முதல் கல்யாணத்தில் பட்ட அடியை மறப்பதற்குள், பெண் பிள்ளைகள் மறுபடி  காதல் வந்துவிட்டது என மிக பெருமிதமான நினைவுடன் , உற்சாகமாக நல்ல, நல்ல கனவுகளிலேயே மிதந்துகொண்டு, எங்கு போனாலும் , எதைசெய்தாலும் என்னிடம் கூறாமல் எதையுமே எண்ணக்கூட மாட்டார். எந்த செலவுகளையும்  என்னிடம் கேட்காமல் செய்யவே மாட்டார், என்றெல்லாம் பேசிய நாட்கள் நகர, நகரவே மனிதர்களின் மனவேறுபாடுகள் அதிகமாகவே தெரிகிறது.

இப்போதுதான் எல்லோருடைய கைகளிலும் உலகமே உள்ளது. மோபைல் போன் என்பது  பெற்றவர்களை விட உயர்ந்தவைகளாக  உள்ளது. ஆனால் அது நம்மை திட்டாது, ஆனால் அந்த போன் நிச்சயமாக  நம்மைக்காட்டிக்கொடுத்துவிடும். யார் எங்கு  போனாலும் டிராக் செய்து எங்கிருக்கிறார்கள் என தெரிந்தும் கொள்ளலாம். ஆகையால் நூற்றுக்கு நூறு,   உண்மையாக இருந்தாலும் , நடத்தைகளையும் உடனடியாக கண்டுகொண்டு விடலாம் என்ற உலகத்தில் வாழ்ந்து வருகிறோம். ஆகையால், ஒருவருக்கொருவர் பரஸ்பர நம்பிக்கையில்லாமல், வெறும் உதட்டளவில் பேசுவதையே பேசியும் , கேட்டும் மயங்குகிறாற் போல் நடித்து,  தோல்வியை தழுவுகிறார்கள். கல்யாணமோ, கருமாதியோ எதற்கும் மனதார மகிழ்ச்சியுமில்லை, துக்கமும் கிடையவே கிடையாது. அவரவர் வேலைகள் சுமுகமாக நடந்து வரும் வரைதான் வாயை மூடிக்கொண்டு இருக்கிறார்கள்.  துளிஏற்றத்தாழ்வுகள் வந்துவிட்டாலும்,  பொறுத்து, வாழ மாட்டார்கள். நம்பிக்கைகளை உடைத்தெறிந்து விடுவது போல் மனிதர்கள் நடக்கும் சமயங்களில், இன்றைய போன் ஒரு வரப்பிரசாதம்தான். ஆனால் தப்பு தண்டாக்கள், எல்லாகாலங்களிலுமே எல்லாவிதமான  தவறுகளும் நடந்து கொண்டுதான்  இருந்திருக்கின்றன. இப்போது  எல்லாவற்றையும் கண்டுபிடிக்க ஆயுதம் வந்து விட்டது. நிவர்த்தி செய்து கொண்டு வாழும் மனிதர்களேதான்  பிறக்கவேண்டும்.

அந்தக்காலத்தில்,  ஆண்மகன் வீட்டுக்குள்ளே வரும்போது, அதிர்ந்து வரவேண்டும் என பெரியவர்களே சொல்லிக்கொடுப்பார்கள். அந்தநாட்களில் பிள்ளகளை பெற்றுவிட்டால், யாவருமே கட்டபொம்மனைப் பெற்றுவைத்திருப்பதை போல நினைத்து மகிழ்வார்கள். ஆனால் இன்றைக்கோ இடித்த புளி மாதிரி இருப்பவன்தான் பிழைப்பான் , மற்றவர்கள் கோவிந்தா கூட்டத்தில்தான் சேரவேண்டும். இப்போது பெண்கள் பாண்ட்,ஷர்ட் அணிந்து  மகிழ்கிறார்கள். ஆகையால் ஆண்மைத்தனம் வந்து விட்டது போல் ஒரு உணர்வும்  ஏற்படுகிறது, போலிருக்கிறது. ஆனால்   கண்ணகியாக எவரும் பிறக்கவில்லை.

ஆபீஸில் வேலை எனக்கூறி வீட்டிலிருந்து வெளியில் போய் வருபவர்கள், எதற்குமே துணிந்தும்  வருகிறார்கள். சிஐடி வைத்துக்கொண்டா கண்காணிக்க முடியும்? அவரவர்களுக்கு  மனசாட்சியில்லையெனில் நாசமாகவே போகட்டும் என மனதார சபித்துவிட்டு, நாம் போகும் வழிக்கு புண்ணியம்தேட ராம நாமாக்களை, ஜபித்தும் ஆம், ஆம், என கூறிக்கொண்டும்  காலத்தை ஓட்ட கற்றுக்கொள்ள வேண்டியதாகிறது. வீடு அலுத்து விடுகிறது. எதைக்காண்பித்தாலும்  ஒரே பார்வையிலிலேயே எல்லாம் புரிந்துகொண்டாற் போல் பேசுவார்கள். தெரிந்து, அறிந்து கொண்டவைகள் சூன்யமாகத்தான் இருக்கும்.  புராண காலங்களில், பெண்மணிகளுக்கு எதுவுமே தெரிவிக்காதபடி, ஆண்கள் ராஜ்ய பரிபாலனம் செய்து கொண்டிருந்தார்கள்.

ஆனால் இப்போதோ ஆண்களின் வால்களை ஒட்ட நறுக்கி உட்காரவைத்து விட்டதால் அங்குமிங்கும் முண்டக்கூடமுடியாதவாறு உட்கார்ந்திருக்கிறார்கள். முன்காலத்தில் ‘சிறுக கட்டி பெருக வாழவேண்டும் ‘என ஆசீர்வதிப்பார்கள். இப்போதோ  யாவருமே ‘பெருக கட்டி சிறுமையாக  வாழ்வதற்கு தயாராக உள்ளார்கள். அவரவர்களுக்கு தலைக்குமேல் கடன் உள்ளது . எதை வேண்டுமானாலும் கடனில்  வாங்கி விடுகிறார்கள். அந்தநாட்களில் கடன் கேட்பது என்பதை அவமானமாக நினைப்போம், இன்றைக்கு எத்தனை கடன் வாங்கமுடியுமோ, அத்தனை  பிளாஸ்டிக் கார்டுகளை சேகரித்து வைத்துக்கொண்டு வாங்கிவிடுகிறார்கள். மேலும்  அத்தனை பெருமிதமாகவும் பேசிக்கொள்கிறார்கள். காலம் மாறிவருகிறதோ இல்லையோ, காட்சிகள் சத்தியமாக மாறிவருகின்றன.