கல்யாணங்கள் சொர்க்கத்தில்தான் நிச்சயிக்கப்படுகின்றன எனசொல்வார்கள். பெரியவர்களும் ஒருவனுக்காக பிறந்திருப்பவளுக்கு இன்னெருவன் தாலிகட்டமுடியாது என்றும் சொல்லிக்கேட்டிருக்கிறேன். சிலசமயங்களில் இதெல்லாம் அபத்தமான பேச்சுக்கள் போலத்தான் தோன்றும். எதுவுமே நமக்கு நடந்தாலோ இல்லை, நம்மைசேர்ந்தவர்களுக்கு நடந்தால்தான் நாம் நம்புவோம்.
35 வருடங்களுக்கு முன் நடந்தவை ஆனாலும் நினைத்துப்பார்க்கும் சமயத்தில் மனதுக்கு நம்பும்படியாகவே இல்லை.
என் சிநேகிதியை பெண்பார்க்க வரப்போவதாக அவர்கள் வீட்டில் அமர்க்களமாக டிபன், காப்பி மற்றும் வேண்டியவைகளையெல்லாம் ஏற்பாடுகள் செய்து கொண்டிருந்தார்கள். பெண்பார்க்க வரும் பிள்ளைவீட்டார் வெகு தூரத்திலிருந்து வருவதால் கூல்ட்ரிங்க்ஸ் வரவழைத்து தடபுடலாக ஏற்பாடுகள் நடந்தது. பிள்ளை வீட்டார் ராகுகாலத்தில் பக்கத்து வீட்டில் வந்து இறங்கி தங்களை ஆசுவாசப்படுத்திக்கொண்டு உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தார்கள்.
பக்கத்து வீட்டு பெண் டீச்சராக பள்ளிக்கூடத்தில் வேலை செய்துகொண்டிருப்பவள், தன் வேலைமுடிந்து வீடு திரும்பியிருக்கிறாள். அந்தவீட்டிலிருந்தவர்கள் யாவரும் மற்றும் பெண்பார்க்க வந்திருந்தவர்கள் எல்லோருமாக பேசிக்கொண்டிருந்திருக்கிறார்கள். பெண் பார்க்க வந்த பையன் பக்கத்து வீட்டுக்கு போய் பெண்பார்க்கும் அவசியமில்லை, இந்த டீச்சர் பெண்ணையே தான் விரும்புவதாக கூறி ராகு காலத்திலேயே கல்யாணம் பற்றி பேசி நிச்சயித்து மூன்று மாதங்களில் கல்யாணம் நடந்து சுமார் முப்பத்தைந்து வருடங்கள்அமோகமாக வாழ்ந்து மறைந்தார். இந்த சம்பவத்தை நினைக்கும் சமயம் ராகுகாலத்தை நாம்தான் தப்பான கணக்கு போடுகிறோமோ என தோன்ற வைக்கிறது.
Leave A Comment