இது நடந்து எத்தனையோ வருடங்கள் உருண்டோடி விட்டன. ஆனாலும்  என் மனதில் மறையாத, மறக்கமுடியாத விஷயங்களில் இதுவும் ஒன்று.

என் அப்பாவும், அவருடைய அத்தைபிள்ளையும், சுவாமி மலை கோயில் கும்பாபிஷேகத்திற்கு போவதற்காக காரில் கிளம்பிக்கொண்டிருக்கும் சமயம் நானும் வருகிறேன் என சொன்னதும் TKS அத்தான், குழந்தையும் வரட்டும் என கூறிவிட்டபடியால் என் அப்பாவினால் மறுத்து பேச  முடியாது ஆகிவிட்டது.

அந்தநாட்களில் கிராமங்களில் கார் வந்தால் பெரியவிஷயமே. எங்களைப்போன்ற விளையாட்டு பிள்ளைகள்காரை சுற்றி,சுற்றி ஓடி விளையாடுவோம். அன்றிரவு அவர் எங்கள் வீட்டில் தங்கி விடியற்காலை கிளம்ப பிளான் செய்து விட்டு படுக்கசெல்லும்போது, நானும் எப்படியாவது அவர்களுடன் போய் வரலாம் என மனதில் தீர்மானித்தது இன்னம் ஞாபகத்தில் உள்ளது. எனக்கு 6, 7 வயதிருக்கும்.                                                     காஞ்சி மஹாபெரியவா கும்பத்திற்கு அபிஷேகம் பண்ணப்போவதாக பேசிக்கொண்டிருந்ததையும் கேட்டிருந்தேன். என்னுடைய ஆவல் அதிகரித்து விட்டிருந்தது. பார்த்தே ஆகவேண்டுமென நினைத்தேனோ என்னவோ, விடியற்காலை அவர்கள் கண்விழித்து வீட்டிற்குள் நுழைந்தவுடன், நானும் கண் விழித்துக்கொண்டு அப்பாவிடம் என் ஆவலை வெளிப்படுத்தியவுடன் மறுத்து விட்டார். அத்தான் குளித்து முழுகி வந்தவுடன், அப்பாவிடம் மறுபடி கேட்டேன்,  அத்தானுக்கு எதிரில். உடனே அத்தான் கண்ணம்மாவும் வரலாமே எனக்கூறியதும் அப்பாவும் மறுக்க முடியாமல் சம்மதம் அளித்தார். விடியற்காலையில், குளித்து ,பொட்டு வைத்து, புதிய  உடை உடுத்தி கொண்டு , சில நிமிடங்களுக்குள்  நானும் ரெடியாகி நின்று விட்டேன், கார் சவாரியின் மகிமையை அனுபவிக்க. வீட்டுக்கு வந்த விருந்தினர்களுக்கு எதிரில்,  வீட்டார் ,  பிள்ளைகளை கோபித்து துரத்தமாட்டார்கள்  என்ற அவர்கள் பலவீனத்தை நான் உபயோகப்படுத்தி  கொண்டதாகத்தான் நான் வளர்ந்த பின் நினைத்து பார்த்தேன்.

தூங்கி வழிந்துகொண்டு  கும்பகோணம் போய் சேர்ந்து , ஹோட்டலில் காப்பி குடித்து விட்டு சுவாமிமலை ஏறினோம். கூட்டம்,கூட்டம் தாங்க முடியவில்லை. அந்தகால ஆண்கள் பிள்ளைகள் என்றாலே மிகவும் அலட்சியமாகவேதான் நடத்துவார்கள். அதிலும் பெண்பிள்ளை என்றால் குப்பை மாதிரிதான்.    திடீரென்று எனக்கு முன்னால் போய் கொண்டிருந்த பெரியவர்கள் இருவரையும் காணவில்லை. பிஞ்சு மனமானதால் பலூன்கள், விளையாட்டு சாமான்களைப்பார்த்து மயங்கிநின்றேனோ, என்னவோ எனக்கு தெரியவில்லை, என் மனிதர்கள் எங்குபோனார்கள் என்று.   ஆகையால் நான் கூட்டம் எந்த பக்கம் போய்க்கொண்டிருந்ததோ, அதே பக்கமாக நானும் நடந்து போய்க்கொண்டிருந்த சமயம், ஏ,பிள்ளை,என்று காக்கி யூனிஃபார்ம் போட்டுக்கொண்டு, ஒருபையன் தலையில் தொப்பி வைத்துகொண்டும், நீ, யாருடன் வந்திருக்கிறாய் எனக்கேட்டதும், பட்டென்று பதில் அளித்தேன், என்னுடைய அப்பா,அத்தானுடன் என்று.  என்ன பிள்ளை கல்யாணமாயிடிச்சா, உனக்கு ? இல்லை என்றவுடன், அந்த அத்தான் யார்? என்றுகேட்டார். எங்கவீட்டில் நாங்க எல்லோருமே அவரை அத்தான் என்றுதான் சொல்வோம் என கொஞ்சம் முறைத்தாற் போல் சொன்னேன். பிறகு எந்த ஊர்,கூட வந்தவர்கள் பெயர்கேட்டதும், அப்பா பெயர்சொல்லி ,அத்தான் என்று சொன்னபின் நான் மேலே நடக்க ஆரம்பித்தவுடன் சொன்னார், நீ இந்தகூட்டத்தில் அவர்களிடமிருந்து பிரிந்து காணாமல் போய் விட்டாய் என்றதும், நான் எங்கே காணாமல்   போனேன், அப்பாவும்,அத்தானும்தான் காணவில்லை, நான்தான் இதோ நிற்கிறேனே என்றேன். அதன் பின் என்னை அவர்களிடம் ஜாக்கிரதையாக ஒப்படைப்பது அந்தகாக்கி உடை அணிந்தவர்களின் வேலை என்றும்,என் அப்பாவையும், அத்தானையும் தேடி, என்னை என் அப்பாவிடம் ஒப்படைக்கும் பொறுப்பு தங்களுடையதே என மறுபடியும் எனக்கு உத்திரவாதம் அளித்து என்னை ஒரு நாற்காலியில் உட்கார்த்தி வைத்துவிட்டு மைக்கில் என்அப்பாவின் பெயர் கூப்பிட்டு, என் பெயர் ,மற்றும் எங்கள் ஊர் பெயர், நான் உட்கார்ந்திருக்கும் இடம் சொல்லி அவரை நான்இருக்குமிடத்திற்கு, வந்து அழைத்துப்போக கூறினார்கள் உடனடியாக பத்து இல்லை , இருபது நிமிடங்களில் அவர்களிருவரும் வந்து என்னை அழைத்துப்போனதை இன்று நினைத்தாலும் புல்லரிக்கிறது.

காலங்களின் மாற்றத்தை எண்ணி வியந்துபோகிறேன். எத்தனை விதமான விகாரமான மனது இன்றைய ஆண்களிடம் ஏற்பட்டுவிட்டது .  மனதில் எந்த கபடமுமே அறியாத பிஞ்சுகளை கூட கசக்கி எறிந்து விடுகிறானே மனித மிருகம்.