இந்த பதவி என்ற சொல்லுக்கு பவர் மிகவும் அதிகமே. அது நம்நாட்டு ஜனாதிபதி பதவியோ அல்லது பிரதமர் பதவியோ கிடைக்க வேண்டுமென்பதில்லை. சும்மா பேச்சுக்கு இந்த பொறுப்பை உன்னிடம் ஒப்படைக்கிறேன்  என யாரிடமாவது கூறி விட்டாலே போதும், அவர்கள் தாங்களே இந்த பூலோகத்தையே, அவர்கள்தான் சமாளிப்பதாக  நினைத்து ஆட்டிபடைப்பார்கள். அது எந்த வேலையாக வேண்டுமானாலும் இருக்கட்டுமே. உதாரணமாக குப்பை எடுக்க வருபவர் தினந்தோறும் மாடிப்படிகளை சுத்தம் செய்வதே கிடையாது , நான் அவர் வரும் சமயம் வீட்டில் இல்லாத்தால்,  அதை நீங்கள் கவனித்து அவரிடம் கூற முடியுமா என நாம் அடுத்த  வீட்டாரிடம்வேண்டுகோள் விடுத்தால், போதும்.  அவர்கள் குப்பை எடுப்பவரிடம் ஆரம்பிக்கும் லெக்சர் தாங்கமுடியாது. மாடி வீட்டார் என்னிடம்  உங்களை கண்காணிக்க சொல்லிப்போயிருக்கிறார்கள். நீங்கள் இந்த  வேலையை சரியாக செய்யாவிடில் தன் தலையை மற்றவீட்டுக்காரர்கள் வெடிக்க வைத்து விடுவது போல் பேசி, மற்றவரை அசுரன் மாதிரி ஜோடித்து நாடகமாடுவார்கள். உண்மையில் அவருக்கே வேலை செய்வதில் மனமிராது. பிறரை அசுரனைப்போல் வர்ணித்து தன் வேலையையும் முடித்துக்கொள்ள பார்ப்பார்கள்.  அந்த அதிகாரம் செய்யும் பதவி கிடைத்துவிட்டால்  தன்னால் எல்லாவற்றையும் புரட்டி, உருட்டி எடுத்து விடமுடியும்  என்றும்  பேசுவார்கள்.

உண்மையில் வேலை செய்வது சுலபம்தான், ஆனால் பிறரிடமிருந்து வேலை வாங்குவது  கடினமே. பிறரிடமிருந்து வேலை வாங்குவதற்கு தனி  சாமர்த்தியம் தேவைதான். கடு கடுப்பாக பேச முடியாது, ஒருவித செயற்கை புன்னகையுடன், அது உண்மையாகவே இருக்காது, ஆனால் எதிரில் இருப்போர் நம் மனதை கவர்ந்து விட்டாற்போல் போல்  அவர்களிடம் பேசி, அவர்களை நம்வழிக்கு கொண்டு வரச்செய்து வேலை வாங்க வேண்டும். உண்மையில் அதுதான் அரசியல்வாதிகளின் சாமர்த்தியம், என்பது. எந்த நிமிடமும்  அவர்கள் கலர் மாறிவிடலாம்.  எங்கு தனக்கு  மரியாதை கிடைக்குமோ அங்குதான் அவர்களுக்கு இருப்பதற்கு பிடிக்கும். மனித மனத்தின் ஆழத்தை கண்டு பிடித்தவர் யாருமேயில்லை. ஏமாந்தவர்களேதான் அதிகம்.

சில வீடுகளில் பார்த்தால், தனக்கிருக்கும் சக்தியை காட்டிலும், அதிகமாகவே நினைத்து, பேசி ,அருட்டியும், உருட்டிப்பேசினாலேதான், வேலைகள் நடப்பது போன்ற உணர்வை சிலர் கொண்டுவந்து நிறுத்துவார்கள். உண்மை விவகாரம் தெரிந்தவர்கள், சுலபத்தில், பணிந்து வரமாட்டார்கள். மேலும் வெறும் வார்த்தைகளுக்கு மதிப்பேயிராது. எதையுமே டயப்படி முடித்து காட்டவேண்டிய பொறுப்பு அவரவர்களுடையதே தவிர மற்றவர்கள் மேல் குற்றம் கூறுவதில் அர்த்தமேயில்லை. அவரவர் கடமைகளை அவரவர் முன்னிருந்து நடத்திக்காட்டினால்தான்  மதிப்பு ஏறுகிறது. தட்டிக்கேட்பதற்கு ஆட்கள்  இல்லையென்பதற்காக செய்யாமலே இருந்துவிட்டால் நல்லதில்லையே.

நாட்டுநடப்பும் அதே போலவேதான்.