முன் காலத்தில் இத்தனை சௌகர்யங்கள் இல்லாதிருந்த போது கூட பிள்ளைகளுக்கு இத்தகைய அவஸ்தைகள் இருந்திருக்கவில்லையோ! இந்நாட்களில் பிள்ளைகளுக்கு சுதந்திரமான வாழ்க்கை போல பார்ப்பதற்கு தோன்றுகிறது. ஆனால் உண்மையில் பிள்ளைகளுக்கு மன அழுத்தமும், மன இறுக்கமும் அதிகமாகி விட்டதாக நினைக்கிறேன்.
அம்மாவிற்கோ,அப்பாவிற்கோ பிள்ளைகளிடம் பேச நேரமில்லை. பெற்றோருக்கு பிள்ளைகளிடம் விளையாட நேரமில்லை. இன்றைய நிலையில் பெற்றவர்கள் இருவரும் சம்பாதிக்க ஓடவேண்டியதாகி விட்டது. காலையில் கண் விழிக்கும் போது அம்மாவும்,அப்பாவும் அரக்க, பரக்க அங்குமிங்குமாக வீட்டுக்குள்ளேயே சடுகுடு விளையாடுவது போல் ஓடியாடி வேலையை முடித்து கொண்டு வீட்டை விட்டு கிளம்பி ஓட முயன்று கொண்டிருக்கும் அந்த சமயத்தில் பிள்ளை எது சொன்னாலும் காதில் ஏறாதே. அது பிள்ளைகளுக்கு ஏமாற்றத்தையே அளிக்கும். பள்ளியிலிருந்து நேராக மத்யானத்தில் Chrecheல் போயாக வேண்டும் பிள்ளைகளுக்கு. பள்ளி விட்டு வந்து சூட்டோடு சூடாக தன் பள்ளி அனுபவங்களை பெற்றோருடன் பங்கிடமுடியாமல் ஏமாற்றம் ஆகிவிடுகிறது.
chrecheல் போய் மற்ற பிள்ளைகளைப்பார்த்து அழுபவர்களை பார்த்ததும் சிலர் தூக்க கலக்கத்தில்,அழுவதா இல்லை தூங்கி விடலாமா என இரு மனதாக யோசித்துக்கொண்டிருக்கும்போதே பசிக்கு சாப்பிட வேண்டுமே என அம்மா கொடுத்ததை ஆயா சுட வைத்து தந்தவுடன் சாப்பிட்டோம் எனபெயருக்கு வாயில் போட ஆரம்பித்தவுடன் தூக்கம் கண்ணை சுற்றும். ஒரு கெட்டியான அதட்டும் குரலின் சத்தம் கேட்டதும் , வாயில் அள்ளி போட்டுக்கொண்டு வாய் கழுவி துடைக்கும் போதே சில பிள்ளைகள் தூங்க ஆரம்பித்து விடுவார்கள்.
சாயங்காலமானதும் பிள்ளைகள் அம்மாவை, அப்பாவை எதிர்பார்த்து உட்கார்ந்திருப்பார்கள். அவர்கள் வரும்போதே தலைவலியுடன் வந்தால் அன்று பிள்ளைகளுக்கு மனக்கஷ்டம்தான் இருக்கும். விளையாட்டு இருக்காது. படிப்பை வேறு கவனிக்க வேண்டியதாகி விட்டால் வேறு வினையே வேண்டாம். அடுத்தநாள் போராட்டத்திற்கு ரெடி செய்து கொள்ளவேண்டும்.
இந்த நாட்களில் இப்படியாக வெவ்வேறு விதமான போராட்டங்களில் பெற்றோர்களும் பிள்ளைகளும் மாட்டிக்கொண்டிருப்பதை பார்த்தாலும், கேட்டாலும் பார்ப்பவர் மனதும் வேதனையடைகிறது. இத்தனை தியாகங்களை பெற்றோர் செய்திருந்தாலும் பிள்ளைகளுக்கு திருப்தியிராது. பிள்ளைகள் பெரியவர்களானதும், எங்களுக்காக என்ன செய்தீர்கள் என்றும் கேட்பார்கள்.
பிள்ளைகளுக்கு Checheல் தூங்கியதுதான் ஞாபகத்தில் இருக்கும். நம் மடியில் போட்டுக்கொண்டு பாட்டுப்பாடி தூங்கவைத்தது மறந்துவிட்டிருக்கும்.
பணமிருந்தால் ஒருவிதமான பிரச்னைகள், பணமில்லாவிட்டால் பலவிதமான பிரச்னைகளுடன் காலத்தை ஓட்ட வேண்டியதாயுள்ளது. ஏனென்றால் இதிலிருந்து தப்பித்து நாம் யாருமே எங்கேயுமே போக முடியாதே? வாழ்க்கையை வேறுவிதமாகவும் நினைத்துப்பார்க்க டயமேயில்லை.
Leave A Comment