பொய் பேசவே மாட்டோம் என சில பேர் வழிகள் தம்பட்டம் அடிக்காத குறையாக பேசுவார்கள், ஆனால் அவர்களே  பொய்யை தவிர உண்மையே பேசமாட்டார்களோ என நினைக்குமளவிற்கு பொய் பேசுவார்கள். என்றைக்காவது ஒருநாள் ஆபீஸ் போகும் mood இல்லையானால்  பிள்ளைகளை தன்  வாயினாலேயே அப்பாவிற்கு உடம்பு சுகமில்லை, டாக்டரிடம் போயிருப்பதாக சொல்ல சொல்லிக் கேட்டிருக்கிறேன். நேற்றிரவிலிருந்தே அப்பாவிற்கு பேதியாகிறது என்று நம்பும் படியான பொய்யை சொல்ல சொல்லிக்கேட்டிருக்கிறேன். பிள்ளைகளுக்கு நாமே குரு ஆகவும் இருந்து விடுகிறோம். இந்த மாதிரியான அரிசந்திரன்கள்  தன் பிள்ளைகள் பெற்றோரிடம் அல்பமான ஒரு பொய் கூறிவிட்டால், மேலும் கீழுமாக துள்ளுவார்கள்.  சத்யசந்தன் மாதிரி தன்னை விவரித்தால் பிள்ளைகள் பைத்தியமா, என்ன, பெற்றோரின் பேச்சை கேட்டுக்கொண்டிருக்க, இல்லை கேட்டுத்தான் நடப்பார்களா, மதிப்பார்களா? பிள்ளைகள் எதை செய்யக்கூடாது என்று எதிர்பார்க்கிறோமோ அதை எக்காரணம் கொண்டும் நாமும் செய்யக்கூடாது.

மிகவும் யோசிக்க வேண்டிய விஷயம்தான் இது. சின்ன,சின்ன விபரங்களில் கூட பெரியவர்கள் மிகுந்த கவனத்துடன் இருக்கவேண்டும். பிள்ளைகளும் ஒரு வயது வரும் வரை நம்மை போலீஸ் மாதிரி கவனித்து வருவார்கள். ஆண் பிள்ளைகளுக்கு  அப்பாதான் ரோல் மாடல், பெண் பிள்ளைகளுக்கு அம்மாதான் ஹீரோயின் மாதிரி.