சுமார் அறுபது வருடங்கள் முன்பு நடந்தது இது. பிரதி தினமும் சாயங்காலம் நடு வயது பெண்மணி ஒருவர் , ஒருநாள் கூட விடாமல் எங்கள் கிராமத்து தெரு வழியாக சிவன் கோயிலுக்கு போவார். நாங்கள் சுமார் பதினைந்து பிள்ளைகள் விளையாடி கொண்டிருப்போம். ஓம் நம சிவாய என்று இரைந்து சொல்லிக்கொண்டே அக்ரஹாரத்திற்குள் நுழைவார். நாங்கள் யாவரும் விளையாட்டை நிறுத்திவிட்டு அவர் எதிரில் போய் நிற்போம். அவர் எங்களிடம் என் மகன் வருவானா என கேட்பார். நாங்கள் யாவரும் வருவான், வருவான் என பதிலுக்கு கோரஸில் கத்துவோம். அவர் எங்களுக்கு இரண்டு,இரண்டு அரிசி மிட்டாய் மற்றும் ஆரஞ்சு மிட்டாய் தருவார். இதுமாதிரி தினந்தோறும் ஏதாவது தின்பதற்கு மிட்டாய் கிடைக்கும். வாயில் போட்டுக்கொண்டு அவர் பின்னாலேயே pied piper ஐ பிள்ளைகள் தொடர்ந்து ஓடியது மாதிரி கொஞ்சதூரம் ஓடுவோம். ஆனால் எங்கள் கவனமெல்லாம் அன்று என்ன கொண்டு வந்திருக்கிறார் என்பதிலேயே இருக்கும். அது கிடைத்தவுடன் நாங்கள் திரும்பவும் விளையாட்டை தொடர்வோம்.
சில வீடுகளில் சிவன் கோயிலுக்கான பூமாலைகளை கட்டித்தருவார்கள். வேதாம்பாளிடம் கொடுத்து விட்டால் சிவன் கோயிலுக்குச் சேர்ந்து விடும் என்று அந்த தாயிடம் கொடுப்பார்கள். சில நாட்கள் விளையாடிக்கொண்டிருக்கும் எங்களை பார்த்து கேட்பார், என் பிள்ளை எப்போது வருவான் என்று. அடுத்தமாதம் என்று கோரஸாக கத்துவோம். இதெல்லாம் நடந்து எத்தனையோ வருடங்கள் ஆன பின்பும் எங்களுக்கும் அவருடைய பிள்ளைக்கு என்ன ஆயிற்று, அவன் எங்கே போனான் என்பதெல்லாம் கேட்டுத்தெரிந்து கொள்ள துடிக்கும் வயதும் இல்லை. எங்கள் மனத்தின் கவனமெல்லாம் அந்த பாட்டி அன்று என்ன கொடுப்பார் என்பதிலேயே இருக்கும். நாங்களும் பெரியவர்களாகி கல்யாணமாகி அவரவர் இடத்தில் வசிக்கும் போது சாயங்காலம் ஸ்வாமிக்கு தீபமேற்றும் போது மின்னல் மாதிரி அந்த அம்மையாரின் முகம் எனக்கு ஞாபகம் வரும். ஞாபகமும் வந்த வேகத்தில் மறந்தும் விடும் . ஒருதடவை சம்மர் லீவில் கிராமத்திற்கு போயிருந்தபோது இப்போதெல்லாம் வேதாம்பாள் வருவதில்லையா என நான் கேட்ட போது அம்மா சொன்னார். அந்த கதையை கேளு என்றுகூறினார். வேதாம்பாளின் பிள்ளை அந்த காலத்தில் நண்பர்களுடன் கப்பலில் பர்மாவிற்கு போய் சம்பாதிக்க போனதாகவும், மற்ற யாவரும் சம்பாதித்து கொண்டு கிராமத்திற்கு திரும்பி வந்து வீடு வாசல்களையும் கட்டிக்கொண்டும் மணம் செய்து கொண்டு பிள்ளை குட்டிகளுடன் வாழ்வதாகவும் அம்மா சொன்னார். நடுவில் யாரோ ஒரு ஆள் நான்தான் உன்பிள்ளை என்று சொல்லி அவரை ஏமாற்றியதாகவும் அவரிடம் இருந்தவைகளையும் அபகரித்து கொண்டு விட்டதாகவும் அம்மா சொல்லிக்கேட்டேன். ஆனால் வேதாம்பாளின் நிஜ பிள்ளை மட்டும் திரும்ப வராத காரணத்தால் மனது மிகவும் பாதிக்கபட்டு காலமடைந்து விட்டார் என்பதைக் கேட்டு மனம் கலங்கி நின்றேன். இன்றைக்கும் கூட சில நாட்களில் தீபமேற்றும் சமயத்தில் வேதாம்பாளின் முகம் பளிச்சென்று நினைவில் வரும். ஆண்டவனின் கோர்ட்டில் தீர்ப்பு கிடைத்து விட்டால் மேல் கோர்ட் எங்கேயுள்ளது, அப்பீல் செய்து நியாயம் கேட்க?
வாழ்க்கையில் எதை எதிர் பார்த்து வாழ்கிறோமோ அது கிடைப்பதில்லை. கிடைத்ததை அனுபவிக்க பிடிப்பதில்லை, வேதாம்பாள் மாதிரி வாழ்ந்தவர்கள் எத்தகைய வாழ்க்கையை எதிர்பார்த்து ஏமாந்து, வாழ்ந்து மறைந்திருப்பார்கள் என அடிக்கடி யோசித்தும் விடை காணாமலும் மறக்கப்பார்க்கிறேன். வேதாம்பாளை என்னால் மறக்க முடியவில்லையே..
Leave A Comment