பணக்கார குடும்பமோ, ஏழைக்குடும்பமோ, ஒரே குடும்பத்தில், ஒரே பெற்றோருக்கு பிறந்த பிள்ளைகள் என்றாலும், மனங்கள் வெவ்வேறு மாதிரியாகவே உள்ளது ஜனங்களுக்கு. ‘தூரத்துப்பச்சை கண்ணுக்கு குளிர்ச்சி ‘ என்பது எத்தனை உண்மையான வார்த்தை என்பது அனுபவித்தவர்களுக்குத்தான் தெரியும். பெற்றவர்கள் மறைந்துவிட்டால் கூடப்பிறந்தவர்கள் கூட, தன் கூட பிறந்த பிறப்புக்களையும் வெவ்வேறு விதமாகவே பார்க்கிறார்கள், தனிமையில் தவிக்கும் தம்பியையோ, தங்கையையோ பார்த்து பச்சாதாபமே வருவதில்லை. இந்த மனோபாவத்தை அனுபவித்து பார்த்தவர்களுக்குமட்டும் புரியும். அம்மா காலமாகி போனதை கூட கமலாவிற்கு உணர விடாமல் அப்பா அவளை கவனித்துக்கொண்டுவிட்டார். அப்பாவின்  பதிமூன்றாம்நாள் காரியம் முடிந்ததும்  கமலா தன்நிலைமையை பற்றி யோசிக்க ஆரம்பித்தாள். தனியாக இருக்கமுடியாத  இந்த சமயத்தில்,  உத்யோகத்திலிருந்தாலும் யாரும் தன்னைப்பற்றி , தனியாக இருக்கப்போவதை பற்றி எவருமே வலுவில் வந்து கேட்காதபோது, மனதிற்குள் குமைந்தாலும், இன்று இப்படி ஒரு அனாதை போல்ஆகிவிட்டதை நினைத்து மனதில் கவலை உருவாகிவிட்டது. வீடு அப்பாவினுடையது. வாடகை கொடுக்காமல்,  கமலாவின் சம்பாத்தியத்தில்  தாராளமாக மூன்று நபர்கள் சாப்பிட்டு காலம் தள்ளமுடியும்.  ஆனால் ஒரு பெண்மணி தனியாக  இருக்கமுடியுமா  என்பதேதான் பிரச்னை.

இரு அண்ணாக்களும், அக்காக்களும் வீட்டு சாமான்களில் கமலா தனக்கு எதை  வேண்டாமென கூறப்போகிறாள் என்பதை எதிர்பார்த்துக்கொண்டு கூடிக்கூடி பேசினார்கள். நேருக்கு நேர் கேட்கவும் யோசனை செய்தார்கள் போலும். ஆனால் எந்த சகோதர, சகோதரியுமே தன்னை நீ தனியாக இங்கு இருக்கக்கூடாதென கூறி அழைக்கவில்லையென ஏங்கிவிட்டாள்.  பெற்றோர்கள் விட்டுப் போயிருப்பதில் நம் ஐவருக்குமே பங்கு இருக்கிறபடியால் யாருக்கு எது வேண்டுமோ அதை எடுக்கொள்ளலாம் எனக்கூறியவுடன், போதும் இந்தசாமான்களில் எதையாவது எடுத்துப்போனால் நம்வீட்டில்நடக்க கூட இடமிராது , என பெரிய அக்கா கூறியதும் , மற்ற எல்லோருக்கும் தைர்யம் வந்தாற்போல் பேச ஆரம்பித்தார்கள்.   நம் யாருக்குமே வீட்டுசாமான்கள் அவசியமேயில்லை. அப்பாவிற்கு பென்ஷன் வந்ததில் எத்தனை சேர்ந்திருக்கிறது என பார்க்கலாமே, பாஸ் புக் காண்பிக்க கூறியதும், கமலா தான் எங்கு நிற்கிறோம் என நினைத்து தன் நிலைமையை உண்ர்ந்தாள். மூத்த அக்கா கூற,  மற்றவர்களும் அதற்காகவே காத்திருந்தது போல பேச ஆரம்பித்தவுடன்  தன்னை ஒதுக்கபார்க்கிறார்கள் என்பதை உணர்ந்தாள். தன் அப்பா  தனக்காக பட்ட நியாயமான கவலைகளை யோசித்து பார்த்தாள். அப்பா தன்னைபற்றி கவலைபட்ட சமயங்களில், அவள்செய்த வாக்குவாதங்களை நினைத்து அழுகை வந்தது, ஆனால் அதை தவறாக புரிந்துகொண்ட சக உதிரங்கள், உனக்கு அப்பாவின் பாஸ் புக்கை காட்ட மனதில்லாவிடில்  வேண்டாமே, நாளைக்கு உனக்கென உதவி ஏதேனும் தேவைபட்டால்  நாங்கள் வரமாட்டோம், உனக்கு மட்டும்தான்அப்பாவா, அப்பாவின்  பணத்தில் எங்களுக்கும் பங்கு உண்டு என  இப்படி பல, பல குற்றச்சாட்டுக்களும் போட்டு கமலாவின் மனதில் வெறுப்பையேற்றிவிட்டார்கள்.

