என்னுடைய சகோதரியின் வீட்டிற்கு விருந்தாளிகள் வரப்போவதாக கேட்டதும் அக்காவிற்கு கையும் காலும் ஒடவில்லை . ஏனென்றால்  அவளுடைய கணவர் வெளியூரில் இருந்தபடியால் இரண்டு அல்லது மூன்று மாதம் ஒரு முறைதான் வீட்டிற்கு வருவார். அன்றுகாலைதான் அவர் வந்திருக்கிறார்.

அவளுடைய இரண்டு வளர்ந்த பிள்ளைகள் வெளியூரில் வேலை, படிக்கப்போனவர்களும் லீவில் வந்துள்ளார்கள். வீடு ஒரே அமர்க்களமாக  இருந்திருக்கிறபடியால்  சகோதரி கடையிலிருந்து மிக்சர், முறுக்கு வாங்கி வரச்சொல்லி ஏற்பாடு செய்து விட்டு வீட்டில் கேசரி செய்து முடித்து வைத்துவிட்டு எடுத்துக்கொடுக்க தட்டுகள் ,ஸ்பூன்கள் , வந்தவர்களுக்கு தாம்பூல பாக்கெட்டுக்கள் எடுத்துவைத்துவிட்டு தானும் டிரஸ் மாற்றிக்கொண்டு ரெடியாகி விட்டாள், விருந்தினரை வரவேற்க. அவர்களும் வந்து ஜாலியாக பேசிக்கொண்டு இருந்தார்கள்.  டிபன், காப்பியும் கொடுத்து உபசரித்தும் விட்டாளாம். விருந்தாளிகள் கிளம்பியதும் நாம் எல்லோருமாக சாப்பிடலாமென்று முடிவு செய்திருந்தபடியால், யாரும் டிபன் சாப்பிட வில்லையாம். வந்திருந்த விருந்தாளிகளும் தாம்பூலம் பெற்று கிளம்பும் சமயம் பெரியவர் சொல்லியிருக்கிறார், எப்போதுமே எந்த தின்பண்டம் செய்தாலும் முதன்முதலில் வீட்டில் யாரிடமாவது டேஸ்ட் பண்ண சொல்லி , தன் பின் விருந்தினருக்கு உபசாரம் செய்யுங்கள் எனக்கூறி விடை பெற்றுக்கொண்டு சென்று விட்டார்களாம்.

வீட்டு மனிதர்கள் சாப்பிட்டபின்தான் அவர்களுக்கு தெரியவந்தது ,  கேஸரியில் சர்க்கரையே இல்லாமல் செய்துவிட்ட விஷயம்.  மனது வேதனைப்பட்டு அவர்களுக்கு போன் செய்து பேசி மன்னிப்பு  கேட்டதற்கு , தவறுகள் நடந்து விடுகிறது . அதனால் என்ன எனக்கூறி போனை வைத்துவிட்டார்களாம். மனிதர்களில் எத்தனை விதம் உள்ளார்கள். வருடங்கள் ஓடி விட்டாலும் ,எத்தனை பெருந்தன்மையுடன் நடந்து கொண்டுவிட்டார்கள், என்பதை இன்றுவரை பேசிக்கொள்வோம் , எங்கள் குடும்பத்தில் இருப்பவர்கள்.

 

 

 

 

 

 

.