சில கபட மனதுடைய ஆட்கள் நம்மிடையே இருந்து வருகிறார்கள். நேரில் பார்க்கும்போது ஒரு மாதிரி பேச்சு, பார்க்காத சமயத்தில் நம்மைப்பற்றி பேசுவதை கேட்டால் இந்த ஆயுள் உள்ள மட்டும் எவர் நம்மைப்பற்றி தவறான பேச்சுக்களை மொழிந்தார்களோ , அவர்களை மறுபடி சந்திக்கவே கூடாதென தோன்ற ஆரம்பிக்கும். ஆனால், நம் வாழ்க்கையில் ஒரு விசேஷமான செயல் என்னவென்றால், எதை நாம் பார்க்க ஆசைப்படுவோமோ அதை தவிர மற்றவைகளையே காண்பிக்கும். வேறு வழியேயில்லாமல் நாமும் காலத்திற்கேற்றாற்போல் அசட்டு சிரிப்புடனேயே ஒத்துக்கொண்டு விட்டது மாதிரியும் வாழ்கிறோம். எவரை சந்திப்பதை தவிர்க்க விரும்புகிறோமோ அவர்களையே அடிக்கடி சந்திக்கும்படியாக அமைகிறது. எவரையாவது சந்திக்க விரும்பினோமானால் சந்திக்க முடியாமலே போய்விடுகிறது. இப்படி ஏகப்பட்ட தடங்கல்களையும் மீறிக்கொண்டு வாழ்ந்து வரும்போது, குடும்பங்களில் சோகங்கள் நடந்துவிட்டால், மனம் தளர்ந்து தொய்ந்து நின்று விடுகிறது.
வாழ்க்கை என்பது யாருக்குமே, இப்படித்தான் அமையும் என சொல்லமுடியாது. அப்போதும் உடைந்த மனதை ஒன்று சேர்த்து கூடி வாழ்ந்துதான் ஆகவேண்டியதாகிறது. குடும்ப யுத்தகளத்தில் நின்றிருக்கும் சமயங்களில் எதிரில் நிற்பது நம் மகனாகவும், மகளாகவும் கூட இருக்கலாம் . ஆனால் நம்க்கு எதிரியாகி விட்டால் நம் கண்ணுக்கு, மகனோ, மகளோ தெரியாமல் போய்விடும், எதிரியாகவே தோற்றமளிப்பார்கள் . அவர்களை காண நேரும்போது நம் மனம் குதூகலிக்காமல், கொந்தளிக்கும் என்பதே நிச்சயம். ஆனால் மனித மனதிற்கு அபார சக்தியுண்டு. எதை கொண்டாட நினைப்போமோ , அதை கொண்டாடவிடாது , எதை தவிர்க்க நினைக்கிறோமோ அதை தவிர்க்காமல் அதையே நினைக்க வைக்கும், சக்தியுள்ளது. ஆனால் அதே மனம் காலப்போக்கில் எல்லாவற்றையுமே நம்மிடமிருந்து பறித்தெறிந்து விட்டு நடைபிணமாகவும் செய்து விடுகிறது.
இப்படியாக இந்த வாழ்க்கையை எதையுமே தவிர்க்கத்தெரியாமல், வாழ்ந்து கொண்டும் இருக்கிறோம்.
Leave A Comment