பழக்கங்கள் என்று பார்க்கும்போது, நாம்தான் நம்மையறியாமலேயே,அடிமையாகி விடுகிறோம் சில பழக்கங்களுக்கு.

புத்தகம் படிக்காமல் தூக்கம் வராது ஒரு சிலருக்கு. இரவில் தூங்கி காலை கண்விழித்தவுடன் காபியோ, டீயோ குடித்தால்தான் மேற்கொண்டு வேலையில் ஈடுபட மனம் வரும்,பலருக்கு. டிவி சீரியலுக்கு பலர் அடிமை. நியூஸ் பேப்பர் பார்க்காமல் ஒருசிலரால் இருக்கவே முடியாது, என்றிருந்தாலும்,அவர்களுக்கு பேப்பர் கையில் கிடைக்காவிட்டால் பக்கத்தில் யாராவது பேப்பர் படித்துக்கொண்டிருந்தாலும் தானும் அவர்களை ஓட்டினாற் போல் உட்கார்ந்துகொண்டு,அவர்கள் மேல் மூச்சுக்காற்று விட்டுக்கொண்டு படிப்பார்கள். பக்கத்தில் பேப்பர் படித்துக்கொண்டிருந்தவர் மனம் வெறுத்துபோய் பேப்பரை அந்த அடிமையின் கையில் கொடுத்து விட்டு அந்த இடத்திலிருந்து தள்ளிப்போய்விடுவார்.

ஒரு சிலருக்கு இடம் மாறி படுத்தால் தூக்கம் வராது, இதுவும் ஒரு அடிமைதனமே. அப்படி ஒருவருக்கு தலை சாய்த்ததும் தூக்கம் வருபவர்களை பார்த்தால், புதிய இடத்தில் படுத்தால் தூக்கமே வராதவர்களின் மனம் எப்படி வெறுத்தும் விடும்,என்று யோசித்து பாருங்கள்.
யாரையாவது குற்றம் குறைகளைக்கூறிக்கொண்டே நாட்களை நடத்தும் அடிமை ஆட்கள் இருக்கிறார்கள். சண்டைபோட்டால்தான் சில அடிமை பேர்வழிகளின் நாட்கள் நகரும். பொய்களை பேசியே பல அடிமைகள் காலத்தை ஓட்டுகிறார்கள். சிலர் தன்னால் முடியாத வேலையே உலகில் கிடையாது என்று காண்பித்துக்கொண்டு எதையுமே செய்ய வழிதெரியாமல் நிற்பவர்களையும் பார்க்கிறோம். காலத்தை வெட்டிப்பேச்சு பேசியே கடத்தும் பேர்வழிகளாக திரியும் நபர்களையும் நாம் பார்க்கிறோம்.இதெல்லாமே பழக்கதோஷமேதான். பழக்கத்திற்கு அடிமைபட்டவர்கள் எட்டுதிக்கிலும் தென்படுவார்கள்.

நமக்கு நூறு மனிதர்கள் நண்பர்கள் கிடைத்துள்ளார்கள் என்று நினைத்தால் வடிகட்டி பத்துஆட்கள்தான் உண்மையான நல்ல குணாதிசயங்களுடன் இருக்கிறார்கள். யாரையாவது காலை ஒன்பதுமணிக்கு ஒருஇடத்தில் சந்திக்க பிளான் செய்தோமானால் பத்து மணிவரை வரமாட்டார்கள். டயத்தின் மதிப்பு தெரியவில்லையே என மற்றவருக்கு கோபம் வரலாம். சிலர்இருக்கிறார்கள், பணத்தை கடனாக வாங்கிவிட்டு அதை பற்றியே அவர்கள் அடியோடு மறந்துவிட்டாற் போல் இருப்பார்கள். எல்லோரையும் நம்பியும் நம்மால் காலத்தை ஓட்ட முடியாது, நம்பாமலும் வாழமுடியாது. நம் சிநேகம் செய்து கொள்ளும் சமயம் வேறு மாதிரியிருப்பார்கள். நன்கு பழக ஆரம்பித்தபின் வேறு மாதிரியாக இருக்கிறார்கள்.மனித சுபாவம் மாறிக்கொண்டுதான் இருக்கும் என்று தெரிந்தாலும் சிலருடைய சுபாவம் மாறி,மாறி போவது சுத்தமாக ஒத்து வருவதில்லை.
அவரவர் பழக்கங்களுக்கு அவரவர் அடிமை.அதிகாலை தூக்கத்தை நிறைய ஆட்கள் தியாகம் செய்ய தயாராக நிறைய ஆட்கள் எதற்காகவும்,யாருக்காகவும் விட்டுக்கொடுக்கவே மாட்டார்கள். இவர்கள் சுய அடிமைகள்.தான்பிடித்த முயலுக்கு மூன்றேகால்கள் என்கிற மாதிரி பேசுவார்கள்.எத்தனை சொன்னாலும் பிறர் பேசுவதையே காதில் வாங்காமல், தன் குரலை உயர்த்தி உரக்க பேசி, கூறியதையே மாற்றி,மாற்றி பேசி குழப்பி விடுவார்கள்.அப்படி ஒருபழக்கத்திற்கு அடிமையானவர்கள் அவர்கள்.

ஒரு சிலருக்கு தன் தவற்றை மறைத்துக்கொண்டு வாழ, யார் பேரிலாவது குற்றப்பத்திரிகை வாசித்தவண்ணம் இருப்பார்கள்.இதுவும் ஒரு பழக்கத்திற்கு அடிமையானவர்கள்தான்.சுமாரான புத்தியை கொண்ட மனிதர்கள் கிடைத்தாலே போதும், அதி புத்திசாலிகள் கிடைத்துவிட்டால் நாம் தொலைந்தோம். இப்படியாக பலதரப்பட்ட மனிதர்கள் வெறும் பழக்கங்களுக்கு அடிமையாகி தன்னையும் குறைத்துக்கொண்டு பிறரையும் கலக்கி குழப்பி விடுகிறார்கள்.