எங்கள் கிராமத்தில் வாழ்ந்த யாவருமே தாயாதிகள் என்று சொல்வார்கள். சித்தமல்லியின்    பஸ் ஸ்டாப்பின் பெயர் மில்லடி . அந்த இடத்தில் ரைஸ் மில் ஒன்றிருந்தது. அதனால் அந்த இடத்திற்கு பெயர் மில் அடி.  இன்னொரு பக்கம் பிள்ளையார் கோயில் ஒன்று இருந்தது.  அங்கிருந்து  அக்ரஹாரத்திற்குள்  நுழையும் வரை இரு பக்கங்களிலும் பசுமையானவேலிகள் இருந்தன. வயல்கள் இருந்தன. நேராக  பெருமாள் கோயில் இருக்கும். வடக்குத்தெரு , தெற்குத்தெரு என்று இருபக்கமும் நீளமான தெருக்கள் இருந்தன. முத்துப்பேட்டை சமுத்திர கரையில் இருப்பதால் ஆற்றுமணல் போல்தான்   இருக்கும் சித்தமல்லியின் மண். இப்படி எத்தனையோ நினைவுகள் வருகிறது  மனதில் , எதை எழுதுவது எதை விடுவது என்றே புரியவில்லை  எனக்கு. சாயங்கால வேளைகளில் பெருமாள் கோயிலுக்கு எதிரில்தான் பெண்பிள்ளைகள் பாண்டி,  நொண்டி என்று ஓடியாடி விளையாடுவோம். தெரு லைட்டிங்  வந்தவுடன் வீட்டுக்குள் வந்து விடவேண்டும். இல்லையேல் அடுத்து கிடைக்கும் அவமானங்கள்  எதிர் கொள்ள  ரெடியாகி விடவேண்டும், கிராமத்து மனிதர்களுக்கு ரோசம் அதிகம்.

சித்தமல்லியில் இரண்டு குளங்கள் இருந்தன,  தேவர்குளம், நன்தி குளம் என்ற பெயரில்.  குளத்தில் தலைக்கு சீயக்காய் தேய்த்து   சோப்பு தடவிக்குளிப்பதுடன் அல்லாமல் எல்லாவகையான துணிகளையும் துவைத்து அலசி வீட்டுக்கு கொண்டு போய் உலர்த்துவார்கள். ஏகப்பட்ட மீன்கள் நீந்திக் கொண்டிருக்கும்.  நாங்களும் அதே குளத்தில்தான் நீந்த கற்றுக்கொண்டோம். அதே குளத்து தண்ணீரை குடி நீராகவும்  உபயோகித்திருப்பதையும் நான் பார்த்திருக்கிறேன் .  ஆனால் epidemic வந்ததாக கேட்டதேயில்லை . மேலும் எங்களுடைய பெரியப்பா பிள்ளை கல்யாணம் டாக்டரும் கூட.  அதனால்  சுரம் பற்றிய பயமோ, கவலையோ இருந்ததே கிடையாது.

பெரியதாத்தா  ஆபத் சன்யாசம் வாங்கி கொண்டு, அதே ஊரில்தான் சமாதி அடைந்தாராம். அதாவது குடும்பத்தில் இருந்தவர் உயிர் பிரியும் தறுவாயில்  சன்யாசம்  பெற்றுக்கொள்வதுதான் ஆபத் சன்யாசமாம். சன்யாசம் எடுத்து வைக்கவும் குரு போன்றவர்கள் வந்திருந்து  செய்த வேத  கோஷங்களை பாராயணங்களை கிரஹித்துக்கொண்டே உயிர் பிரியும் வரை தன் மூச்சுக்காற்று எப்படி சரீரத்திற்குள் மேல் நோக்கி வருவதை commentary போல்  சொல்லிக் கொண்டிருந்தார் என்றும் பாட்டியம்மா விவரிப்பார். அந்த தாத்தா ஶ்ரீ மஹா பெரியவாளுக்கு இருந்த குருக்களில் ஒருவராக இருந்தார் என்று கேட்டிருக்கிறேன் .   நாங்கள் மர்ம நாவல் கேட்பது போல்  யாராவது அவரைப்பற்றி பேசினால் கவனமாக கேட்டுக்கொண்டிருப்போம்.

அவர் சமாதியான அன்று  எல்லோர் வீட்டுவாசலிலும் அழகான கோலங்கள்போட்டு  கார்த்திகை பண்டிகை மாதிரி விளக்குகள் ஏற்றி, புதிய உடைகள் உடுத்தி, அவர் சவம் எடுத்துப்போகும் ஊர்வலத்தின் சமயம் வீட்டுக்கு வீடு ஹாரத்தி எடுத்து அவரை வழியனுப்பியதாக  எங்கள் தாயார் ஶ்ரீமதி செல்லம்மாள்  சொன்னதும்  ஞாபகத்திற்கு வருகிறது.

