விவாகம் என்பது அக்னி பகவானுக்கு சத்தியம் செய்து நடப்பதாக நினைத்த நம்மை, இன்றைய பிள்ளைகள் எந்தமாதிரியான கல்யாணத்தையும் உடைத்து விட்டு சங்கோசமேயில்லாது, மனகிலேசமே துளியும் இல்லாது புருஷன் வீட்டை விட்டு பெண், வெளியில் கிளம்புவதும், ஆண் அவளை தடுத்து தன்னுடன் இருத்திக்கொள்ளவேண்டும் என்ற எண்ணம் துளிக்கூட இல்லாமல் இருப்பதை நினைத்தால், நம் கலாசாரம் அழிந்து வருகிறதோ என நினைக்க வைக்கிறது. நடுத்தர குடும்பங்களில் கல்யாண முறிவுகள் ஆவது துர்பாக்யவசம்தான், தலைகுனியவேண்டிய சமாசாரம்தான். நம்தேசத்து கல்யாண முறிவுகள் பெற்றோர்களின் தூண்டுகோல்களால்தான் ஆகிவருகிறது என்றும் தெரிய வருகிறது.
ஆண்பிள்ளைகளுக்கும்,எப்படி அனுசரித்து போக தெரியவில்லையோ என நினைக்கவும் வைக்கிறது. அவன் கல்யாணம் என்றால் எதை எதிர்பார்த்து கல்யாணம் செய்துகொள்ள சம்மதித்தான். அவனுடைய பெற்றோருக்கும் தன் வீட்டிற்கு வந்திருக்கும் பெண்ணை புரிந்து கொண்டு அரவணைத்தும், ஆதரவுக்காண்பித்தும் பெண்ணையோ,ஆணையோ தங்கள் வசம் செய்ய முடியாது போனால் பெற்றோர்கள் விவாகத்தில் தன் பிள்ளைகளை ஈடுபட வைக்காமல் இருப்பதே நல்லது.

தும்மியபோது கட்டிய தாலி இருமியவுடன் அறுந்து விட்டாற்போல் போல்’என்பது ஒரு பழமொழி உண்மையாகவே நடந்துவருவது நம்தேசத்திற்கே இழிவான பெயரை கொடுக்கும். ஏனென்றால் நம் முன்னோர்கள் அயல்நாட்டு மனிதர்களை பற்றி, அதாவது அவர்கள் விவாகங்களை தரக்குறைவாகவும், கிண்டலாகவும் பேசியிருக்கிறார்கள், இன்றைக்கும் அதே போலவே நினைத்துக்கொண்டும் இருக்கிறோம்.அவர்கள் எதை செய்ததற்கு நாம் பரிகாசம் செய்து,தரக்குறைவாக பேசினோமோ அதையே இன்றைக்கு நம் தேசத்தில், நம் உத்தம்மான பிள்ளைகள் கல்யாணம் என்ற பந்தத்தை எடுத்துக்கொண்ட சில நாட்களிலேயே செய்யக்கூடாதவைகளை செய்ய ஆரம்பித்து விட்டார்கள் என நினைக்கும்சமயம் மனம் கூசுகிறது.எப்போதுமே குற்றம் பெண்களே செய்து விட்டாற்போல் போல்தான் உலகம் பேசுகிறது.

அவலை நினைத்து காலி உரலில் குத்தினால் என்ன கிடைக்கும்? எதையோ நினைத்துக் கொண்டு விவாகத்தில் ஈடுபட்டு, அதை வைத்துக்கொள்ளமுடியாமலும், விடமுடியாமலும் சிலர் தவிக்கிறார்கள். கூட்டுக்குடும்பம் பிடிக்கவில்லை, பெண்ணால் கணவனையும்,ஆண்பிள்ளையினால் மனைவியையும் மேய்க்கவும் முடியவில்லை, வகையாக வைத்துக்கொள்ளவும் தெரியவில்லை. வெளிநடப்புகளையும் கண்டு சிலர் ஏமாந்தும் போகிறார்கள். நான் இந்த பொறுப்பை எடுத்துக் கொண்டு விட்டேன், வெற்றிகரமாக கல்யாணத்தை காப்பாற்றுவேன், என் குடும்பத்தை நான் நடத்திக்காட்டுவேன், என்று சபதம் எடுத்துக்கொண்டுதான் குடும்பத்தை நடத்திக்காட்ட வேண்டும்.

வீட்டுப்பெரியவர்களும் நம்க்கு புதிதாக கிடைத்துள்ளவர்களை பிரியமாகவும்,ஆதரவுடனும் நடத்தவேண்டியது மிகவும் அவசியம். நம் வீட்டிற்கு வந்திருக்கும் பெண் எதிர்காலத்தில் என்னுடைய பிரதிநிதியாக திகழ்வாள் என நினைத்து அவர்களை வீட்டு விவகாரங்களில் ஈடுபடுத்தி கணவனை கையாள்வதையும் சொல்லிக்கொடுத்து, மற்ற சமாசாரங்களிலும் வீட்டுக்கு வந்திருக்கும் பெண்ணை நம்மில் ஒரு அங்கமாக ஏற்றுக்கொண்டு அவர்களை வழிநடத்தி செல்லவேண்டும்.

உண்மையான அன்பிற்கு அடிமையாகாமல் வெகு சிலரே இருப்பார்கள். கணவன் மனைவி சண்டைகளை வலுப்படுத்திக்கொண்டே போக கூடாது. அவ்வப்போது நடந்தவைகளை மறந்தும் விடவேண்டும். வாழ்க்கை என்பதே விட்டுக்கொடுத்து வாழ்ந்தால்தான் நன்மையை காணலாம்.இருசாராருமே சின்ன,சின்ன குற்றங்களை பெரிது பண்ணிக்கொண்டு பேசக்கூடாது. பிள்ளைகளுக்கெதிரில் அவசியமில்லாமல் வாதாடுவது, பிறரைபற்றி தவறான அபிப்ராயங்களை சர்ச்சை செய்வதையும் நிறுத்தவேண்டும்.