அந்தக்காலத்திலும்,கலப்புத்திருமணம் ஆகியிருக்கும் என்பதற்கு சாட்சி எங்கள் வீடுகளிலேயேயும் வாழ்ந்திருக்கிறார்கள். எங்கள் பாட்டியம்மாவிற்கு பிறந்த ஆறு பிள்ளைகளும் ஆறுவிதமான சாயலில் இருந்திருக்கிறார்கள். எங்கள் பெரிய பெரியப்பா நம் குலத்தின்மனிதராகவும், அடுத்த பெரியப்பா ஆப்பிரிக்கர் முகசாயலுடன்,சுருட்டு முடியுடன்,சிறிய கண்களுடன் கரியின் நிறத்தினராகவும் இருந்தார். என் தகப்பனார் மங்கோலியன் மாதிரியாகவும், கட்டை, குட்டையான சரீரத்துடன்,சுருட்டை முடி, உடல் தக, தகவென்று மஞ்சள் கலர் ஜொலிக்க, பூனையின் கண்களுடன் இருப்பார். அவர்கள் யாவரும் மறைந்து விட்டார்கள். இந்த ஜெனரேஷனில் என் மகள்கள் ஐரீஷ் பையனையும்,அமெரிக்கன் பையனையும் விவாகம் செய்து கொள்ள முடிவு செய்த சமயம், நான் பிறந்த குடும்பத்தையும், மற்ற குடும்பங்களுடன் ஒருமை படுத்தி பார்த்து என்குடும்பத்தின் வேற்றுமையை நினைத்தும் பார்த்தேன். எதை வைத்துக்கொண்டு நம் வரலாறு ஆரம்பித்துள்ளது என நினைத்துப்பார்த்தேன். நம் குடும்பத்தில் பண்டைக்காலத்திலேயே கலப்புத்திருமணங்கள் ஆகியுள்ளன எனநினைத்தபின் மனம் சாந்தியை அடைந்தது. மேலும், அவர்களும் மனிதர்கள்தான் மரக்கட்டைகளோ, மிருகங்களோயில்லையென நினைத்து யோசித்து மனம் மகிழ்ந்தது.இருபத்தைந்து வருடங்கள் ஓடிவிட்டன. ஆண்டவன் அருளாலும், மனித நேயத்தினாலும் யாவரும் ஒற்றுமையாகவும், சந்தோஷமாகவும் வாழ்ந்து வருகிறார்கள், என்பதை உங்கள் யாவருடனும் பகிர்ந்து கொள்கிறேன்.

ஆனால் இந்தியாவிலேயே இன்றைய தேதியில் தும்மியபோது போது கட்டின கட்டிய தாலி, இருமியவுடன் அறுந்து போய் விட்டது என்னும் பழமொழிக்கேற்றாற்போல், நம் தேசத்தில் நடக்கும் கல்யாணங்களும், உடைந்து வருகின்றன என்பதை மன வருத்தத்தோடு நினைத்துப்பார்க்கிறேன். ஆனால் ஆங்கிலேயர்கள்தான் எப்போது வேண்டுமானாலும் மணமுறிவுகள் செய்து கொண்டு விடுவார்கள் என்றெல்லாம் நம் மக்கள் பேசிக்கேட்டிருக்கிறேன். இப்போது நம்தேசத்தில்,ஒரே குலத்தில் விவாகமான தம்பதியர்கள் கூட விவாகத்தை ரத்து செய்துவிட தயாராக உள்ளார்கள். வீட்டுக்கு ஒரு விவாகரத்தான பெண்ணோ,ஆணோ இருந்து வருகிறார்கள் என்பது வருந்தத்தக்கதுதான். வீடுகளில் நல்லதோ கெட்டதோ, நல்ல சூழ்நிலைகளில் வளர்ந்த பிள்ளைகள் கல்யாணம் என்பது ஆயிரங்காலத்து பயிர் என்றும், அதை பாதுகாத்து வைத்துக்கொள்ள வேண்டுமென பெரியவர்கள் கூறிக்கேட்டிருந்தாலும், இன்றைய பிள்ளைகள் அவரவர் மனம் போன போக்குப்படியேதான் முடிவெடுத்து விடுகிறார்கள். வீட்டுப்பெரியவர்களுக்கு அடங்குவதுமில்லை.மனிதர்கள் மிருகங்களுக்கு மாற முடியாது.

நல்லதோ,கெட்டதோ யோசித்துப்பார்க்க கூட எவருக்கும் டயமில்லை, போல ஒரு தோற்றத்தை உண்டு பண்ணுகிறார்கள்.காலங்கள் மாறிவிட்டது, அதற்கேற்றபடி காட்சிகளும் மாறி வருகின்றன.வீட்டுப்பெரியவர்கள் சம்மதத்துடனேயே கலப்புத்திருமணங்கள் நடந்து பிள்ளைகள் மகிழ்ச்சியுடனும்,ஒற்றுமையாகவும் வாழப்பார்க்கிறார்கள், என்பது வரவேற்கத்தக்கது.