நம்மிடையே துர்குணம் படைத்தவர்கள் ஏராளமாக இருந்து வருகிறார்கள். அவர்களுக்கு எதிலும் குற்றம் குறைகள் கண்டுபிடித்துக்கொண்டேயிருந்தால்தான் மனதிருப்தியடைவார்கள். தன் குடும்பத்திலேயே அண்ணன், தம்பி என்று இரண்டு பேர்கள் சேர்ந்து உட்கார்ந்து சாப்பிட்டால் கூட பிடிக்காது, சிரித்து பேசினால் பிடிப்பதில்லை . குற்றம் கண்டுபிடித்து குறைகள் கூறிக்கொண்டேயிருப்பார்கள். இவர்களை திருப்தியடைய வைப்பது எப்படி? அவர்களை பற்றியே பேசவேண்டும். அவர்களை பற்றி உயர்வாக பேச எதுவுமேயில்லாவிட்டலும், அவர்களிடம் உயர்வான குணங்கள் இல்லாதிருப்பினும் சரி, அவர்களை குணவான்களாக உயர்த்திவைத்து பேசியாக வேண்டும். சுயசுபாவம் தெரியாதவர்களுக்கு, அவர்களைப்பற்றி உண்மையில்லாதவைகளை கூறினாலும், தன்னைப்பற்றி நல்லவிதமான வார்த்தைகளை கேட்பார்களானால், உண்மையே என நம்புவார்கள். சில மனிதர்களுக்கு இவைகளை கேட்டுவிட்டு மனமாற்றங்கள் ஆகின்றன. ஆனால் கெட்ட எண்ணங்கள் , துர் நடத்தையுள்ளவர்களிடம் மாற்றங்கள் ஏற்படாது. அவர்கள் தங்கள் வழியிலிருந்து விலகவே மாட்டார்கள். எங்கிருந்தாலும் தங்கள் கைவரிசைகளை அவசியம் காண்பித்தே தீருவார்கள். சங்கோசம் என்பதேயிருக்காது. அங்கங்கே தங்கள் கைவேலையை காண்பித்துக்கொண்டேயிருப்பார்கள்.
எல்லோரும் உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தால் தான் மிகவும் களைப்புற்று இருப்பதாக கூறி, ருத்ராட்ச பூனைமாதிரி தூங்குவது போல் பாசாங்கு செய்து நடிப்பார்கள். அவர்கள் முகங்களில் எப்போதும் ஒரு தந்திர சிரிப்பு தவழ்ந்து கொண்டிருக்கும் . தனக்கு எதுவுமே தெரியாது போல் நடிப்பார்கள். உலகத்தில் பல மனிதர்கள் பல வித நோக்கத்துடன்தான் வாழ்ந்து வருகிறார்கள் . எவரையும் குற்றங்கள் கூறி திருத்த முடியாது. ரோஜாவுக்கு முள்ளும், மல்லிகைக்கு மணமும் மனிதனால் கொடுக்கமுடியுமா ? யாவரையும் ஆண்டவன் ஏதோ ஒரு நோக்கத்திற்காகவே படைத்துள்ளார் .அதன் முறைபடியேதான் நாம் எல்லோருமே இயங்குவோம்.
Leave A Comment