எது வேண்டுமானாலும் காத்திருக்கும், ஆனால் இந்த காலம் என்று ஒன்று இருக்கிறதே, அது எதற்காகவும், யாருக்காகவும் காத்து நிற்பதில்லை. இந்த விஷயம் பலருக்கு புரிந்தாலும், அதை ஸீரியஸாக எடுத்துக்கொள்ளாமல், சம்பாதிக்கும் நாட்களே, ஆயுள் முழுக்க நீடிக்கும் என நினைத்து பலர் அதே தோரணையில் காலத்தை கடத்தப்பார்ப்பார்கள். சம்பாதிக்கும்சமயங்களில் இருந்த வாழ்க்கை தரத்தையே தொடர்ந்து கடைபிடிக்கும் பழக்கத்தை கொண்டிருப்பார்கள்.  ஒருகாலத்தில் தான் சம்பாதிக்கும் சமயத்தில் உறவினர்களை தன்னிடம் அண்ட விடாமல் இருந்தவர்கள், ரிடையர்டு ஆன பிறகு உறவினர்களை தேடிப்போவார்கள். ஆனால் உறவினர்களோ தங்கள் அட்ரஸ் கூட தெரிவிக்காமல் எங்கேயோ சென்றிருப்பார்கள்.  ஏமாற்றம் அதிகரிக்கும் போது நான்தான் அவர்களை முன்னுக்கு வருவதற்கு கை கொடுத்து உதவியதாகவும் பேசுவார்கள். ஆனால் பாவம், உதவி பெற்றுக்கொண்டவர்கள், பாவம் ,இந்த பெரியவர்கள் பொழுது போவதற்காக எதையோ பேசிக்கொண்டிருக்கிறார்கள் எனவும் கூறிவிடுவார்கள்.

தன் பிள்ளை, குட்டிகள்  தங்களை மதிக்காமல் இருப்பது  பெற்றவர்களுக்கு தாமதமாகவே புரிகிறது. ஏனென்றால் தன் பிள்ளைகள்  மேல் வைத்துள்ள பாசமானது,  பெற்றோரின் புத்தியை மழுக்கிவிடுகிறது. வேறெதுவுமில்லை. காலங்கள் மாறுவதை பெரியவர்கள் வேறுவிதமாகவும் சிறியவர்கள் அவர்கள் நோக்கத்திலும் பார்க்கிறார்கள். பண்டைய காலத்திலிருந்தே இப்படியேதான் நடந்துவருகிறது. இன்றைய மனிதர்கள் அந்த பழக்கத்திற்கு வேறு பெயர்கொடுத்து பேசுகிறார்கள்.  முற்காலத்தில் பிள்ளைகளுக்கு, தன் மூதாதையர்களின் வாழ்க்கையை பற்றிக்கூறி மனதில் படியும்படியாக செய்வார்கள். அன்றைய பிள்ளைகள் கண்ணுக்கு முன்னால் காணாதவைகளையும் உண்மையென்று  நம்பி கருதிக்கொண்டிருந்தார்கள். இன்றைய ராக்கெட் யுகத்தில் கண்ணுக்கு எதிரில் நடக்கின்ற சமாசாரங்களில்  நம்பிக்கை கொண்டு நடப்பதையே நம்புகிறார்கள். எந்த பேச்சையும், இன்றைய தினத்தில் லாஜிக்குடன் பேசவேண்டும். ஏட்டு சுரைக்காய் சமையலுக்குதவாது  என்பது பழமொழி. ஆனால் ஏட்டிலிருப்பதை பார்த்துதான் இன்றும் எல்லாவேலைகளும் நடக்கின்றன, என்பதேதான்  உண்மை. மேலும் நாம் நமக்கு  முன்னால்தான் பார்க்கவேண்டும், பின்னால் திரும்பி பார்க்கக்கூடாது என்ற பழமொழியின்  உண்மையை கடை பிடிக்கிறார்கள்.