எதையாவது பற்றி அடிக்கடி பார்த்து, பேசிக்கொண்டிருந்தோமானால் அது பெரிய நிகழ்ச்சியாக இருந்தாலும்,சாதாரணமாகவே தெரிகிறது. சகஜமாகவும் தோன்றுகிறது, உதாரணமாக இந்தக்காலத்தில் விவாகரத்துக்கள், மிகவும் சாதாரணமாக ஆகிவிட்டன. இப்போதெல்லாம் வீட்டுக்கு வீடு வாசற்படி உள்ள மாதிரி, விவாகரத்தானஆன பெண்ணோ,பிள்ளையோ இருக்கிறார்கள்.பெண்களால் புது இடத்தில் அட்ஜஸ்ட் செய்துகொண்டு போகமுடியவில்லையா,இல்லை பிள்ளைவீட்டாருக்கு பிடிக்காமல் செய்துகொண்டதால், மனதிற்கு பிடிக்காமல் ஒத்துவருவதில்லையா, உண்மைக்காரணம் அவரவர்களுக்கேதான் தெரியும். சில கேஸ்களில் கண்மண் தெரியாத காதல் கல்யாணங்களும், தூண்டிலில் மாட்டிக்கொண்டு தவிப்பது போல்தான் உள்ளது.எதை நினைத்து கல்யாணத்தில் ஈடுபட்டு ஏமாற்றமடைகிறார்களோ தெரியவில்லை. சுதந்திரமாக உலவும் எண்ணம் இருந்து கட்டுப்பாடாக, ஒரு கட்டுக்குள் இருக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டு விட்டாலும் ஏமாந்து மனம் நொந்து விடுகிறதோ என்னவோ? ஆனால் ஒன்றுமட்டும் நிச்சயம் ஆரம்பத்தில் ஒருவருக்கொருவர் பிடிக்காமலேயே, கல்யாணத்தை செய்து கொண்டோமானால் ஆயுள் முழுக்க அதோகதிதான். கல்யாணம் செய்துகொண்டு வாழ்க்கை நடத்தினால்,சுற்று வட்டாரத்தையும் திருப்தியளிக்கும்படி நடக்க முடியவில்லை. சினிமாக்களில் வருவதைப்பார்த்து வேண்டும் போது உறவாடலாம், வேண்டாமென்று வரும்போது பிரிந்து விலகி வேறு எந்த பித்துக்குளியாவது மாட்டாமலாபோகப்போகிறது என்ற எண்ணமும் ஓங்கியிருக்கலாம்.

ஆணுக்கு பெண் சளைத்தவளில்லை காலம்காலமாக எத்தனையோ விஷயங்களை சகித்துக்கொண்டிருந்த பெண் சமூகம், சகிப்புத்தன்மையை இழந்து வருகிறார்களா என்பதும் புரியவில்லை. பெண்களுக்கு அவரவர்களுக்கு தன்னைப்பற்றி எத்தனை ஸ்டாராங் அபிப்ராயங்கள் இருந்தபோதிலும்,அழகாக சுதாரித்துக்கொள்ளும் தன்மையும் உண்டு. எந்த பெண்ணுக்கும் தன்னால் தன்பெற்றோருக்கு கெட்ட பெயர் வருவதை, அதுவும் தன்னால் வரும் என்றால் கூடியவரை தவிர்க்கவே பார்ப்பார்கள். ஆகையால் மற்ற பக்கங்களிலிருந்தும் எதிர்பார்ப்புக்கள் அதிகமாகி வருவதாலும் இந்த கதி வந்திருக்கலாம். ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம். பெண்கள் பழங்காலத்தைப்போல் பயந்துகொண்டோ ஒளிந்துகொண்டோ, ஓடப்பார்ப்பதில்லை. எதிர்த்து நின்று சமாளிக்கப்பார்க்கிறார்கள். முன்பெல்லாம் தனியாகவாழும் பெண்மணிகளுக்கு அபாயம் இருந்தது.இப்போதோ அந்த அவல நிலைமை மறைந்து விட்டது. பெற்றோர்களும் பிள்ளைகளை கவனித்துக்கொண்டு மகிழ்ச்சியாகவும் வாழ்ந்து வருகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.நம் குடும்ப விவரங்களை எவரிடமெல்லாம் கூறி நம் மனதை சமாதானம் செய்துகொள்வது?..