எங்கள் குடும்பத்தில், காது, மூக்கு குத்தும் வைபவத்தை, ஒரு முள் குத்தினால் எடுத்துவிடுகிறமாதிரி சாதாரணமாக செய்வார்,எங்கள் மங்களப்பெரியம்மா. அவர் கும்பகோணத்தில் பிறந்து வளர்ந்திருந்தபடியால், பள்ளிப்படிப்பிலும் தேர்ச்சியடைந்திருந்தவர். ஆகையால் அவர் மற்ற மக்களின் பிரச்னைகளை வேறு விதமாகவே விவரமாக பரிசீலித்து பார்ப்பார். தஞ்சாவூர் ஜில்லாவில் இருக்கும் கும்பகோணம் என்ற ஊர் தென்னிந்தியாவின் ஆக்ஸ்போர்ட் என பெயர் பெற்றுள்ளதாக பெரியவர்கள் கூறிக்கேட்டிருக்கிறேன். அந்த ஊரில் பிறந்து வளர்ந்த கணிதமேதை ராமானுஜம் என்பவர் உலக பிரசித்தியாக இன்றும் மக்களின் மனதில் நிற்கிறார். எங்கள் மங்களப்பெரியம்மாவை பற்றி நினைக்கும்போதும், எவர்,எதில் தேர்ச்சி பெற்றிருந்தாலும் பிள்ளைகளுக்கு காது, மூக்கு குத்துவது என்பதில் மங்கள பெரியம்மா எக்ஸ்பர்ட்டாக இருந்ததை என்னால் மறக்கவே முடியாது.

அந்தக்காலத்திலும் எல்லாவேலைகளையுமே இடதுகையால் செய்து முடிக்க நம்வீட்டு பெண்மணிகளில் ஒரு சிலரே தேர்ச்சி அடைந்திருந்தார்கள். அதில் எங்கள் மங்களப்பெரியம்மா என்றவர், படித்திருந்தார்,ஹோமியோபதியை பற்றியும் படித்து, கற்றுக்கொண்டும், மருந்துகளும் கொடுப்பார். கிராமத்தில் சிறிய குழந்தைகளுக்கு வயிறு சரியில்லை,ஜுரம் போன்ற சாதாரண நோய்களுக்கு மருந்து கொடுத்து குணப்படுத்துவார். பெண்மணிகள் தங்கள் பிரச்னைகளை அவரிடம் கூறி ஹோமியோபதி மருந்தை வாங்கி செல்வார்கள். உடல்நிலை குணமாகியும் விடும். ஆனால் ஒன்றுமட்டும் நிச்சயம்,பிள்ளைகளுக்கு காது, மூக்கு குத்துவதற்கு அதற்குரிய மனோதைர்யம் மிகவும் அவசியம். காது, மூக்கு குத்திக்கொள்ளும் பெண்பிள்ளைகள் அழுது கொண்டிருக்கும் சமயம் காதை ஊசியால் குத்தி ஓட்டை போட்டு நூல் கட்டுவதற்கும் மன தைர்யமும் தேவைதான். குத்திக்கொள்பவர்கள் அழும்போது ஏதோ பேச்சுக்கொடுத்துக்கொண்டே நிதானம் தவறாமல், எடுத்தவேலையை செய்து முடிப்பதில் ஜான்ஸி ராணியாகத்தான் திகழ்ந்தார், எங்கள் மங்கள பெரியம்மா. கைகால்கள் நடுங்காமலும் இருக்கவேண்டும். அந்தக்காலத்தில் எங்கள் வீட்டு ஆண்கள், பெண்கள் இருபாலருமே காது குத்தி, கடுக்கன் அணிந்திருக்கிறார்கள். காது குத்துவதில் எங்கள் பெரிய அம்மா பிரபலமானவர். யாருக்கு வேண்டுமானாலும் காதுகுத்தி விடுவார். எங்கள் வீட்டைத்தவிர ஊரில் உள்ள பிள்ளைகளும், அவரிடம் காது, மூக்கில் துளை போட்டுக்கொள்ள வருவார்கள். பிள்ளைகளாகிய எங்களுக்கு ஒரே ஆச்சர்யமாக இருக்கும்.இன்றுவரை அவர் குத்திய காது மூக்குகளில் எந்த பிரச்னையும் வந்ததாக இதுவரை நான் கேட்டதில்லை.

காது குத்துவதற்கு முன்னால், இரண்டு காதுகளிலும் காதணி போட்டுக்கொள்ளும் இடத்தில், குங்குமத்தால் ஒரு சிவப்பு புள்ளி வைத்து வீட்டில் இருந்த மற்ற பெரியவர்களின் அனுமதி,ஆசிகளை பெற்றுவர அனுப்புவார். பிள்ளைகளுக்கு சமாதானம் கொடுத்து காதையோ, மூக்கையோ குத்துவதற்கு முன், உங்களுக்கு காது குத்துவதால் தனக்கு பாவங்கள் கிடைக்கும், அடுத்த ஜன்மத்தில் நான் தேளாகப்பிறந்து விடுவேன், எல்லோரும் என்னைக்கண்டவுடன் என் கொடுக்கை நறுக்கி என்னை விட்டுவிடுவார்கள். நான் கொடுக்கில்லாத தேளாகப்பிறந்து அங்குமிங்குமாக அலைவேன், மற்ற தேள்கள் என்னைக்கண்டவுடன், என்னடா, கொடுக்கில்லாத தேள் என கிண்டல் செய்வார்கள், என்றெல்லாம் கதை கூறி காதில் நறுக்கென்று குத்தி விடுவார்.

இந்த கதையை கேட்டவுடன், நாங்கள் நினைப்போம், ஆஹா,,எப்பேர்ப்பட்ட தியாகி எங்கள் பெரியம்மா, என்று பள்ளிக்கூடத்தில் சிநேகித, சிநேகிதியிடம் பெருமையாக பேசி மகிழ்வோம். நமக்கு செய்யத்தெரிந்த வேலைகளை செய்யாது உட்கார்ந்திருந்தோமானால் ஆண்டவன் நம்மை அடுத்த ஜன்மத்தில் எதுவுமே தெரியாத அசடாக வளர தண்டித்து விடுவார், அதனால்தான் நான் எனக்கு தெரிந்ததை உங்களுக்கு செய்து விடுகிறேன், என்று சமாதானம் கூறுவார்.எனக்கும் உங்களைப்போன்ற பிள்ளைகளுக்கு வலியைக்கொடுப்பதில் மனமில்லை என்றெல்லாம் பேசிக்கொண்டே நறுக்கென்று ஒரே குத்தலில்துளை போட்டு நூல் கட்டி ஒரு கல்கண்டை வாயில் போடுவார்.காது புண் ஆறியபின் காதில் ஆபரணம் போட்டுக்கொண்டு அவரிடம் காண்பித்து வரப்போனால் ஆசையாக பார்த்து, நம்முடன் பேசி ஆசிகளை அளிப்பார்.
இன்றைக்கும் கூட கடைகளில் நடக்கும் காது குத்தும் வைபவங்களை, ஆர்ப்பாட்டங்களை, காணும் சமயத்தில் நான் எங்கள் மங்கள பெரியம்மாவையே நினைத்துக்கொள்கிறேன்.