எல்லாக்குடும்பங்களிலும், ஏன், ஒவ்வொரு குடும்பத்திலுமே ஒரு வித்யாசமான குணம் படைத்தவர்கள் இருந்தே,  இருப்பார்கள். அதே போல் எங்கள் குடும்பத்தில் உள்ள ஒருவரைப்பற்றி எழுதுகிறேன். அவரிடம் உதவி என்று கேட்டு வந்தவர்களை ஒதுக்கி துரத்தமாட்டார். செய்த உதவிகளுக்கு எதிர் உதவிகளையும் எதிர்பார்க்காத உத்தம குணம் படைத்தவர். உண்மையில் இளகியமனம் படைத்தவர் இவர். இன்றைய  நாட்களில் சொந்தபந்தங்களே அவசியமில்லை என நினைப்பவர்களுக்கு நடுவில், மனிதநேயம் படைத்தவரை பற்றி  எழுத விரும்புகிறேன் .

தூர தேசத்திலிருந்து போனால் ஸ்டேஷனுக்கு வர முடியுமா என கேட்டுவிட்டால் போதும் வந்து , கவனமாக வீட்டிற்கு அழைத்து சென்று,  வேண்டிய உதவிகள் செய்து கவனிப்பார். இளகிய மனம் படைத்தவர். பெற்றோர்களை கண்ணில் வைத்து இமையால் மூடுவது என்று கேட்டிருப்பீர்கள், உண்மையில் செய்து காட்டியவர், அவர். இன்றும்கூட  கூடப்பிறந்தவர்களுக்காக எது வேண்டுமானாலும் செய்து கொடுக்க பின் வாங்கமாட்டார். தன் மனைவி , மக்களையும் அருமையாக கவனித்துப்பார்த்துக்கொள்கிறார். குடும்பத்திற்காக தன்னால் இயன்ற அளவுக்கு வீட்டு வேலைகள், வெளி வேலைகளும் செய்ய சோம்பல் படாமல் முன்வருவார்.

சிம்பிள் என்பதற்கு அவர்தான் மாடல் மாதிரி இருப்பார். படிப்பு , பணம், குணம் எல்லாம் அமைந்துள்ள  ஒரு உருவம் அந்த பலாப்பழம்.  அவரை எதனால் பலாப்பழம் என்றுசொல்கிறேன் என்றால் காரணம் உள்ளது, பலாப்பழத்தை நறுக்கி தின்னும்வரை அதன் ருசி  தெரியாது, அதேபோல் உருவத்தை  பார்த்தால், முரட்டு ஆள் மாதிரி தோன்றும், ஆனால் மனமோ பிஞ்சு குழந்தை உள்ளம் படைத்த குணவான் அவர். பிறர் கஷ்டங்களை தன்னுடையதாக பாவித்து உதவி செய்ய முன் வரும் குணக்குன்று.

குடும்பத்தாருடைய நம்பிக்கைக்கு  பாத்திரமானவர்.  ஆண்டவன் அவருக்கு பரிபூரணமான  ஆயுளையும் , ஐச்வர்யங்களையும் அள்ளிக்கொடுக்க பிரார்த்திக்கிறேன்.