன்னதிலிருந்து தனியாக இருக்கும் போது எப்படி ஏமாந்துவிட்டோம் என நினைத்து அழுவேன்.

ஒருநாள் மாமாபிள்ளை வீட்டிற்கு போயிருந்த போது மன்னி கேட்டார், உனக்கு பொழுது எப்படி போகிறது என்று ? தினம் ஒரு கடிதம் எழுதுவேன் ஊருக்கு , பேப்பர் படிப்பேன், ஜெயகாந்தன், கண்ணதாசன் புத்தகங்கள் படிப்பேன். தமிழ்வாணனின் கல்கண்டு என்ற புத்தகம்படிப்பேன், கொஞ்ச நேரம் அழுவேன், என்றதும் மன்னி கேட்டார் ஏன் என்று?  நான் இவரை கல்யாணம் செய்து கொண்டதே பார்லிமெண்ட்டை பார்ப்பதற்காகவேதான் அது முடியாது என்றால் நான் ஊருக்கே திரும்பி போக வேண்டும் என்று கூறினேன்.

உனக்கு ஹிந்தி படிக்க முடியுமா எனக்கேட்டதும் லட்டு தரட்டுமா தின்பதற்கு என்கிறமாதிரி இருந்தது எனக்கு. நீ ஹிந்தி படித்து நல்ல மார்க்குடன் பாஸ் செய்தால் உன்னை பார்லிமெண்டில் அழைத்து பரிசு கொடுப்பார்கள் என கூறியதுடன்,  ஶ்ரீமதி ராஜலக்ஷ்மி ராகவனின் அட்ரஸ் கொடுத்து , நான் ஹிந்தி படிக்க ஆரம்பித்து நல்ல மதிப்பெண்கள் பெற்று ஶ்ரீ கிருஷ்ண மேன்ன் கையிலிருந்து புத்தக பரிசுகள் பெற்றேன் . அன்று பார்லிமெண்ட்டில் நுழையும் சமயம் மனம், உடல் புல்லரித்ததும் , என் மனது நிரம்பியதும் இன்றும் ஞாபகத்தில் உள்ளது.  இந்த இடத்தில்தானே 1947 ல் ஜவஹர்லால் நேருஜீ நம்மை  ஆண்ட ஆங்கிலேயரிடமிருந்து சுதந்திர இந்தியாவின்  சாவியை பெற்றிருப்பார் அதே இடத்தில் நான் நிற்பதாக நினைத்து பெருமிதம்அடைந்தேன். நான் பிறந்த வருஷமும் அதேதான். அன்றுதான் என் ஜன்மசாபல்யம் ஆயிற்று. இது நடந்தது 1962ல்.