மனித ஜன்மத்திற்கு தனக்கென்றே திருப்தி என்பது இருப்பதேயில்லை. சின்ன, சின்ன விஷயங்களில் கூட மனதில்  திருப்தி கிடைப்பதேயில்லை. ஏனென்றால் நம் திருப்தி பிறர் நம்மைப்பற்றி , நம் சாமர்த்தியத்தை பற்றி  புகழ்ந்தால்தால்தான் நமக்குள் திருப்தி ஏற்படுகிறது. பிற மனிதர்கள் நம்வேலைகளை இல்லை,   நம்கலை ரசனைகளை பற்றி  பிறர் நம்மைப்பற்றி உயர்வாக பேசும்போதுதான்  சந்துஷ்டி ஏற்படுகிறது.

புதியதாக எது ஒன்றை வாங்கினாலும் சரி,  ஏதாவது ஒரு வேலையை நாம் எடுத்துக்கொண்டு செய்தாலும் சரி பிறர் அதை புகழ்ந்தால்தான் நமக்குள் ஒரு மகிழ்ச்சியேற்படுகிறது.  நம் மனம் புகழ்ச்சிக்காக ஏங்குகிறது, அது  என்னவோ வாஸ்தவம்தான்.

உங்களுக்கு பிடித்துசெய்வீர்களோ இல்லையோ, வேறு யாரோ நம் வேலைகளைப்பற்றி புகழ்ந்து  பேசி விட்டால் உச்சி குளிர்ந்து போய் , இன்னம் செய்து பெயர் எடுக்க ஆசைப்பட்டு அதிகமாக உழைக்க ஆரம்பித்து விடுவோம்.

எத்தனையோ பணம்செலவு  செய்து பெண் கல்யாணத்தை முடித்திருப்பார்கள்,பெண் வீட்டார் . ஆனால் கல்யாணம் முடிந்து வெற்றிலை பாக்கு கொடுத்து விடை பெறும்போது பெண்வீட்டார் பிள்ளை வீட்டாரிடம் எல்லாம் திருப்தியாக இருந்ததா என கேட்பதும் ஒரு பழக்கம். பிள்ளைவீட்டார் பரம திருப்தி என்று பதிலளிப்பார்கள் பேச்சுக்காக. திருப்தி என்பது ஆத்மார்த்தமாக வரவேண்டிய ஒன்று. எதைக்கொடுத்தால் மனிதன் திருப்தியடைவான்?

இதே போல சிரார்த்தம் முடிந்த பிறகும் சாஸ்திரிகளிடம் கேட்பதும் ஒரு பழக்கம் உண்டு, எல்லாம் திருப்தியாக இருந்ததா என்று. பார்க்கப்போனால் பாதிக்குமேல் மேல் பூச்சுக்காக மட்டுமே  கேட்டு, பதில் வாங்கிகொள்வதற்கே  ஆஹா,  நம்மிடம் எல்லோருமே பரம திருப்தி  அடைந்து  விட்டதாக நினைத்து நம்மை நாமே ஏமாற்றிக்கொள்வதாக  தோன்றும் .

அவரவர்க்கு  பிறரால் எந்த விவகாரத்திலும் திருப்தி ஏற்பட்டவுடன் அவர்களாகவே முன் வந்து  நீங்கள் செய்தவைகள் எனக்கு / எங்களுக்கு / எங்கள் குடும்பத்தினருக்கு  மிகவும் திருப்திகரமாக இருந்தது என்பதை தெரிவித்தால்தான் முறையாகும்.