இரவு சாப்பாடு முடிந்தவுடன் , வீட்டிற்குள் சப்தம் அடங்கி யாவரும் தூங்கிவிட்டார்கள். காலையில் ஐந்து மணிக்கு கமலா காபி  போடாமல் அசந்து தூங்கி விட்டாள். மணி ஏழு ஆகிவிட்டது , அண்ணா தன்கையில் காபியுடன் கமலாவை எழுப்ப முயன்றதும், எழுந்திருக்காத படியால் தட்டிக்கூப்பிட்டு எழுப்ப முயன்ற போது  பார்த்தால் கமலாவின் உடல் விறைத்து விட்டிருந்தது. அப்பாவுடையது மட்டுமில்லாமல் , என்னுடையவைகளையும் போட்டியே  இல்லாமல் எடுத்துக்கொள்ளுங்கள் என்று கூறுவதைபோல் ,வீட்டிற்கு கடைக்குட்டியான கமலாவின் வாழ்க்கை முடிந்திருந்தது. மயான காரியங்களை முடித்து விட்டு , அன்றே கிளம்பிவிட ப்ளான் செய்திருந்தபடியால்  வாடகை வீட்டை  காலிசெய்தாக வேண்டுமே என்பதால்,  அவரவருக்கு  எதுவுமே வேண்டாம் என பேசிக்கொண்டிருந்த போது, காலிங் பெல்சத்தம் கேட்டது. கமலாவுடன் வேலை செய்தவர் , தனக்கு அகஸ்மாத்தாக ஏதேனும் ஏற்பட்டால்  உங்களிடம் சேர்க்கும்படி தனக்கு உத்திரவு எனக்கூறி அக்காவிடம்  ஒரு பாக்கெட்டை கொடுத்து கண்களில் நீர் மல்க வந்தவேகத்திலேயே  மோட்டார்சைக்கிளில் ஏறி போய்விட்டார். அந்த கவரில் கமலாவின் PFபணம் மற்றும்  இன்ஸ்யூரன்ஸ் போன்ற யாவையும் தன் கூட பிறந்தவர்களுக்கே சேரவேண்டும் என்ற லெட்டருடன் மூன்று வருடங்கள் முன்பே கொடுத்து வைத்திருந்ததை படித்து பார்த்ததும் , அந்த கூடபிறந்தவர்களின் கன்னத்தில் பளீரென்று  அறைந்தால் போல் ஒரு  உணர்வு  ஏற்பட்டது என்பது அவர்களுக்கு மட்டுமே தெரியும்..ஆனாலும் வந்திருக்கும் பணத்தில் யாருக்கு எத்தனை கிடைக்கும் என்பதில் கணக்குப்போட ஆரம்பித்து விட்டார்கள். உண்மையிலேயே வாழ்வின் ரகசியம், பணம் சேர்ப்பதுமட்டுமில்லாமல், அதை பங்கிட்டு வாங்கிக்கொள்ளவும் துடிப்பாகவும் இருப்பார்கள் , விஷயம் தெரிந்தவர்கள்.