மனித மனதில் உள்ள ஏக்கங்களை சொல்லி தாங்காது.  வாழ்க்கையின் ரகசியத்தை அறியாது  வேறு எதையோ நினைத்து ஏங்குகிறோம். நம் வாழ்நாளுக்குள் அது கிடைக்குமா இல்லையா என்பதும் தெரியாது.  கிடைத்தாலும் போதுமா என்றும் தெரியாது.  கல்யாணம் ஆகும்வரை, பிள்ளைக்கு கல்யாணமாகி விட்டால் போதும், ஜன்மசாபல்யம் ஆகிவிடப்போவது மாதிரி பேசுவார்கள். பிள்ளையின் கல்யாணம் நடக்குமா என ஏங்கி , நடந்தபின்  மருமகள் அப்படி,இப்படி என குற்றப்பத்திரிக்கை வாசித்தவண்ணமேயிருப்பார்கள். மனித மனதிற்கு வியவஸ்தையே கிடையாது. பலவித எண்ணங்களுடன் அவதரித்துள்ள மனிதர்களின் எண்ணங்களை அறிய விஞ்ஞானிகள் புது கம்ப்யூட்டர் ஒன்றை கண்டுபிடித்துதான் உலகை திருத்த முடியுமா என்பதும் கேள்விக்குறிதான்.. பிள்ளைகளை படிக்கவைத்துவிட்டால் நல்ல வேலையில் அமர்ந்து, உயர்வான பதவி கிடைத்து தங்களையும் நன்றாக வைத்துக்கொள்வார்கள் என நினைத்து பெற்றோர் ஏமாந்தும் போய் விடுகிறார்கள். ஆனாலும் வாங்கும் அடி பிள்ளைதானே கொடுக்கிறான், என ஒரு ஆத்ம திருப்தி. அவரவர்க்குள் இருக்கும் சுபாவத்தை மாற்றும் சக்தி அந்த ஆண்டவனுக்கு கூட கிடையாது.

விவாகங்களுக்கு முன்பு புடவைகளை வாங்குவது என்பது ஒரு தனி கலையாக நடந்து வருகிறது.  அந்தக்காலத்தில், மஞ்சள்,சிவப்பு பச்சை, MS ப்ளூ என்ற பொது கலர்களில் மட்டுமே வாங்குவார்கள்.கறுப்பு கலக்காத கலராக இருக்க வேண்டும், கல்யாண புடவைகளில். அந்த நாட்களில் கல்யாண புடவைகளை வாங்க போக நல்லநாள், நட்சத்திரம் பார்த்துத்தான் போவார்கள். இன்றைக்கு அப்படி எதுவுமே கிடையாது. கல்யாணம் செய்துகொள்ளவிருக்கும் பெண்ணிற்கும், வரப்போகும் கணவனுக்கும் டயம் கிடைக்கும்நாளே நல்லநாள் எனதீர்மானித்து வந்து பார்த்து வாங்கப்போகும் புடவைகளின் வர்ணங்கள் தனக்கு வரப்போகும் மனைவிக்கு எடுப்பாக இருக்குமா என பார்க்க பையனும்,அவன் வீட்டாரும், பெண் வீட்டாருடன் கடைகளில் ஏறியிறங்கி தங்களின் மதிப்பை அதிகரித்துக்கொள்வதற்காக முயற்ச்சிக்கிறார்கள். மேலும் கடைகளில் அலைந்து, திரிந்ததற்காக பெண்வீட்டார் பிள்ளை வீட்டாருடன் லஞ்ச் சாப்பிட போவதையும் பழக்கமாக வைத்துக்கொண்டிருக்கிறார்கள். இத்னை ஓடியாடி பணத்தை வாரியிறைத்து வாங்கிய புடவைகளை அவர்கள் ஆயுளில் பத்து முறைகள் உடுத்தினாலே அதிகம். ஏனென்றால் புடவை உடுத்துவதை விட, சல்வார், கமீஸ், ஜீன்ஸ்  சுலபமாக உள்ளன, இப்படியாக இன்றைய பிள்ளைகளும் புது யுக்தியுடன்தான்  நடந்து கொள்கிறார்கள். கல்யாணங்களை ரத்து செய்வதிலும் மனிதர்கள் வல்லவர்களாக மாறிவருகிறார்கள். முன் காலத்தில் கல்யாணம் என்பது புனித சடங்காக இருந்தது. இன்றோ அப்படி நினைக்க அவசியமில்லை என பெற்றோரே பிள்ளைகளுக்கு போதித்து அனுப்புகிறார்கள். மேலும் மணம்முறிந்தால் எவருக்குமே மனமுறிவு ஏக்கங்கள் ஏற்படுவதில்லை, பணத்தை எப்படிகறக்கலாம் என்றே கணக்கு போட்டு பார்த்துமகிழ்கிறார்கள். பர்மனென்டாக ஒருவருடன் வாழும்போது , அலுப்பு ஏற்பட்டு  மாறுதல் தனக்கு கிடைக்கவில்லையே என ஏங்குகிறது. ஒவ்வொரு ஆத்மாவும் தனக்காகவே வாழ்கிறது. இந்தக்கால மனித மனதுக்கு மாற்றங்கள் தேவைப்படுகிறது.

மனித மனத்திற்கு இருக்கும் ஏக்கங்களில் மிக பெரிய ஏக்கம் பணத்தை சேர்த்து வைத்துக்கொண்டு பணக்காரர்களாகவே மறைய வேண்டும் என்ற எண்ணம்தான் அதிகமாக உள்ளது. சின்னஞ்சிறிய பிள்ளையிலிருந்து முதியோர் வரை பணமில்லாவிடில் என்ன செய்வோம் என்ற ஏக்கமே அதிகரித்து விட்டது.  மனித தன்மைக்கும், உண்மையான எண்ணங்களுக்கும் ஒருவித உணர்ச்சியுமே இல்லாமல் ஆகிவருகிறது. பணமில்லா மனிதன் பிணம் போல்தான், யார் எதை கூறினாலும் ஒத்துக்கொண்டே ஆகவேண்டிய நிர்பந்தமும் வந்து விடுகிறது.  ஒவ்வொரு யுகத்திலும் இப்படித்தான் மாறுதல்கள், மாறி,மாறி வந்து இன்றைக்கு நம் யுகம் வந்துள்ளது போலிருக்கிறது.