பழைய காலங்களில் கல்யாணம் என்றால் சம்பந்திகள் சண்டை என்பது கண்டிப்பாக நடந்துவிடும்.மேலும் அந்நாட்களில் பிள்ளை வீட்டார்களே உயர்ந்தவர்கள் என்றும், பெண்வீட்டார் ஒரு படி குறைவுதான் என்ற எண்ணம் மேலிட்டு இருந்து வந்தது. ஒருசில பிள்ளை வீட்டு சம்பந்திகள் இதற்கு அத்தாட்சியாகவும் இருந்திருக்கிறார்கள். லஞ்ச் முடிந்து காபி டிபன் கேட்பார்கள், காபியைப்பற்றி வேண்டாத வர்ணனைகள் கூறுவார்கள்.மற்ற ஏற்பாடுகளை பற்றியும் கேட்காமலேயே வர்ணிப்பார்கள். அன்று ஒரே ஒரு நாள்தான் எல்லோருடைய கவனிப்பும் அவர்களுக்கு கிடைக்கும், என்பதை அவர்களும் உணர்ந்திருப்பார்கள். ஆனாலும், பிள்ளை வீட்டார்கள் என்ற அந்த ஜம்பமும் வீறாப்பும்,விறைப்புமாக தனித்தன்மையுடன் அந்த சில நாட்களுக்காவது இருந்தே தீரும். கல்யாணத்தில் கிடைத்த உணவு வகைகளை பற்றி, வேண்டுமென்றே மட்டமாக வர்ணிப்பார்கள். வெய்யில் காலத்தில் சுமார் ஐம்பது,அறுபது ஆட்களுக்கு குளிக்க சுடுநீர் தேவைப்படும் என்பார்கள்.காபி என்பதை காதால் மட்டுமே கேட்டிருப்பவர்கள் மாதிரி இருபது ஆட்களுக்கு பதிலாக ஐம்பது பேருக்கு காபி தேவை என்பார்கள்.அதைக்கேட்ட பெண் வீட்டுக்காரர்களும், சம்பந்திகளுடன் பெண்ணை நல்லவிதமான அனுப்பிவைத்தாக வேண்டுமே என மண்டையை உடைத்துக்கொண்டு கவலைபட்டுக்கொண்டிருப்பார்கள். இது தேவையா? தனிப்பட்ட மனிதனின் வாழ்நாளில் கல்யாணம் என்பது புனிதமான ஒரு சடங்கு. அன்றைக்கென்று கல்யாணபெண்,பையனை ஊசிமேல் தவம் செய்வது போல் நிற்கும்படியாக ஒரு சமயத்தை உருவாக்கி, வம்பிழுத்து சண்டையை கிளப்பிவிடுவது எத்தகைய ஈனமான செயல், என்பதை இரு தரப்பிலும் புரிந்து கொள்ளவேண்டும்.
ஆனால் இன்றைக்கு நிலைமைகள் நன்கு முன்னேறி வருகின்றன, என்பதுகுறிப்பிடதக்கது. பிள்ளை வீட்டார் திமிர் பிடித்து, பெண்வீட்டாரை ஆட்டிப்படைத்தால், வீட்டிற்கு வரும் மருமகள் வீம்பிற்காகவாவது, அலட்சியம் செய்ய ஆரம்பித்து விடுவாள். அடிக்கு பதிலடி கொடுப்பார்கள்.
சில சம்பந்திகளுக்கு அவர்கள் பிள்ளைகளின் கல்யாணத்தன்று மட்டுமேதான் அவர்களுக்கு உபசாரங்கள் நடக்கும், அதன் பின்னர் அபசாரம் மட்டுமே அடையப்போகிறார்கள் என்பதை அறியாது ஆட்டம் போடுவார்கள். மரியாதையை கொடுத்தால்தான், பதில் மரியாதை கிடைக்குமென்பதை அறியாத சிலர் ஆட்டங்களை கொஞ்சம் அதிகமாகவே போட்டுவிட்டு எதிர்காலத்தில் திண்டாடுகிறார்கள். நம் வீட்டிற்குள் நுழையப்போகும் பிள்ளைகளை கலக்கமடைய செய்து வரவேற்பதில் என்ன சுகம் நமக்கு கிடைக்கும்.? குற்றங்களை பிரபலபடுத்துதில் யாருக்கு நஷ்டம்?
இதெல்லாம் நூறு வருடத்திற்கு முன்பு நடந்த நாட்கள் போலிருக்கிறது, இன்றைக்கு நினைத்துப்பார்த்தால். இன்றோ பிள்ளைகளும், பெண்களும் தாங்களாகவே கல்யாணத்தை நிச்சயித்துக்கொண்டு பெற்றோர்களிடம் வந்து சொல்லி தங்கள் கல்யாணத்தை தாங்களாகவே நிச்சயம் செய்து கொண்ட பிற்பாடு பெற்றோரிடம், எங்கள் கல்யாணம் இந்த தேதியில் நடக்கவிருக்கிறது, எனசொல்லிக்கொண்டு வந்துவிடுகிறார்கள். என்ன செய்யமுடியும்? வாலை சுருட்டி,மடக்கி,நாவையும்,அடக்கிக்கொண்டு அனாவசியமாக பேச்சு வார்த்தைகளையும் மறைத்து வைத்துக்கொண்டு உட்கார்ந்திருக்க வேண்டியதுதான்.இனிமேல் பெற்றவர்களுக்கு பிள்ளைகளின் கல்யாணத்தை நடத்தவேண்டுமே என கவலையில்லை. எல்லாசாமர்த்தியங்களும் அவரவரக்குள்ளும் வந்துவிடுகிறது. நடத்திக்கொள்ளும் திறமை வரவேண்டும், அவ்வளவே. யாருக்கு என்ன பலம் உள்ளன என்பது களத்தில் இறங்கிவிட்டால் தானாகவே தெரிய வரும்.
Leave A Comment