மனிதர்களால் திருப்தி என்பதையே காண முடியாது என தோன்றுகிறது. அதுவும் நம்மால், மற்றவர்களையும் திருப்தி செய்வது என்பது அத்தனை எளிதல்ல. யாரோ எவரோ எதையோ வாங்கியிருந்தாலும், கமெண்ட்ஸ் அடிப்பார்கள். தனக்கிருப்பதிலும் திருப்தியில்லை. மனம் அலை பாய்ந்து ஓய்ந்து விடக்கூடும், ஆனால் திருப்தி கிடைப்பது கடினமே. நம்மிடம் ஒரு வீடு இல்லாத போது நமக்கென்று ஒரு கச்சிதமாக சின்ன வீடாக இருந்தால் போதும் என நினைப்போம். ஆகையால் சிறிய வீடு கிடைத்தவுடன், சுவர்க்கம் மாதிரி நினைத்திருப்போம். பர,பரவென்று மகிழ்ச்சியாகவும் இருந்து வருவோம்.கொஞ்ச காலம்ஆனவுடன், சாமான்களை வாங்கிப்போட்டு, வீடு நிரம்ப மனிதர்கள் வந்து உட்கார நிற்க இடம் போதாமல் இருக்கும்போது நம்மை நாமே குறை கூறிக்கொள்வோம். இது கூட இல்லாமல் தவித்த நாட்களை மறந்துவிட்டிருப்போம். அப்போதே இன்னம் கொஞ்சம் பெரிய வீடாக வாங்கியிருந்திருக்கலாமே என நொந்துகொள்வோம். நாம், நம்முடைய அளவுக்குள் இதுதான் நம்க்கு உகந்தது என நினைத்துதான் வாங்கினோம் என்ற உண்மையை மறந்தே விடுவோம். மனித மனதிற்கு எதைக்கொடுத்தாலும் சந்துஷ்டியடைவதில்லை. சமயம் வந்தபோது விரலுக்கு தக்க வீக்கம்தான் வீங்கமுடியும், நம் பாக்கெட்டின் கனம் அவ்வளவுதான் என்றெல்லாம் ஞானம் அடைந்தாற்போல் பேசியிருப்போம். ஆனால் திருப்தியில்லாமலே காலத்தை கடத்துவோம்.
வேறு யாருடையதோ பெரியவீட்டை பார்த்துவிட்டால் மனதிற்கு ஏக்கமாகி விடும். மனித மனம் இப்படியேதான் தவித்துக்கொண்டிருக்கும் என்பதில் சந்தேகமேயில்லை. ஆகையால்தான் மனித மனத்தை, குரங்கின் மனத்துடன் ஒப்பிடுவார்கள், என்றே நினைக்கிறேன். நாமாகவே நினைத்து வருந்திக்கொண்டிருக்கும் சமயம், வேறு யாராவது வந்து வீட்டைப்பார்த்து எரியும் கொள்ளியில், எண்ணை வார்த்தாற் போல், இன்னம் ஒரு ரூம் இருந்திருந்தால் உங்களுக்கு தாராளமாக இருந்திருக்கும், மேலும் உங்கள் பிள்ளையோ,பெண்ணோ உங்களுடன் வந்து பத்துநாட்கள் தங்கினாலும் இடத்திற்கு பஞ்சமிருக்காது, அப்படி , இப்படியெல்லாம் பேசி நம் மன உளைச்சலை அதிகமாக்கி விட்டு கிளம்பி போனதும் நம் வீட்டில்தான் கிலேசம் ஏற்படும். காரணம் நம் மனம் அலை பாய்ந்துகொண்டிருக்கும் சமயமாகப்பார்த்து யாராவது , நமக்கு ஒத்துவராத பேச்சு பேசிவிட்டால் நாம் நம் மனிதர்களையுமே காரணமேயில்லாமல் கோபித்து கொண்டு விடுவோம். திருப்தியில்லாத மனதிற்கு எது சாக்கு கிடைக்கும் , எதன் மீது பாய்ந்து கடிக்கலாம் என காத்திருக்கும் புலிமாதிரி. மனித மனதிற்கு தானாக இருப்பதை விட யாராவது உசுப்பி விடும்போது உத்வேகம் சீறிக்கொண்டு எழும் என்பதில் சந்தேகமேயில்லை…
Leave A Comment