இரண்டு நாட்கள் முன்பு என் பேரக்குழந்தையின் பள்ளியில் பிள்ளைகளுக்கு வயிற்று பூச்சி தடுப்பு மருந்து கொடுக்க பெற்றோரின் பர்மிஷன் கேட்டு நோட்டீஸ் வந்திருந்ததை படித்ததும் எனக்கு நான் வளர்ந்தகாலத்தின் ஞாபகம் வந்தது, நாங்கள் கோடை லீவுக்கு கிராமத்திற்கு வரும் சமயம் ஒவ்வொரு வருடமும் அனுபவித்திருக்கிறோம்.
பிள்ளைகளுக்கு விளக்கெண்ணை கொடுப்பது என்பது ஒரு மத சம்பிரதாயம் போல் நடக்கும். வயிறு முழுக்க பூச்சி நிரம்பி வாய்வழியாகவும் வந்து விடும் என்றும் எங்களை கதி கலக்கி பெரியவர்கள் வெற்றியடைவார்கள். மண்டை உடைகிறாற் போல் சண்டை போட்டு சரண் அடைவோம்.
கிராமங்களில் வயல் வரம்புகளில் ஆமணக்கு செடிகள் வளர்த்து அதனுடைய விதைகளை பறித்துவேகவைத்து, அரைத்து கொதிக்கவைத்து என்னவெல்லாமோ செய்து எங்களுக்கு, ஒருவித கஷாயம் தயாரித்து அத்துடன் விளக்கெண்ணையை கலந்து கொடுப்பார்கள், காலி வயிற்றில். குமட்டி, குமட்டி வாந்தி வந்தாலும் அதை குடித்தேதான் ஆக வேண்டும். குடித்துவிட்டு முற்றத்தில் குதிப்போம், ஆடுவோம், ஓடுவோம், குதிப்போம். வாந்தி எடுத்தால் மறுபடியும் கொடுப்பார்கள். சுமார் ஒருமணி நேரம் ஆகுமோ என்னவோ ஆரம்பித்து விடும் பேதி. பத்து இல்லை பன்னிரண்டு தடவை முடிந்தவுடன் மிளகு ஜீரக ரஸத்துடன் சாதம் கலந்து கொடுத்து சாப்பிட வைத்து வேடிக்கை பார்ப்பார்கள் என நினைக்கிறேன். தயிர், மோர் கிடையாது அன்று. வேறெந்த தின்பண்டங்களும் கிடைக்காது அன்றைக்கு. தயிர் எடுத்துக்கொண்டால் ஜன்னி பிறந்துவிடும் என பயமுறுத்துவார்கள்.
உடம்பு லேசாகிவிட்டாற் போல் இருக்கும். அன்று பார்த்து பிள்ளைகளை தங்கள் கண்ணுக்கெதிரிலேயேதான் வைத்திருப்பார்கள். நாங்கள் வற்புறுத்தி கேட்காமலேயே புராண கதைகளை சொல்வார்கள். எங்கள் யாவருக்கும் வயிற்றை கலக்கி போய்வந்ததும் எண்ணிக்கொண்டிருப்பார்கள் என்று இப்போது நினைக்கிறேன்.
கிராமத்து விளக்கெண்ணை கெட்டியாக இருக்கும். இப்போதெல்லாம் பெரிய ஹாஸ்பிடலில் கூட பிள்ளைபிறப்பிற்கு முன் காஸ்டர்ஆயில் கொடுத்தால் நார்மல் டெலிவரியாகும் என்று நம்புகிறார்கள்,ஆகுமென சொல்கிறார்கள்.
விளக்கெண்ணைக்கு சில நற்குணங்கள் உண்டென்றாலும் அதை வாய்க்குள் ஊற்றிக்கொண்டு திண்டாட்டம் அவசியமே இல்லையோ என நான் நினைக்கிறேன்.
Leave A Comment