வாழ்க்கையில் சுகமாக இருப்பதும், துக்கத்தில் மூழ்கியிருப்பதும் ,எதுவுமே நம் வசத்தில் இல்லையென சொல்லிக்கொண்டும், உழன்றுகொண்டும் இருப்பினும் , சில சமயங்களில் மனது உடைந்து போய்விடுகிறது . எந்த கஷ்ட நஷ்டத்திற்கும், யாரை குற்றம் சாட்டலாமென்றும் காரணம் காட்டி மனதை தேற்றிக்கொள்ளலாமென்று நினைப்பதை தவறாகவே நினைக்க வேண்டும் . ஏனெனில் தவறான வழியை நானே தேர்ந்தெடுத்தேன், என்று நினைத்தோமானால், தவறைத்திருத்திக்கொண்டு வாழ முடியும். நான் தவறே செய்ததில்லை, செய்யவும் மாட்டேன் என்று சபதம் எடுத்துக் கொண்டாற்போல பேசுபவர்களிடம் , எதை பற்றி பேசினாலுமே , நம் மனதைக் கெடுத்துக்கொண்டு தான் ஆகவேண்டும். நான் பிடித்த முயலுக்கு மூன்றே கால்கள் தான் உள்ளது , என்று சாதிப்பவர்கள் எத்தனையோ பேர்கள் இருக்கிறார்கள். நம்மையும் தர்மசங்கடத்தில் ஆழ்த்திவிடுவார்கள். நம்மைவிட வயதில் குறைந்தவர்களாக இருந்தால், வாயைமூடு என்று ஜாடையாவது காண்பிக்கலாம். சம வயதோ இல்லை பெரியவர்களாகவோ இருந்துவிட்டால், கேட்கவே வேண்டாம். பெரியவர்கள் என்பதனால் அவர்கள் எப்போதுமே கரெக்டாக இருக்கமுடியாது , என்பதை புரிந்து கொள்ளாமல் இருக்கின்றதும் ஞான சூன்யத்தின் அடையாளம்தான்.
Leave A Comment