பெற்றோர்கள் எத்தனை பெரிய படிப்பு படித்து, உயர்ந்த பதவியிலிருந்தாலும், பிள்ளைகளின் மனதை புரிந்துகொண்டு மனம் விட்டு பேசாமல்  வாழ்ந்தால், பெற்றோர்கள், பிள்ளைகளுக்கு நடுவில் இடைவெளி வந்தே தீரும். அதே போலவே, பிள்ளைகளும் பெற்றோர் தங்களுக்காக செய்திருக்கும் தியாகங்களை துளிக்கூட நினைத்துப்பார்க்காமல் செயல் பட்டாலும் மன கஷ்டமே மிஞ்சும், என்பதில் சந்தேகமேயில்லை. இதில் வேடிக்கை என்னவென்றால் இருவர் மனதிலும் எந்த விதமான வேறுபாடுகளும் இருக்காது, ஆனாலும் மனம் திறந்து பேசி பழக்கமில்லாத காரணத்தால், இந்த மாதிரியான ஒரு வேறுபாடு வருகிறது.

பெற்றோர்கள் தாங்கள் செய்த தியாகங்களையே நினைத்து தங்களை, பிள்ளை/பிள்ளைகள் கவனிப்பது போதவில்லை என்று மனதிற்குள் குமைந்து கொண்டிருப்பார்கள். பிள்ளகளோ, பெற்றோர்கள் தங்களுக்காக செய்யாமலிருந்தவைகளையே நினைத்து பொருமுவார்கள்.பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்காக தாங்கள் செய்த தியாகங்களை நினைத்து, பேசி உருகுவார்கள். பிள்ளைகளோ பெற்றோர்கள், பிள்ளகளுக்காக செய்தவைகளை,பெற்றவர்களின் கடமையைத்தான் செய்ததாகவும் நினைக்கிறார்கள்.இதுதான் இன்றைய தேதியில் உலக நியதி.

இந்த சண்டை  நேற்று இன்று ஏற்பட்டது அல்ல, எத்தனையோ காலங்களாக நடந்துவரும் ஒன்றுதான். இராமர் தந்தைசொல் தட்டாத தனயன் என்று சொல்வார்கள்,படித்திருக்கிறோம். ஆனால் ராமாயண காலத்தில் நடந்தவைகளை பார்த்தவர்கள் யார் என்று இன்றைய பிள்ளைகள் கேட்கிறார்கள். நாம் துர் விவகாரங்களை விலக்கி நல்ல விவகாரங்களை போதித்து வளர்க்கலாமென்று நினைத்தால் ஆயிரம் கேள்விகள் எழுகின்றன. பதில் கூற நம்மால் ஆகாது.  நல்லவர்களாக வாழ வேண்டுமென நினைத்தால் கஷ்டப்பட்டேதான் காலத்தை ஓட்டவேண்டும். பத்தாயிரத்தில் ஒரு குடும்பத்தில் மனவித்யாசமில்லாது இருந்தால் அரிது.

மனிதர்களுக்கு ரெடிமேடாக எல்லாம் கிடைத்துவிடுகிறபடியால் அதன் உற்பத்தி ஸ்தானம்,  அதாவது ஆரம்பிக்குமிடம் தெரிவதில்லை. தெரிந்தாலும் ஒத்துக்கொள்ள தயாராக இல்லை.