நம் வாழ்வில், நாம் எதிர்கொண்ட சில சம்பவங்களை நம்மால் மறக்கவே முடிவதில்லை. அதிலும் நமக்கு ஆனவைகளை விட பிறருக்கு நடந்தவைகளை நம்மால் மறப்பது என்பது முடியாத வேலைதான். சுமார் நாற்பத்தைந்துவருடங்கள் முன்பு நடந்தவைதான் என்றாலும் இப்போது நினைத்தாலும் சிரிப்பு வரும்.

என் கணவர் வேலை செய்த இடம் வீட்டிலிருந்து இருபத்தைந்து கிலோமீட்டர் தூரத்தில் இருந்தது. வசதியான ஆபீஸ் பஸ் வீட்டருகில் வந்து ஏற்றி செல்லும். அன்றும் வழக்கம்போல் ஆறு மணிக்கு குளித்தபோது,காதுக்குள் நீர் போய் விட்டது போல் இருக்கிறது. ஆகையால் பஞ்சு இருந்தால் கொடு என்றார். அன்றைக்கென்று வீட்டில் பஞ்சு இருந்திருக்கவேயில்லை. அவர் ஆபீஸுடன் பாக்டரியும் இருந்ததால் பாக்டரி ஹாஸ்பிடலில் கேட்டு பஞ்சு வாங்கி கொள்கிறேன் எனக்கூறி கிளம்பி விட்டார். ஆபீஸ் போய் சேர ஒருமணி நேரமாவது ஆகும். ஆபீஸ் போய்சேர்ந்ததும் போன் பண்ணுங்கோ என்று கூறி விடை கொடுத்தனுப்பி விட்டு நான் என் மற்ற வேலைகளை கவனிக்க ஆரம்பித்தேன்.

ஆபீஸ் போய் சேர்ந்ததும் கரெக்டாக போன் பண்ணுபவர், அன்றைக்கு பார்த்து போன் பண்ணவேயில்லை. என்ன தலை போகும் வேலையாக இருந்தாலும் தன் ரொடீனை விடமாட்டாரே என்பதால் எனக்கு கொஞ்சம் அச்சமாகி விட்டது. ஒன்பது மணிக்கு பிறகு வந்தது போன். இருபத்தைந்து கிலோமீட்டர் எப்படி நான் வந்தேன் என்பது அந்த ஆண்டவனுக்குத்தான் தெரியும், காதுக்குள் ஒரே குடைச்சல் ஆபீஸில் நுழைந்தவுடன் பாக்டரி ஆஸ்பத்திரிக்கு போகலாம் என,என் சக சிப்பந்திகள் என்னை ஆஸ்பத்திரிக்கு அழைத்துப்போய் காதுக்குள் லென்ஸ் வைத்துப்பார்த்தால் காதுக்குள் பெண்கள் முடியிலிருக்கும் பேன் சுற்றி,சுற்றி ஓடியிருக்கிறதென்று டாக்டருக்கு தெரிந்ததும் எல்லோரும் என்னை கலாட்டா செய்தார்கள்.எனக்கு காதுகுடைச்சல்,போச்சு, இன்னொரு தலை குடைச்சல் ஆரம்பித்துவிட்டது,என்னவென்றால் நீதான் முதல் பேஷண்ட் காதுக்குள் நுழைந்த பேனை எடுக்க ஆஸ்பத்திரிக்கு வந்த மனிதன் என்று யாவரும் கலாட்டா செய்தார்கள் என எனக்கு அர்ச்சனை கிடைக்கும்.
பெண்களாலேயேதான் எத்தனை அவஸ்தை என்று வெகு நாட்கள் சொல்லி காட்டிக்கொண்டேயிருந்தார். என்னையும், என்இரண்டு குட்டிகளையும்,முடியை வெட்டிக்கொள்ளும்படி சொல்லி, சொல்லி உயிரை எடுப்பார். இப்படியாக ஆத்திரம் தீர எனக்கும் இதைப்பற்றி எழுத ஒரு சான்ஸ் கிடைத்தது என்பதுதான் இப்போது எனக்கும் மகிழ்ச்சியாக இருக்கிறது.