இன்றைக்கெல்லாம்,வீட்டிற்கு இரண்டு பிள்ளைகள்தான் என்று விதித்துக்கொண்டாகி விட்டது. அந்த இரண்டுமே நம்தேசத்தை விட்டும், கிளம்பிவிடுகிறார்கள். ஏனென்றால், நம் தேசத்தின் வளர்ச்சியில், நம்பிக்கை போய்விட்டது, இந்நாளைய பிள்ளைகளுக்கு. இக்ரைக்கு அக்கரை பச்சை, அவ்வளவுதான்.அடி,உதை அயல்நாட்டுக்காரனின் கையிலிருந்து வாங்கினால் அதன் மதிப்பே அலாதிதான்.வெளிநாட்டில் தெருவில் எச்சில் துப்பக்கூடாதென்றால், எவருக்குமே வாயில் எச்சில் ஊறாமலா உள்ளது? கிடையாது, தண்டனைக்கு பயந்துகொண்டு ஊறிய எச்சிலை விழுங்கி விடுவார்கள். நம்மில் ஊறியிருக்கும் அடிமைத்தனம், நம் சுயமதிப்பை இழக்க ஹேதுவாகி விடுகிறது. அயல்நாட்டில் சட்டத்தை மீறும் குணங்கள் கிடையாது, தவறுக்கு தண்டனை உண்டு என்ற பயத்தினால் அடி பணிந்து வாழ்கிறார்கள். வெளிநாட்டில், அடிக்கு பயந்து வாழ்ந்த நம்நாட்டு ஆட்கள் தாய்நாட்டுக்கு திரும்பியதும் பழைய தவறான பழக்கவழக்கங்களை மறக்காமல் கடைப்பிடிப்பார்கள்.

பெற்றோர்கள் வயதாகி வரும்போது, தனிமையில் வாடி,வதங்கி சில வருடங்களில் மனதை தேற்றிக்கொண்டபின் தனியாக வாழ ஆரம்பிக்கும் காலமும் வந்து விடுகிறது. எந்த வித கடினமான சட்டமாக இருந்தாலும் அயல்நாட்டு பணத்திற்கு மதிப்பு அதிகமே.அக்கம்பக்கத்து இளம்பிள்ளகளுடன் கூட பேசாமல் இருந்தவர்கள்கூட, பேச ஆரம்பித்து சிநேகம் செய்துகொள்ள முயற்ச்சிக்கிறார்கள். ஆனால் இளைய தலைமுறைக்கு, பெரிய வயது ஆசாமிகளைக்கண்டால் ஒதுக்கவே பார்க்கிறார்கள். இளம் சிங்கங்களை,வயதானவர்கள், அத்தனை சுலபத்தில், வசியப்படுத்த முடிவதில்லை. மேலும், இளையவர்கள் தங்கள் டைம்டேபிளை மாற்றிக்கொள்ளவும் இஷ்டப்படுவதுமில்லை. பெரியவர்களைக்காட்டிலும், இந்தக்கால சிறியவர்கள் யாவரிடமுமே வேலை வாங்குவதில் புலிகளாக இருக்கிறார்கள் என்பதும் மறுக்க முடியாத விஷயம்தான். சிறியவர்கள் தங்களுக்காக பெரியவர்களிடம் தன் வீட்டுசாவியை கொடுத்து,வாங்கி கொள்வதில் மன்னர்களாகவேயிருக்கிறார்கள். சாமர்த்தியமாக பெரியவர்களிடமிருந்தும் கூட வேலை வாங்குவதில் இன்றைய இளஞ்சிங்கங்கள் சிறந்தவர்களாகவேயிருக்கிறார்கள்.

ஆனால் பெரிசுகளுக்கு உடல்நிலை சரியில்லாத சமயத்தில் டயமேயில்லாது போல கைகளை கழுவிவிடவும் பார்ப்பார்கள், என்பது உண்மையே. ஆயிரத்தில் ஒன்றிரண்டு இளம் வயதினரே முதியவர்களிடம்,அன்யோன்னியமாக இருக்கப்பார்க்கிறார்கள். மற்றவர்கள் தன்வேலையே குறியாக இருக்கிறார்கள். நடிப்பிலும் இக்காலத்து பிள்ளைகள் தேர்ந்தவர்களாகவே உள்ளார்கள்.

பிள்ளைகளுக்கோ, உள்நாட்டு சில்லறையை விட அயல்நாட்டு நாணயமே மதிப்பாகவும் உள்ளது. சில தேசங்களில் வீட்டுக்கு ஒரு ஆள் மிலிட்டரியில்சேர வேண்டும் என்ற சட்டமிருப்பது போல, நம்நாட்டில் வீட்டிற்கு ஒரு ஆள் அயல்நாடுகளில் போய் ஆக வேண்டுமென்ற சட்டமிருப்பது போலவே இன்றைய நிலைமையுள்ளது.
தன்னந்தனியாக வாழும் பெரியவர்களுக்கு, நாட்டு நடப்புக்கள் குறைவாகவே தெரிகிறது. இந்த பரந்த உலகில் வாழ்விற்கு, எது தேவை, தேவையற்றது என்பதும் புரியாமல் ஏதோ காலத்தை ஓட்டி வருகிறார்கள். தங்களை சந்திக்க வரும் இளம்நண்பர்களை பெரியவர்கள் காணும்போது அவர்கள் தங்களை காண மட்டுமே வந்திருக்கிறார்கள் என நினைப்பதில்லை. நம்முடன் தங்கியிருப்பதற்காகவே வந்திருப்பது போல் மகிழ்வுடன் வரவேற்பார்கள். மனம் ஏங்குகிறது என்பது தெளிவாகவே புலப்படுகிறது. புதிதாக யாரையாவது காணும் சமயம் ஊர் பெயர் கேட்டு தன் ஊரிலிருந்து அங்கு எவராவது இருக்கிறார்களோ என யோசித்து கண்டு பிடிக்க பார்ப்பார்கள்.

இப்படியாக மனித மனம் தனக்காகவே கூட்டம் சேர்த்துக்கொள்வதில் தீவிரமாக இருக்கிறது. தனிமையின் கொடுமையை அவரவர்கள் அனுபவித்து பார்க்கும்போதுதான் புரியும்.