பசி என்றால் வயிற்று பசி மட்டுமல்ல . சும்மா, பேச்சுக்கு பசி வந்தால் பத்தும் பறக்கும் என்று பெரியோர்கள் கூறவில்லை.  இந்த பத்தும் என்பது, பற்றும் பறந்துவிடும் , என்று கூறியிருப்பார்களோ என எனக்குத்தோன்றுகிறது, காலப்போக்கில் பற்றும் என்பது மருவி பத்தும் பறந்துவிடும் என பழக்கத்தில் வந்திருக்கலாம். ஏனென்றால் இன்று பல பெற்றோர்கள் தங்கள் உயிரினும் மேலாக நினைத்து அன்புடனும், பாசத்துடனும் வளர்த்த தன் செல்வங்களை மறக்கமுயன்று அவர்களை விட்டு தள்ளிப்போய், நின்று பார்த்து வாழநினைக்கிறார்கள். ஆனால் பெற்றோர் என்ன நினைக்கிறார்கள் என்பதை பிள்ளைகள் கண்டறிய முடியாமல் திண்டாடுகிறார்கள் . எந்த பெற்றோருமே தன் பிள்ளைகள் நன்றாக வளர்ந்து செழிப்புடன் வாழ்வதைப்பற்றி மகிழ்வார்கள், ஆனால் தகப்பனார்களுக்கு தன்னைவிட பிள்ளகள் உயர்ந்து, உருவத்தில் மட்டுமில்லாது செல்வாக்குடன், அதாவது பணம், காசு ,அதிகாரம் எல்லாவற்றுடனும் தனக்கும் மேலாக வாழ்வதை ஒப்பிட்டுப்பார்த்து,   நான் பால் வார்த்து, குடித்து வளர்ந்த பூனை என்னை கண்டு முறைக்கிறதோ என தோன்ற ஆரம்பித்து விடுகிறது. உண்மையில் தகப்பன்கள்,  ஒரு வயதிற்கு பிறகு  ஆண்பிள்ளைகளை தள்ளி வைத்தே பேசி பழக்கமாகி விட்டதால் வந்த வினைதான் இது, என்பது  அப்பாக்களுக்கு புரிவதில்லை.  தோளுக்குமேல் பிள்ளை வளர்ந்து விட்டால் தோழன் என்பார்கள். இதே கதையை திருப்பி போட்டுப்பார்த்தால்,  மாப்பிள்ளை தன்பெண்குட்டியின் பேச்சில் கட்டுண்டு கிடப்பதை கண்டு  மனமகிழ்வார்கள், அந்த தகப்பனார்கள்.

அம்மாவோ மங், மங்கென்று வேலை செய்து , பிள்ளைகளுக்கு பிடித்தவைகளையே செய்து போட்டு,  தன்னை ஓரம்கட்டுகிறாளோ என கிழகணவர் நினைத்து, கிழவியை  ஆடு, மாடுகளை விரட்டுவது போல் விரட்டுவார். தன்னைபற்றி கொஞ்சம் குறைவாக நினைத்துப்பார்ப்பதின் எதிரொலிதான், இந்த எண்ணத்தை உசுப்பிவிட்டு வேடிக்கை பார்க்கிறது.  இதற்கெல்லாம் முடிவு எங்கே, தேடி, தேடிப்பார்க்க வேண்டும். சயின்டிஸ்ட்கள் ரிஸர்ச் செய்வது போல் .