மனிதர்கள் தாங்கள் வாழ்ந்துகொண்டிருக்கும் வாழ்வுதான் மட்டமானது என்றும், அவர்களை சுற்றியிருப்போர் தன்னை விட சுகவாசிகள் என்றும் நினைத்து வேதனைபடுவார்கள்.இது சிலருடைய மனித சுபாவம் என்றே நினைக்கிறேன். மனிதர்கள் தன்னை பிறருடன் ஒப்பிட்டு பார்த்தே தன் வாழ்க்கை எப்படியுள்ளது என்று நிர்ணயிக்கும் சக்தியை பெறுகிறார்கள். நமக்கிருப்பதில்,நாம் திருப்தி அடைவதில்லை. நம்குறைகளையே நினைத்து வாழும் நம் மனது நிறைவடைவதேயில்லை.

சில மனங்கள் எதைப்பார்த்தாலும் தன்னுடையதாக்கி கொள்ள நினைக்கின்றன. பணம் என்பது எத்தனை வந்தாலும் திருப்தியைடைவதில்லை. எத்தனை சுகங்கள் கிடைத்தாலும் மனம் அடங்கமுடியாமல் மேலும் தேடுகிறது. உதாரணமாக வீடேயில்லாதவர்கள் தனக்கென்று ஒரே ஒரு சின்னதாக,கச்சிதமாக வீடு ஒன்று வாங்கிவிட்டேனானால் வேறெதுவுமே தன் வாழ்க்கையில் தேவையே இல்லை என்பார்கள்.அந்த கச்சிதமாக வீடு ஒன்றை வாங்கிப்போட்ட ஐந்து இல்லை பத்து வருடங்களில், நான் தப்பு பண்ணிவிட்டேன், வீடு என்பது நம் ஆயுளில் எத்தனை முறை வாங்குவோம், இன்னம் ஒரு பெரிய ரூம் இருந்திருந்தால் நம்குடும்பத்திற்கு நலமாக இருந்திருக்கும். மடத்தனமாக இப்படி செய்து விட்டேனே என தன்னையே நொந்துகொள்வார்கள். வீடேயில்லாது வாடகையை கொடுத்துக்கொண்டு வீட்டுக்காரனுக்கு கூழைக்கும்பிடு போட்டபடி வாழ்ந்த நாட்கள் மறந்து போய் பேசுவார்கள்.

பெண்பிள்ளைகள் நன்றாக படித்து சாதாரண வேலையிலிருந்து பெற்றோரை காப்பாற்றி வருவதை கவனிக்கும் மனிதர்கள், மகனாவது கத்திரிக்காயாவது, ஏதோ நல்ல மகனோ,மகளோ ஏதோ நம் பெயரை சொல்லிக்கொண்டிருக்க ஒன்று பிறந்தால் போதும் என்பார்கள், மனம் எப்போது அலுத்து விடுமோ, அப்போது சாண் பிள்ளையானாலும் ஒரு ஆண் பிள்ளை இருந்தால் மனதுக்கு ஒரு தைர்யமே என்பார்கள்.மனித மனம் ஒரு குரங்கின் மனமேதான்.

இன்னம் சில மகான்கள் தன்னிடம் உள்ளதையே பார்க்காமல் பிறரிடம் இருப்பதையே கண்டு காய்வார்கள்.ஆனால் தனக்கு எதிலுமே ஈடுபாடுகள் கிடையாது, வாழ வேண்டியிருக்கிறதேயென்று வாழ்வதாகவும் வேஷம் போடுவது போல் பேசுகிறார்கள்.மேலும் மற்றவர்களுக்கு தான் வழிகாட்டியாக இருந்ததாகவும், தான் இருந்திருக்காமல் போயிருந்தால்,எத்தனையோ ஆட்கள் வாழ்வையும் இழந்திருப்பார்கள் என்றும் கதை கூறி தன்னுடைய மனக்குறையை வெளிப்படுத்துவார்கள்.