ஊமை ஒரு கனவு கண்டால் எப்படி விவரிக்கும்? யோசித்துக்கொண்டே படியுங்கள். பழைய நாட்களில் எத்தனையோ விதமான கடினமான நேரங்களை நம்மூதாதையர்கள் அநுபவித்துள்ளார்கள் என கேட்டிருக்கிறேன், பார்த்திருக்கிறேன். பழைய காலத்தில், சுமார் அறுபது வருடங்கள் முன்பு, பெரிய பையனை BA,சின்ன பையனை Highway’s Engineer படிக்கவைத்துவிட்டு , மூன்றாவது பையனை வயல் காடுகளை கவனிக்க வீட்டோடு இருத்தி வைத்திருந்தார்கள். பெண்மணிகளை மிகவும் கேவலமாகவே நடத்தியிருக்கிறார்கள். சின்னஞ்சிறிய வயதிலேயே , கல்யாணம் நிச்சயிக்கப்பட்டு , கல்யாணம் நடந்தபின் பெண் ஒரு ஆறுமாதங்கள் பிறந்த வீட்டில் இருக்கட்டும், வெளியூரில் வேலை செய்யும்பிள்ளை ,அடுத்த முறை வரும்போது ஊரைக்கூட்டி பங்க்ஷன் செய்து மருமகளை அழைக்கிறோம் என சாக்குகளை கூறி கல்யாணமான பெண்ணை பிறந்த வீட்டிலேயே இருக்க செய்வார்களாம். கல்யாணமானபிள்ளை லீவில் வருவதும் , போவதும் பெண் வீட்டாருக்கு தெரியப்படுத்தவும் மாட்டார்களாம். பிள்ளை வந்ததை ஏன் தெரியபடுத்தவில்லை என கேட்கப்போனால், நான்கே நாள் லீவில் வந்து போனதாக அப்பட்டமாக புளுகுவார்களாம். பெண் வீட்டாருக்கும் சுய கௌரவத்தை விட்டுக்கொடுக்க முடியாதபடி, வேறு வழியின்றி தவிப்பார்களாம். இப்படி ஒன்று, இரண்டு , மூன்று , நான்கு வருடங்கள் சென்றபின், படித்த பையனுக்கு ஏற்றாற் உங்கள் பெண்ணுக்கு நாகரீகம் போதவில்லையென பெண்ணை அருகாமையில் பார்த்து பழகாதவன் கூறுவதால், பெண்ணை நிராகரிக்க கதைகளை ஜோடித்து பிள்ளை வீட்டார் கூறுவார்களாம்.
ஆகையால்தான் அத்தையின் பிள்ளை,மாமாபெண், மாமா பிள்ளை ,அத்தைபெண் என்ற சொந்த பந்தங்களுக்குள்ளேயே கல்யாணம் செய்வதையே பழக்கத்தில் கொண்டு வந்திருக்கிறார்கள். மேலும் கருப்பு பெண்ணாக இருந்தால் வரதட்சணை அதிகமாக கேட்பார்களாம். தலை முடி குறைவாக இருந்தால் வரதட்சணைஅள்ளிக்கொடுக்கவேண்டும். படிப்பு இருக்க கூடாது. பெண்களுக்கு படிப்பு இருந்தால் வீட்டை விட்டு கிளம்பி விடுவார்கள் என்ற பயத்தினால் ,வடிகட்டிய முட்டாள்கள்களாக இருந்தால்தான் கண்ட்ரோல் செய்வது சுலபமாகி விடும், என நினைப்பார்கள் போலிருக்கிறது. பையன் நொண்டியோ, முடமோ, அசடோ, பைத்தியமோ, குரங்கு முகமோ எதுவாக இருந்தாலும் பரவாயில்லை. ஆனால் குரங்கு முகத்திற்குதேடும் பெண் மட்டும் அதிசுந்தரியாக இருக்கவேண்டும், என்றுஎண்ணுவார்களாம்.
எங்கள் வீட்டிலும் இப்படி ஒரு கேஸ் ஆகியிருந்தது. அத்தை பார்ப்பதற்கு சுமாராகத்தான் இருப்பாள் . வீட்டின் கடைக்குட்டியான படியால் ரொம்ப செல்லம் கொடுத்து வளர்த்திருப்பார்கள் போலும். அவளுக்கும் ஒரு படித்தபையனை , உள்ளூருக்குள்ளேயே தூரத்து உறவினர்களின் பிள்ளையாதலால் எப்படியும் வைத்துக்கொள்வான் எனநினைத்து பிரமாதமான கல்யாணம்செய்துவிட்டார்கள். மேலும் பிள்ளைவீட்டுக்காரர்களுக்கும் உள்ளூர் பெண்ணாதலால் வேண்டும்போதெல்லாம் ,பெண்ணை காண்பித்து பணத்தை கறக்கலாமென்று கல்யாணத்தை முடித்தார்கள் போலும். படிக்க போனவன் வீட்டிற்கு திரும்பி வரவேயில்லை. சின்னபெண் பிறந்தவீட்டுடன் அடைக்கலம் என இருக்கும் சமயம் பெரிய அத்தையின் கணவர், தன்னுடைய சொத்துக்களை இழந்து பரதேசியாக மாமனார் வீட்டிற்கு பெண்டாட்டி, நான்கு பிள்ளைகளோடு வந்து சேர்ந்தார்கள். சின்னவளுடைய சொத்துக்களை வீண்டிக்காமல் பெரியக்காவின் குடும்பத்திற்கு உபயோகப்பட்டன . சின்ன அத்தை, தன் புருஷன் சாமியாராகி உபதேசங்களை போதித்துக் கொண்டு ஊர்,ஊராக சுற்றுகிறார், தன்னை புறக்கணித்து விட்டார் என்ற செய்தி கேட்டதும் அத்தைசெடி கொடிகளில், ஆடு, மாடுகள், கன்றுகளுடன் அடைக்கலமடைந்து விட்டாள். பிறந்த வீட்டிற்கு துரோகம் நினைக்காத ஜீவன், எவையெல்லாம் பதில்பேசாதோ அவைகளுடனேயே அத்தை பேசிக்கொண்டேயிருப்பாள். நானும் பார்த்திருக்கிறேன். யாருமே அத்தையைப்பற்றி விவரமாக பேசியதே கிடையாது . பெற்றோர்களும் பாரபட்சம் பார்ப்பார்கள் என்பது உண்மைதான் என்பதை தெரிந்து வைத்திருப்பதும் அவசியமே.
Leave A Comment