நம்மில் எத்தனை பேர்களுக்கு நமக்கே பிடித்தமான அல்லது எதிர்பார்த்தது போல வாழ்க்கை அமைந்துள்ளதா என  வாழ்க்கையின் ஏடுகளை திருப்பி பார்த்தால் அளவிட முடியாத ஏமாற்றத்துடன்தான் புத்தகத்தை மூடி வைப்போம். மனித மனத்தை திருப்தி செய்வது என்பதே முடியாத ஒன்று.

ஏனெனில் யாருக்குமே அவரவர் மனம் போல வாழ்க்கை அமைவதில்லை.பெற்றோர்களும் அமைவதில்லை. பெற்றோர்களை நிர்ணயித்து நாம் பிறப்பது என்பது சாத்தியமா? அது மட்டுமில்லை, புருஷனோ, பிள்ளைகளோ, கிடைப்பதில்லை. ஏன் சகோதர சகோதரிகள் அமைவதில்லை. அட, வேலைக்காரனோ, வேலைக்காரியோ கூட கிடைப்பதில்லை. ஆண்டவனின் கணக்கர்கள் வேறுமாதிரியாக நினைத்துத்தான் நமக்கு வெவ்வேறு மாதிரியான மனிதர்களை நம்மிடம்  அனுப்பி நம்மை சோதிக்கிறானோ என நினைக்க வைக்கிறது.
ஆனால் நாம் எவரிடம் எப்படியிருக்க, எப்படியிருந்திருக்க வேண்டும்,என்று எப்போதாவது பிளான் பண்ணி, அதன்படி நடந்தோமா, ஆனால் நாம் பிறரை நமக்காக எத்தனையோ விதங்களில் எதிர்பார்த்து ஏமாற்மடைகிறோம்!
நாம் வீடு வாங்கவே முடியாத காலத்தை நினைத்துக் கொள்வோம் நமக்கென்று ஒருசிறிய வீடாக இருந்தாலும் போதும் என்றும் ஆனால் வீடு ஒன்று கண்டிப்பாக வேண்டும் என நினைப்போம். ஆனால் நமக்கென்று கிடைத்துவிட்டதும் இந்த ரூம் இன்னம் கொஞ்சம் பெரியதாக இருந்திருக்கலாம், கிச்சனில் சாமான்கள் வைத்துக்கொள்ளவும் வசதியாக இல்லை என்று இப்படி ஆயிரம் குறைகள் தோன்றுகிறது. நாமே வீட்டுக்காக லாட்டரி அடித்த நாட்களில் எனக்கு தலைக்கு மேலே ஒரு கூரை இருந்தால் போதும். எலிப்பாழாக இருந்தாலும் தனிப்பாழ் ரொம்ப அவசியம் என்று ஞானப்பால் குடித்தாற்போல் பேசியிருப்போம்.ஆனால் கையில் கிடைத்ததை வைத்து நம் மனம் திருப்தியடையவில்லையே.
வீட்டைபார்க்க அல்லது நம்முடன் தங்கவருபவர்களும் இன்னம் ஒரே ஒரு ரூம் இருந்திருந்தால் உனக்கு மிகவும் சௌகர்யமாக இருந்திருக்கும் என நம்மை பார்த்து பரிதாபம் தெரிவிப்பார்கள், எரிகிற கொள்ளியில் எண்ணையை வார்ப்பது போல. சதா சர்வ காலமும் நம்மைபற்றியே சிந்தித்திருந்தது போல ஒரு நடிப்பு.
இதே போல்தான் பிள்ளைகளின் கல்யாணத்தின் போதும் ஆளுக்கு ஒரு வகையான எண்ணங்களை கிளப்பிவிட்டு வேடிக்கை பார்ப்பார்கள். மனித மனம் சதா அலைபாய்ந்துகொண்டே இருக்கவேண்டுமென்று ஆண்டவன் இட்டிருக்கும் கட்டளைபோலிருக்கிறது என்று கிடைத்ததை முடிந்தவரை சந்தோஷமாக அனுபவித்து வாழ வேண்டும்,  இல்லாவிடில் ஆயுள்தண்டனை மாதிரி உள்ளம் பூராவும் குறைகளாலேயே நிரம்பிவிடும்.