போஸ்ட் ஆபீஸ் என்பதே பிள்ளைகளுக்கு தெரியாத ஒரு மர்மமான பெயராகிவிட்டது. யூனிபார்ம் அணிந்த தபால்கார ஐயாவை பார்ப்பதேயில்லை. இந்த மொபைல் போனும், ஈமெயிலும்,மனிதர்களை சோம்பேறிகளாக்கி விட்டன. வருங்காலத்தில் பிள்ளைகளுக்கு யாரையாவது நேரில் பார்த்து பேசவேண்டும் என்பது முடியாத வேலையாகத்தான் இருக்கப்போகிறது. பிள்ளைகள் பள்ளிக்கூடங்களில் லீவு லெட்டர், அழைப்பிதழ்கள் போன்ற கடிதங்களை எழுதி பாஸ் செய்ய வேண்டும். இல்லாவிடில் கடிதம் என்பதே கனவில் கேட்ட வார்த்தை மாதிரி தோன்றும். பிள்ளைகளுக்கு தங்கள் வீட்டிற்கு வந்த பெரியவர்களை சந்தித்து விட்டால் என்ன பேசுவது என்றே புரிவதில்லை. உடனடியாக வாயில் வார்த்தைகள் வருவதில்லை, அதுவும் இப்போது நேருக்கு நேர் பேசும் பழக்கம் குறைந்துவருகிறபடியால் தான் உட்கார்ந்திருக்கும் இருக்கும் அறையின் கதவை மூடிக்கொண்டு, உட்காரும் பழக்கத்தையும் பின்பற்றி வருகிறார்கள். படிப்பில் புலியாகி மற்றவிஷயங்களில் ஆட்டுக்குட்டியாகி,தலையாட்டி பொம்மையாகவும் உள்ளார்கள்.
வருங்காலம் எப்படியிருக்கும் என்றே நினைத்துப்பார்க்க முடியவில்லை. இரண்டு பெற்றோர்களும் வேலை பார்ப்பவர்களாக இருந்து விட்டால் கேட்கவே வேண்டாம். பிள்ளைகள் தொட்டாற்சுருங்கி இலைகள் போல் வளர்ந்து வருகிறார்கள். கூட்டுக்குடும்பங்கள் கலைந்து விட்டதின் கோளாறுதான் இது என நினைக்கத்தோன்றுகிறது. இன்றைய ஜெனரேஷனுக்கு முன் வளர்ந்த பிள்ளைகளை பிறருக்காகவும் உதவிக்கு அனுப்புவோம்.பெற்றோருக்கு தெரிந்த பெரியவர்களுக்கு, அவர்கள் வீட்டில் போய் ஏதேனும் உதவிசெய்வது, தனியாக வாழும் பெரியவர்களுக்கு மருந்து, மற்றும் அவர்களின் சொந்த பந்தங்களுக்கு கடிதம் எழுதி தருவது என்பது போன்ற வேலைகளை செய்து கொடுத்தும், பெரியவர்களுக்கு தேவையானவற்றை வாங்கிகொடுத்து விட்டு வருவதற்கும் அனுப்புவோம். பிள்ளைகளும் மகிழ்ச்சியுடன் போவார்கள். பெரியவர்களுடன் அரசியல் பேசுவதெல்லாம் பிள்ளைகளுக்கும்,ஏன் பெரியவர்களுக்குமே சுவாரஸ்யமாக இருக்கும். இந்நாட்களில் ஒரே பிள்ளையாக பிறந்து விட்டால் கேட்கவே வேண்டாம். அவர்கள் கொலுவில் வைத்திருக்கும் பொம்மைதான். பிள்ளைகளின் இன்றைய நிலைக்கு காரணம், சதா வேடிக்கை பார்த்துக்கொண்டு உட்கார்ந்திருப்பதும் ஒரு காரணம். நாம் எல்லோருமே பிறர் செய்தவைகளையே நாம் பார்த்துக்கொண்டு உட்கார்ந்திருந்தோமானால் நாம் கற்றுக்கொள்ளப்போவதுதான் என்ன? நாம் எதையுமே செய்து காட்டவில்லையே என்ற ஏக்கம் எப்படி மனதில் உருவாகும்? நாம் செய்துகொண்டேயிருந்தால்தான் மேலும், மேலும் ஆலோசித்து செய்யத்தோன்றும்.
