நம் வாழ்நாளில் உண்மையில் நடந்த சில சம்பவங்களில், சிலவற்றையே நாம் மனதார பெரிது படுத்தி பேசிக்கொள்ளும்படியான விஷயங்களும் உள்ளன. அந்தக்காலத்தில் குடும்பங்களில் கணவரோ, மனைவியோ தவறிவிட்டால், அந்த பெரியவர்கள் வாழ்ந்த அன்யோன்யம் புரிவதில்லை. கணவன், மனைவி சேர்ந்து வாழ்ந்த நாட்களில் எத்தனையோ கடினமானசமயங்களை நேருக்கு நேர் சந்தித்து, இருவருமாக கலந்தாலோசித்து முடிவுக்கு வந்து, பிள்ளைகளை சப்போர்ட் செய்தவைகளில் தோல்வியையோ, வெற்றியையோ அடைந்திருந்தாலும், திடீரென்று தன்னுடைய துணை காலமாகி விட்டால், தனக்கென்று பேசுவதற்கு யாரோ இருந்தார்கள், என்பது மட்டுமில்லாமல்,சமயம் பார்த்து பேசவேண்டும், எப்போது எதைப்பேசவேண்டுமென்ற வரை முறைகூட இல்லாது பேசலாம், என்ற ஒரு உரிமை பறிபோய்விட்டது என்பதை புரிந்து கொள்வதற்குள் காலம் கடந்து எங்கேயோ போய் விடுகிறது. பிள்ளைகளுக்கு தங்கள் குடும்ப கவலைகளையே கவனிக்க டயமில்லாமல் தவிக்கும் சமயத்தில் அம்மாவாவது, ஆட்டுக்குட்டியாவது, என்று தோன்றவைக்கிறது, உண்மையே. அவரவர்களுக்கு தங்களுடைய வாழ்க்கையின் பொறுப்பே முக்கியமாக தென்படும்.பிறரை பற்றி அவர்கள்மனதில் எந்த மாதிரியான உணர்வுகளை அனுபவித்து வருகிறார்கள்என்பதை புரிந்துகொண்டு செயல்பட தெரிவதும் இல்லை, அவர்கள் புரிந்துகொள்வதுமில்லை.

குடும்பங்கள் வேறாக இருந்தாலும், சாவு என்பது கவ்விக்கொண்ட சமயம் மனம் இழப்பின் உணர்விலேயேதான்,சுற்றி,சுற்றி வருகிறது. ஒன்றாக வாழ்ந்த சமயம் உண்பது, உறங்குவதிலிருந்து,என்ன சமைப்பது, எப்போது சாப்பிடுவது,கணவன் மனைவி தகராறுசெய்துகொண்டு அதை தன்னைத்தானே சரிசெய்து கொள்வது,இப்படி எத்தனையோ, ஏற்றத்தாழ்வுகளை சந்தித்து வாழ்நாளை கடத்திக்கொண்டிருக்கும் போது ஒரு உயிர் தன்னைவிட்டு பிரிந்து விட்டால், எவர் பின்தங்கிவிட்டார்களோ, அவர்கள் ஜீவிப்பது கடினமே. ஆண்டவன் படைத்த உயிரினங்களில் மனிதர்களுக்கு மட்டுமே இந்த உரிமை, பேச்சு வளம் இரண்டும் உள்ளது. வயதானவர்களுக்கு தன் வாழ்நாட்களில் நடந்த சம்பவங்களை, ஏற்றத்தாழ்வுகளை ஒருவருக்கொருவர் பரிமாறிக்கொள்ளும் சந்தர்ப்பம் கிடைத்து, வயதான சமயத்தில் நமக்கென்றே எவராவது இருந்தார்களானால் நன்றாக இருக்கக்கூடும்,என்று எண்ணி,ஏங்கிக்கொண்டிருக்கும் சமயத்தில், ஒரு விதவையும், மனைவியை இழந்த வயோதிகரும் தற்செயலாக சந்திக்க நேர்ந்து, முடிவெடுத்து வாழ்ந்து மறைந்ததும் என் மனதை தொட்டது. அவர்கள் தன் பெண்ணுடனும், மாப்பிள்ளையுடனும் வசிக்கலாம் என முடிவெடுத்து அவர்களுடனேயே வந்து தங்கியிருந்தார்கள். பெண்ணும்,மாப்பிள்ளையும் ஆபீஸுக்கு கிளம்பியவுடன், மாமா நடைபழகி கறிகாய்,மற்றும் அத்யாவசியமான சாமான் வாங்க செல்லுவதற்குமுன் அம்மாமியிடம் என்னவெல்லாம் வேண்டுமென்பதற்கு லிஸ்ட், மற்றும் பணம் கேட்டு வாங்கிப்போவார். சாமான்கள் வாங்கிவந்தவுடன், பிரிட்ஜில் வைக்கவேண்டியவைகளை வைத்து, உருளைக்கிழங்கு, வெங்காயம் போன்றவைகளை மூங்கில் கூடையிலும் வைத்துக்கொடுப்பாராம். இவர்கள் இருவரும் சம்பந்திகள். ஆனால் அவருடைய பிள்ளையும், அம்மாமியினுடைய பெண்ணும் கல்யாணம் முடிந்துவீட்டிற்கு வந்த,ஆறே மாதங்களுக்குள், பெண் தன்னுடைய அம்மாவையும், மாப்பிள்ளையின் அம்மா தன்னுடைய வாழ்க்கை துணையையும் இழந்து நிற்க ஆரம்பித்தசமயம் அந்த இரு பெற்றோருக்குமே பென்ஷன் கிடைத்துக்கொண்டிருந்த காரணத்தினாலும், அந்த பெற்றோர்களின் சிநேகம் ஒருவருக்கொருவர் மிகவும் உபகாரமாகவும் பிள்ளை,மருமகளுக்கும்,பெண், மாப்பிள்ளைக்கும் மனோசக்தியை அளிக்கவல்லதாகவும் ஆகி விட்டது. அந்த பெரியவர்கள், அவர்கள் ஆயுள் உள்ளவரை ஒற்றுமையாக இருந்ததும் என்பது குறிப்பிடத்தக்கது. தங்கள் பேரன் பேத்திகளையும் வளர்த்தும் பணியிலும் ஈடுபட்டு, மகிழ்ச்சியாக வாழ்ந்து மறைந்தார்கள்.
இந்த வகையான புது உறவிற்கு மக்கள் வேறெதுவும் பெயர் கொடுக்காமல் குடும்ப நபர்களுடனேயே தங்கியிருந்து உண்மையான உணர்வுடனும், பொறுப்புடனும் வாழ்ந்துவந்த அந்த முதிர்ந்தவர்கள் சுமார் பதினைந்து வருடங்கள் ஒற்றுமையாக வசித்துவந்தது என் மனதை தொட்டது. எனக்கு இந்த சம்பவத்தை உங்கள் யாவருடனும் பரிமாறிக்கொள்ளும் எண்ணம்தோன்றி எழுதியிருக்கிறேன். நாம் வாழ்ந்துவரும் இந்த உலகத்தில், நாம் நமக்காகவே வாழ்வதில்லை. ஊர் என்ன பேசுமோ, உலகம் என்ன நினைக்குமோ, அக்கம்பக்கத்தார்கள் என்னகூறுவார்களோ என்னும் கவலையிலேதான் வாழ்வதால் பல அற்புதமான சமயங்களை வரவேற்று மனதார ஏற்க முடியாமல் தவிக்கிறோம், சான்ஸ்கிடைத்தாலும் உதறி தள்ளிவிடுகிறோம்.