பள்ளிவிருத்தி என்ற சிற்றூர்தான்என்அம்மாவின் பிறந்தகம். தஞ்சை ஜில்லாவில் உள்ளது. தாத்தா, பாட்டி , மாமா,மாமி வாழ்ந்து மறைந்த ஊர். அவர்களுடைய வீட்டின் அமைப்பே மிகவும் அழகானது என்பதில் சந்தேகமேயில்லை.

அந்த வீட்டிற்கு பின்புறம் சுமார் 50 மீட்டர் தூரத்தில் ஆறு ஒன்று ஓடிக்கொண்டிருக்கும் . அந்த ஆற்றில் வெள்ளம் வந்துவிட்டால் வீட்டிற்குள் தண்ணீர் புக முடியாதபடி பாறாங்கற்களினால் அஸ்திவாரம் அமைத்து உயரமாக கட்டிய வீடு அது. பின்புறத்திலிருந்து அந்த வீட்டைப்பார்த்தால் அந்த வீட்டினுடைய பின்பகுதியில் ஒன்பது,பத்து படிக்கட்டுகளின் மேல் வீடு நிற்கும். வீட்டிற்கு மூன்று பக்கங்களிலும் மிகவும் அழகாக இருக்கும். வீட்டிலிருந்து நின்று கொண்டு பார்த்தால்பின்னால் ஒரு ஐம்பது அடி தூரத்தில் ஹரிச்சந்திரா என்னும் பெயரில் ஒரு ஆறு ஓடிக்கொண்டிருக்கும். அந்த ஆற்றின் நடு மையத்த்தில் ஒரு தீவு காணப்படும் அந்த தீவின் நடுவில் அரச மரம் ஒன்று வளர்த்திருப்பார்கள். அரச மரத்தை சுற்றி,கல்லால் ஆகிய சிலைகளை வைத்து,பெரியவர்கள் பூஜை செய்வதையும் பார்த்திருக்கிறேன். அந்த காட்சி மனதிற்கு ரம்யமாகவும் இருக்கும். அதே போல் வாசல் பக்கத்தில் போனால் இடதுபுறம் வரதராஜபெருமாள் வீற்றிருக்கும் பெருமாள் கோயிலை தரிசிக்கலாம்.   அவர்களுக்கு தேவையான நெற்பயிரை தவிர, வாழைக்கொல்லைகளும் இருந்தது. கொல்லையில் தென்னைமரங்கள், வாழைத்தோப்பும் இருந்தன. பள்ளிவிருத்தியின்  வயல்வரப்புகளில்கூட, உளுந்து, பயறு போன்ற தானியங்களும், வருடத்திற்கு வேண்டிய புளி, மஞ்சள், இஞ்சி ,கருணைக்கிழங்கு, முதலிய இதர கறிகாய்களும் உற்பத்தி செய்வார்களாம் .

வலதுபுறம் பட்டாமணியார்,கணக்குபிள்ளை போன்றவர்களின் வீடுகளும், மற்றும் கிராமத்தில் வாழ்ந்த மனிதர்களுடைய குடும்பங்களும் வாழ்ந்து வந்தார்கள். காவேரிக்கரையில் அந்த கிராம்ம்,  நல்ல செழிப்பாகவே இருந்திருந்தது என்று வீட்டுப்பெரியவர்கள் பேசியும் நான்கேட்டிருக்கிறேன்.

நாங்களும் கோடைலீவில் தாத்தா வீட்டிற்கு போய் எல்லோருடனும் விளையாடி,உல்லாசமாகவும்,நேரத்தை செலவிட்ட ஞாபகமும்  இருக்கிறது.  பழையநாட்களை நினைத்துப்பார்த்தால் இப்படிக்கூட இருப்பதற்கு அதிர்ஷ்டம் இருந்தால்தான் கிடைக்கும் எனவும் நினைத்துக்கொள்கிறேன் .

எதற்குமே ஆரம்பம் என ஒன்று இருக்கும்போது முடிவு என்பதையும் ஒத்துக்கொண்டே ஆகவேண்டும் என்பதுதான் ஆண்டவனின் கட்டளை என முடித்துவிடுகிறேன்.