இப்போதோ எந்த வழிக்கும் உதவாத யோசனைகளை செய்துகொண்டிருக்கிறார்கள். இவர்களுக்கேற்றாற் போல் சொந்த பந்தங்களும் குறைந்து வருகின்றன. நாங்கள் வளர்ந்த காலத்தில், ஏதோ ஒரு நூறு வருடங்கள்முன்பு என நினைக்கவேண்டாம், ஒரு நாற்பது வருடங்கள் முன்பு, பிறருக்காக லெட்டர் எழுதுவது, பெரியவர்களுக்கும் கடிதம் எழுதுவது, போஸ்ட் செய்வது,வந்த கடிதங்களை படித்துகாட்டுவது போன்றவைகளை செய்து கொடுக்க பிள்ளைகளை உற்சாக படுத்தி அனுப்பி வைப்போம்.வயதான பெரியவர்கள் தனியாக வீட்டில் வசித்து வந்தால் பிள்ளைகளை அவர்களுக்கு உதவியாக, துணையாக இரவு படுக்கப்போவது, சாமான்கள் வாங்கிகொடுத்து ஒத்தாசை போன்றவைகளை செய்வதற்கு பிள்ளைகளை அனுப்பி வைப்பார்கள். பிள்ளைகளும் ஆவலுடன் ஓடுவோம். இப்போதோ வீட்டுக்கு ஒன்றிரண்டு பிள்ளைகளேயிருப்பதால்,யாருக்கும் எந்த உதவியும் செய்வற்கோ, கேட்பதற்கோ பிடிக்கவுமில்லை. மெத்த படித்த பெற்றோர்களுக்கு தங்கள் பிள்ளைகள் தனித்தன்மையை இழந்து விடுவார்கள், என்ற கவலை வேறு. எந்தக் காலத்திலும் மனிதன் தன்னுடைய உயர்வான எண்ணங்களை நடத்தி காட்டமுடியாது இருப்பானானால்,அவனுடைய பெற்றோர்களே அந்த கதியில் நிற்கும்போது தான் உதவிகள் செய்யவேண்டும் என்ற பச்சாதாபம் அவர்கள் மனதில் தோன்றப்போவதும் இல்லை. ஏனென்றால் எந்த வேலையுமே பழக்கத்தில் இருந்தால்தான் சமயம் வரும்போது தானாகவே செய்ய மனதில் உதிக்கும்.
இன்றைய நாட்களில் யாவரும் தனிமையை விரும்புவதாலும், ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து வாழ பிடிப்பதில்லை. விட்டுக்கொடுக்க ஆரம்பித்தால் சில ஜீவன்கள் தங்கள் தனித்தன்மை குறைந்து விட்டதாகவும் நினைக்கிறார்கள். மொபைல் போன் என்பது ஒரு உன்னதமான கண்டு பிடிப்புதான், உலகம் சுருங்கிவிட்டாற்போல் தோன்றுகிறதே தவிர, எல்லாமே உடைந்து வெகு தூரத்தில் சிதறி போய்விட்டது. சர்க்கரை என்று பேப்பரில் எழுதி நாக்கில் தடவினால் இனிப்பு தெரியுமா? எதிர்கால பிள்ளைகளின் வாழ்க்கையில் ஏதேனும் ஏடாகூடமாக நடந்துவிட்டால் மனம்விட்டுப்பேச கூட ஆட்களில்லாது பைத்தியம் பிடித்து உட்கார்ந்து விடுவார்கள்.மனித உலகம் நாடக உலகமாகி வருவதை பார்த்துக்கொண்டு வருகிறோம்.
Leave A Comment