வாழ்க்கையை ஆரம்பிக்கும் டயத்தில் இருந்த ஒரு ஜம்பம், நம்பிக்கை, உற்சாகம் எல்லாம் உண்மையாக நிலைக்காமல் போய் விட்டால் மனதில் அவநம்பிக்கை வரும் . அப்படியும் வாழ்க்கையின் எத்தனையோ கட்டங்களை தாண்டி வந்துவிட்டோமென்ற நிலையில், எப்படி வளர்ந்தோம் என்று வாழ்வின் ஒவ்வொரு கட்டத்தையும் எப்படி தாண்டிவந்தோம் என நினைத்து திரும்பி பார்க்கும் சமயம் வரும்போது, அட, நாம் தடுமாறும் சமயம் அதற்குள் வந்து விட்டதே எனவும் தோன்றுகிறது. ஆனாலும் பக்குவப்பட்டு வருகிறோம் என நினைத்து கர்வம் தலை தூக்கும் சமயம் வேறு ஏதாவது வம்புகளில் மாட்டிக்கொண்டு திண்டாட வேண்டிய நிலையும் கிடைத்து விடுகிறது.
நம் வாழ்க்கையில் நடக்கும் எதற்குமே தீர்மானமாக ஒரு முடிவு என்பது கிடையாது. ஒரு காலத்தில் நம்மை புகழ்ந்தவர்களே நம்மை இகழ்வதும் நம் காதில் விழுகிறது. நமக்கு வயதாகி விட்டது நமக்கென்ன வம்பு என மனம் நினைத்தாலும், பேசிப் பழகிய தோழத்தாலும் வாயைக்கொடுத்து வம்பை விலைக்கு வாங்கி கொள்கிறோம். எவரையுமே பற்றி குற்றம் குறைகளை கூறாமல் இருக்க மனதை பழக்கிக்கொள்ள வேண்டும் ஆரம்பத்திலேயே, அப்படியில்லாவிடில் திண்டாட்டம்தான், தினந்தோறும்.
வயது ஏற, ஏற மனமும் தடுமாற ஆரம்பிக்கிறது. மனகிலேசமும் வந்து விடுகிறது. பொறுமை என்பது இமாலயம் அளவுக்கு வளர வேண்டும். ஆசைகள் அடங்கவில்லையேல் எதுவுமே அடங்காது. ஜபம், பூஜை புனஸ்காரங்களும் ஒரு அளவிற்குத்தான் கை கொடுக்கப்பார்க்கும் நம் மனதுடன். அதற்கு தனிப்பட்ட மனோபலம் வேண்டும் . அதிகாரம் செய்தே வாழ்ந்தவர்கள் அடங்கி வாழ்வது என்பதே நடக்காத காரியம்தான். மனது அடங்க வேண்டும் முதலில். அதற்கு பிராக்டீஸ்தான் வேணும். நமக்கு யாரிடம் கோபம் வருகிறது என்றால் நம்மைவிட பலகீனமானவர்களிடம் மட்டுமேதான் ! நம்மை விட துஷ்டைகளிடம் நாம் அடங்கி கிடப்போம்.
நாம் போற்றி பாதுகாத்து வளர்த்த உடம்பு நம்மை ஆட்டி வைக்கிறது. நாம் நல்ல, நல்ல உணவை கொடுத்து வளர்த்த உடம்பு அத்தனை சக்தியையும் இழந்து , இப்போது மக்கர் செய்து நம்மை விழ வைத்து வேடிக்கை பார்க்கிறது. இத்தனை வருட காலம் நம்முடன் ஒத்துழைத்த உடம்பும், மனதும் நம் பிள்ளைகளை விட மோசமாக நம்மை நடத்துகிறதோ எனநினைக்கத்தோன்றுகிறது. ஏன் என்றால் மனது முழுக்க கர்வம் குடி கொண்டிருக்கிறது. யானைக்கும் அடி சறுக்கி விடும் என்பதை மறந்து விடுகிறோம். உடல் நலத்துடன் கூட மன நலத்தையும் நாம் வளர்த்துக் கொள்ள பழக்கி கொண்டு வரவேண்டும். அது நம்மிடையே ரொம்ப குறைந்த ஆட்களிடமே காணப்படும் உயரிய குணம்.
நாம் நம் மனதை நம்கண்ட்ரோலில் வைத்துக்கொண்டு ஆசை, அபிலாஷைகளை அறவே அறுத்து , முடிந்த வேலைகளை செய்து கொண்டு எவரையும் பற்றி குற்றம்,குறைகள் கூறாத மனதை அடைந்து விட்டோமானால் இது சாத்தியமாகலாம். யாருடனும் அவசியமில்லாது பேசாமல் சிறுவ,சிறுமியர்களின் விளையாட்டுகளை பார்த்துக் கொண்டு காலத்தை கடத்த வேண்டும். இத்தனை காலம் வாழ்ந்தது பொய், இனி வாழப்பார்க்கிறோமே அதுதான் உண்மையான வாழ்க்கை.
Leave A Comment