எனக்கொரு உண்மையான தம்பியும் உண்டு.எல்லா தம்பிகளை போல, இவனும் ஒரு தம்பி இல்லை. இவன் ஸ்பெஷல் தம்பி. அவன் பெயர் கல்யாணம். வீட்டில் ராம்ஜீ என்று கூப்பிடுவோம்.இதையெல்லாம் எழுதுவதற்கு காரணங்கள் உள்ளன. ஏனென்றால் எங்கள் உறவினர் குடும்பங்களிலும் தம்பி என்ற பெயர் படைத்தவர்கள் உண்டு. நம்மதம்பிக்கு,அவன் நம் உறவினர் வீட்டு கல்யாணத்தன்று பிறந்தான் என்பதினால் அவனுக்கு கல்யாணம் என்ற பெயர்.எங்கள் வீட்டில் நாங்கள் பன்னிரண்டு பிள்ளைகள்.ஆனால் பாவம், எங்களுக்கு பெயர் வைக்க எங்கள் பெற்றோர் திணறியிருப்பார்கள் என்றே நினைக்கிறேன். ஏனென்றால் பெரிய அண்ணாவிற்கு மேல் இரண்டு அக்காக்கள் இருந்ததால்,அவரை தம்பி என்று கூப்பிட்டு, அவர் பெயர் இன்று வரை தம்பிதான்.

இந்த சின்னத்தம்பி படிப்பை உயிரினும் மேலாக நினைப்பான். இன்றையநாளில் படித்த பெற்றோர்களின், பிள்ளைகளை படிக்கவைக்க தெருவிற்கு ஒரு கோச்சிங்சென்டர் இருப்பதை பார்க்கும்போது பிள்ளைகளின் மூளைக்குள் திணித்து, பணத்தை வாரியிறைத்து பிள்ளைகளுக்காக பரிதவித்து பெற்றோர் உயிரைக்கூட பணயம் வைக்க தயாராகும் கதியை நினைத்துப்பார்த்தால் இப்படி படிக்கவைப்பது அவசியமா,என நினைக்க வைக்கிறது. பன்னிரென்டு குழந்தைகளுக்கு நடுவில் ஒன்பதாம்பிள்ளை இவன். இவன் படிப்பை கவனிக்க ஆள் கிடையாது. எது எப்படிபோனாலும்,அவன் தன்னுடைய வீட்டுப்பாடங்களை நன்கு கவனித்து படிப்பான். அவன் தான் படிப்பதோடு இல்லாமல் தன்னை சுற்றியுள்ளோரும் படிக்க வேண்டும் எனநினைத்தவன். இவனுக்கு பசுபதி என்ற பெயரில் உயிர் சிநேகிதன் ஒருவன் உண்டு. வீட்டில் தின்பண்டங்கள் இவனுக்கு எது கிடைத்தாலும் பசுபதியுடன் பங்கிட்டுட்டுத்தான் தின்பான். ஏனென்றால் அந்தபையனின் அம்மா அவனுடைய சின்ன வயதிலேயே காலமாகி விட்டதால் ஏற்பட்ட பரிவு. பசுபதியுடன்தான் வீட்டுப்பாடங்கள் எழுதுவான். இந்நாட்களில், பிள்ளைகள் தாங்கள் எப்போது,எதைபடிக்கிறோம் என்பதை எவருக்கும் தெரியக்கூடாது என்பதிலேயே குறியாக இருக்கிறார்கள்.

கிராமத்திலிருந்த குளக்கரையின் அருகிலிருந்த கூரைபோட்ட நகராட்சி பள்ளியில் படித்து முன்னேறியவன் இவன்.’விளையும் பயிர் முளையிலே தெரியும்’என்ற பழமொழி எத்தனை உண்மையான வார்த்தைகள் என நினைத்துப்பார்க்கிறேன். ஒரு சிறிய கிராமத்தில் படித்து வளர்ந்த பையனுக்கு படிப்பில் ஆர்வம் இருந்ததால் மட்டுமே அவனால் செயல் படுத்தவும் முடிந்தது என்பதை இன்றும் நினைத்து ஆச்சர்யப்படுகிறேன். பன்னிரென்டு பிள்ளைகளுக்கு நடுவில் இவனுக்கு மட்டும்தனியாக உபதேசம் யார் செய்திருப்பார்கள்? யோசிக்கவேண்டிய விஷயமே! சின்ன வயதில் என் பெரியப்பாவின் மூத்த பிள்ளை அமெரிக்காவில் படித்து டாக்டரேட் பட்டம் வாங்கியதை கேட்டதிலிருந்து இவனுக்குப் மனதுக்குள் அந்த ஆவல் வந்து விட்டதாக நினைக்கிறேன். இவன் தானும் போய் படிக்க ஆசைப்பட்டு அஸிஸ்டெண்ட்ஷிப் கிடைக்கப்பெற்று PhD முடித்து, டாக்டரேட் பட்டம் வாங்கி, இந்தியாவில் சில வருடங்கள் வேலை செய்தும் தன் ஆசைகளை நிறைவேற்றிக்கொண்டவன். சில குணாதிசயங்கள் தனக்குத்தானே நமக்குள் வரவேண்டும், என்பதை இம்மாதிரியான மனிதர்களிடமிருந்து கற்றுக்கொள்ளவேண்டும். நமக்காக,யார் நம்மை, எத்தனை உயரத்தில் தூக்கி நிறுத்த முடியும்?
இவன் தனக்குள்ளேயே சில கொள்கைகள்,ஆசைகளை நிறைவேற்றிக்கொள்ளும் தன்மையையும் மனபக்குவத்தையும் அடைந்தவன். யாவரும், தன் லிமிட் எதுவரை என்பதை அறிந்து கொண்டால் முன்னுக்கு வருவது சாத்தியமே. ஆனால் தன் தோல்விக்கு பிறரை குற்றம் கூறுபவர்கள் குடும்ப
வாழ்க்கையிலும்,தொழில் திறமையிலும் முன்னுக்கு வருவது அசாத்யமே என்பதை முன்னுக்கு முன்னதாக உணர்ந்து செயல்பட வேண்டும், என்பதை இந்த பையன், என் தம்பி புரிந்து கொண்டு செயல்பட்டான் என்பதற்காக நான் பெருமையடைகிறேன்.