இந்தமாதிரி  ஒரு காட்சியை பார்க்க நமக்கு ஒரு சான்ஸ்  கிடைக்கவில்லையே என்று எனக்கு  மனக்குறை. அவருடைய 75 வது வருட ஆராதனை சமயம்அவருடைய போட்டோவை laminate செய்து அவருடைய சந்ததிகளாகிய எங்கள் யாவருக்கும் கொடுத்திருக்கிறார்கள் என்பது பாராட்டப்பட வேண்டிய விஷயமாக தோன்றியது எனக்கு.  அவரவர் உத்யோகம் பார்த்து சம்பாதித்து  தன் குடும்பங்களை கவனித்து கொள்வதிலேயே நிறைய சமயம் போய்விடுகிறது.  அதோடு இந்த ஒரு பெரிய பொறுப்பை எடுத்துக்கொண்டு செய்பவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

எங்கள்  பெரிய அண்ணா ஶ்ரீ விஸ்வநாதனும் சிரத்தை எடுத்துக்கொண்டு எங்கள்யாவருக்கும் பெரிய தாத்தாவின் ஆராதனை சமயம் தகவல்  அனுப்புகிறார். அன்றைய நாளில் நாங்களும் அவருடைய படத்திற்கு  பாயசம் நைவேத்யம் செய்து நமஸ்கரித்து வணங்குவோம்.

சில concepts சின்ன வயதில் புரிவதில்லை. இப்போதெல்லாம்  இவற்றையெல்லாம் நினைத்துப்பார்த்தால்  ஆஹா, என்ன உயர்ந்த மேன்குடியின் மக்கள் நாம் எல்லோரும் என நினைத்து பெருமிதப்படுகிறேன். இன்றைய நாட்களில்  பெண்களோ, மருமகள்களோ வேலைக்கு போவது சாதாரணமாக விட்டன.  தற்போது எங்கள் குடும்பத்திலிருந்து  ஒரு மருமகள் TVயில் கதா காலட்சேபம் பண்ணுகிறதையும் அவ்வப்போது  பார்த்து அனுபவிக்கிறேன். எங்கள் அப்பா தரப்பு குடும்பமும் சரி , அம்மா தரப்பு குடும்பமும் சரி பெரிய குடும்பங்கள்தான். எல்லோரையும் எனக்கு தெரியவில்லையென்றாலும் நேரில் பார்க்கும் சான்ஸ் கிடைக்கும் சமயம் புரிந்து கொண்டு விடுவோம். ஏனென்றால் எல்லோரையும் பற்றி அடிக்கடி பேசுவார்கள்.

அப்போதெல்லாம் TV கிடையாதே ,  ரேடியோஒன்றிரண்டுவீட்டில்தான் இருக்கும். பெண்மணிகள்  வாசலில்  வந்து நிற்பதே பெரிய தப்பு போல பேசுவார்களாம்.   மாட்டு வண்டியில்தான் முத்துப்பேட்டை ஸ்டேஷனுக்கு வந்து ரயிலேற வரவேண்டும். அந்தமாதிரி வாழ்க்கை இப்போதும் பின் தங்கிய கிராமங்களில் இருக்குமோ என்னவோ தெரியாது. என்னுடைய தம்பி அண்ணாவின் கல்யாணமும், என்னுடைய கல்யாணமும்  ஒரே நாளில்  வெவ்வேறு முஹூர்த்தத்தில் 1961 ல் எங்கள் வீட்டிலேயே  சித்தமல்லியில்தான் விமரிசையாக  நடத்தினார் எங்கள் தகப்பனார் ஶ்ரீநாகபூஷணம்ஐயர்.

சித்தமல்லியில் ஒரு வீட்டு வாசல்திண்ணையில்தான்  போஸ்ட் ஆபீஸ் இருக்கும். 3,4 கிராமங்களுக்கு ஒரே ஒரு போஸ்ட்ஆபீஸ்தான் இருக்கும். ஆனால் எந்த செய்தியும் வறண்ட காட்டில்  பற்றிக்கொண்ட மாதிரி பறக்கும்  என்று சாவித்திரி பாட்டியம்மா சொல்வார். எல்லா இடங்களுமே காலத்திற்கு தகுந்தாற்போல் , மாறுவதும் சகஜம்தான்.  சித்தமல்லிக்கும் எத்தனையோ மாற்றங்கள் வந்திருக்கலாம். ஆனாலும் மனம் ஏங்குகிறது சித்தமல்லியில் காலடி வைக்க!!